Snapjudge

Pillai Thamizh: 10 Stages of a Tamil Boy & Girl Kids

In Life, Lists, Literature on பிப்ரவரி 10, 2009 at 6:52 பிப

பிள்ளைக் கவி:

‘பில்லைத் தமில் பாடவந்தேன்; ஒரு பில்லைக்காகப் பாட வந்தேன்,’ என்று ஜேசுதாஸ் பாடுவாரே அதே அதுதான் இது. பிள்ளைத் தமிழ் என்றும், பிள்ளைக் கவி என்றும் சொல்வார்கள். ஒரு குழந்தை பிறந்தது முதல், வளர வளர ஒவ்வொரு நிலையிலும் செய்யும் காரியங்களையும், விளையாட்டுகளையும் சொல்வது. மொத்தம் பத்துப் பருவங்களைச் சொல்வது வழக்கம்.

ஆண் குழந்தையாய் இருந்தால்:

1. காப்பு. (எப்பவும் முதலில் ‘காப்பு’ சொல்லிட்டுதான் தொடங்கணும்.)

2. செங்கீரை. செங்கீரை என்பது ஒரு வகைக் கீரை. பிறந்த ஐந்து மாதத்தில் குழுந்தைக்குக் கழுத்து நிற்கும். மெல்ல, கீரையைப் போலத் தலையை எடுத்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைக்கும்; பார்க்கும். அப்படிப் பார்ப்பதை வருணித்துப் பாடுவார்கள். அப்படியில்லாமல், பெருமைகளை அடுக்கி, ‘இப்படிப்பட்டவனே, செங்கீரை ஆடுகவே,’ என்றும் சொல்வார்கள்.

பெரியாழ்வாருடைய முதல் திருமொழி ஓர் எடுத்துக்காட்டு. கழுத்தைப் பக்கத்துக்குப் பக்கம் திருப்பித் திருப்பிப் பார்ப்பது என்பதைத்தான் செங்கீரை ஆடுதல் என்று சொல்கிறார்கள். அழகா கீரைக் குருத்து போல ஆடுவது.

3. தால். தால் என்றால் நாக்கு. தாலை ஆட்டி ஒள ஒள ஒள ஒள ஒள ஒள ஆயி என்றெல்லாம் சப்தம் எழுப்பிப் பாடுவது தாலாட்டு. குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.

4. சப்பாணி. சப்பாணி என்றால் ‘கைகளைக் கொட்டுவது’ என்று பொருள். பாணி என்றாலே கை என்பதுதான் பொருள். சக்கரபாணி என்றால் சக்கரக் கையன்.

தண்டபாணி என்றால், தண்டாயுதம் தரித்த கையன். (சப்பாணி என்றால் ‘கால்விளங்காதவன்’ என்று பொருள் வருமாறு சொல்லக் காரணம், ‘சப்பாணி மாடன்,’ என்றொரு பேய் வகையின் பெயர் அது. நொண்டிப் பேய். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை.) கொஞ்சம் வளர்ந்து எழுந்து உட்காரும் குழந்தை, கைகளைக் கொட்டும். அந்தப் பருவத்தைப் பாடுவது சப்பாணிப் பருவம்.

5. முத்தம்: குழந்தையை முத்தம் தரச் சொல்லிக் கேட்பது.

6. வாரானை: எழுந்து நடக்கத் தொடங்குகிறது குழந்தை. ‘வாவாவா வாவாவாவா,’ என்று ஒவ்வொரு அம்மாவும் தன்னை நோக்கி வரும்படியாகத் தன் குழந்தையைக் கை நீட்டிக் கூப்பிடுவாள் இல்லையா, அந்தப் பருவம் இது.

7. அம்புலி: நிலாவைக் காட்டிச் சோறூட்டுதல்.

8. சிறுபறை: கையில் சின்னதாக ஒரு மேளத்தையும், இன்னொரு கைக்கு ஒரு குச்சியையும் (குணில் என்று சொல்வார்கள்) கொடுத்துவிட்டால், அதுபாட்டுக்கு கொட்டிக்கொண்டு விளையாடும்.

சப்பாணி கொட்டுவது, சிறுபறை கொட்டுவது எல்லாமே, சின்னக் கைகளுக்குத் தரப்படும் பயிற்சிகள்தாம். மெல்ல வலுவடைய.

9. சிற்றில்: கொஞ்சம் வளர்ந்த குழந்தை மணலால் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்வது.

10. சிறுதேர்: எந்தக் குழந்தைக்கும் வண்டி உருட்டப் பிடிக்கும். (சைக்கிள் சக்கரத்தையாவது உருட்டும் என் காலத்துக் குழந்தைகள். இப்போ எலக்ட்ரானிக் ரகம்.) சின்னதாக ஒரு தேர் பண்ணிக் கொடுத்துவிட்டால் அதை இங்கேயும், அங்கேயும் இழுத்துக் கொண்டு நடை பழகும். அந்தப் பருவம் இது.

பெண் குழந்தைகள் என்றால் கடைசி மூன்றுக்குப் பதிலாக
8. கழங்கு ஆடுதல்,
9. அம்மானை ஆடுதல்,
10. ஊஞ்சல் ஆடுதல்
என்று வரும்.

சிற்றில் பருவம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு.

இந்தப் பத்துதான் என்றில்லை. அச்சோப் பருவம், காக்கையை அழைக்கும் பருவம் என்றெல்லாம் பெரியாழ்வாரைப் போல் விரித்துக் கொள்ளலாம். மேலே சொல்லியிருக்கும் பத்தும் ஒரு guide line மாதிரி. இதற்கு அடுத்தது இது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் கிடையாது. காப்பில் தொடங்க வேண்டும். அம்புட்டே. பொருத்தமாக எதையும் விரித்தோ, மாற்றியோ பண்ணிக் கொள்ளலாம்.

இப்போ, நம்ம காலத்துக் குழந்தைக்கு என்னென்ன பத்துப் பருவங்களைச் சொல்லலாம்? டயாபர் பருவம், பெராம்புலேட்டர் பருவம்….. என்று தொடங்கி, கம்ப்யூட்டர் கேம்ஸ் பருவம் என்று முடிக்கலாம். 🙂

நன்றி: marabilakkiyam : Message: sitrilakkiyangaL 1-3 (was) [Marabilakkiyam] Re: pirabandham

  1. Hi friends so jops iruntha, sollungka pls

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.