Snapjudge

பத்ரி சேஷாத்ரி கைது: கருத்துரிமை காப்போம்

In Events, Life on ஓகஸ்ட் 1, 2023 at 11:10 பிப

பத்ரி கைது குறித்த பேக்கர்ஸ் டஜன்:

1. பெருமாள்முருகன்

பத்ரி சேஷாத்ரி கைது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். நான் உட்பட எண்மர் இணைந்து அனுப்பியுள்ளோம்.

கருத்துரிமை காப்போம்.

2. அரவிந்தன் கன்னையன்

தர்மராஜ்-பத்ரி சேஷாத்திரி

தர்மராஜ்-பத்ரி சர்ச்சையில் தர்மராஜின் பதிவு மீது இரண்டு காரணங்களுக்காக எனக்கு விமர்சனமுண்டு.

//ஏனெனில், இந்த தேசத்தில் பிராமணர்களின் கருத்துச் சுதந்திரத்தை எந்தக் கொம்பனாலும் பறித்து விட முடியாது என்பதே வரலாறு. அவர்கள் என்றைக்குமே கருத்தை வெளிப்படுத்துவதோடு நின்று விடுவதில்லை, அதைத் திணிக்கவே முயற்சி செய்வார்கள். // இது அப்பட்டமான இன துவேஷமும் பொதுமைப்படுத்துதலும். பேராசிரியர் தன் பழைய டைம்லைனில் 2020-இல் தர்மராஜின் இன்னொரு சர்ச்சையின் (அப்போது அவர் திராவிட இயக்கம் அறிவு விரோதமானது என்று சொன்ன சர்ச்சை. இப்போது அந்நிலைப்பாடு மாறியிருக்கலாம்) போது வாசுகி பாஸ்கர் எழுதிய “தன் நிலை மறந்த பார்ப்பன அறிவு மோகம்” என்ற பதிவினை பகிர்ந்திருப்பதை பார்த்திருக்கலாம். பாஸ்கர் பதிவின் மையக் கருத்து திராவிட இயக்க ஆதரவாளர்களான அ.இரா.வேங்கடாசலபதி, ஆர். முத்துகுமார் போன்றவர்கள் பிராமணர்கள் நடத்தும் பதிப்பகங்களில் புத்தகம் வெளியிடுவது என்றும் சர்ச்சையாவதில்லை மாறாக தலித்துகள் மட்டும் அவர்களின் பதிப்பாளர்களின் அரசியலுக்கு சாதிக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிராமணர்கள் கருத்து திணிப்பில் ஈடுபடுகிறார்கள் என்று தர்மராஜ் சொல்லும் போது என்னமோ இது பிராமணர்களுக்கே உரித்தான தனிப்பெரும் நோய் போல் சொல்கிறார். எல்லாத் தரப்பினரும் அவரவர் கை அதிகார பீடத்தில் ஓங்கும் போது தவறாது செய்வது தான் கருத்து திணிப்பு. இது இந்தியாவில், தமிழகம் உட்பட, உள்ளங்கை நெல்லிக்கனி. இடது சாரிகள், காந்தியவாதிகள், அம்பேத்கரிஸ்டுகள் முதல் திராவிட இயக்கத்தினர் வரை கருத்து திணிப்பு செய்யாத தரப்பு ஒன்றையாவது சுட்டிக் காட்டுங்களேன்? மத சிறுபான்மையினரும் அவர்கள் கை ஓங்கும் இடங்களில் கருத்து திணிப்புச் செய்திருக்கிறார்கள். இது தான் இந்தியாவின் நிலை, பொதுவில் மானுட இயல்பும் கூட.

மேலே சொன்ன 2020 சர்ச்சையின் போது தர்மராஜ் ராஜன் குறை கிருஷ்ணன் பழ.அதியமானின் “வைக்கம் போராட்டம்” நூலுக்கு ஆய்வுறை எழுத வேண்டுமென கோரிக்கை விடுத்தாராம் (ராஜனின் பதிவில் அப்படி வருகிறது). அதற்கு ராஜன் குறை எழுதிய பதிவில் இவ்வாறு சொல்கிறார், “பெரியாரின் பிம்பம் ஒரு வலையாக மாறிவிட்டதாக எண்ணி கவலைகொள்ளும் தர்மராஜ் இந்த பணியை மேற்கொண்டு, அதியமானின் ஆய்வை, ஜெயமோகனின் வார்த்தைகளில் “கழைக்கூத்து” “நேர்மையற்ற” ஆய்வை விரிவாக விமர்சிக்க வேண்டும். ஒரு ஆய்வு நூலைக் குறித்து விமர்சிப்பதற்கு பதிலாக அவதூறு பேசும் ஜெயமோகனை அன்பால் அரவணைத்து விவாதிக்கும் தேவை தர்மராஜிற்கு இருக்கலாம். எனக்கு இல்லை என்பதால் இப்போதைக்கு கண்டனங்கள் மட்டுமே.” அப்போதைய சர்ச்சையின் நீள அகலத்துக்குள் செல்ல விருப்பமில்லை. ஆனால் மூன்றே வருடம் முன் தெரியாத பிராமண கருத்து திணிப்பு இன்று திடீரென்று பேராசிரியருக்கு தோன்றி இருக்கிறது.

பத்ரியும் அவர் நண்பர்களும் நடத்தும் தமிழ் பாரம்பர்யம் குறித்த ஆய்வுகளில் பன்முகத்தன்மை சுத்தமாக இல்லாதது குறித்து அவரிடமே நேரிடையாக வாதிட்டிருக்கிறேன். ஆனால் அதே சமயம் இம்மாதிரி தட்டையான ஒருமுகத் தன்மை அவர்கள் நிறுவனத்துக்கு மட்டுமோ அவர்கள் பிறக்க நேர்ந்து விட்ட சாதிக்கு மட்டுமோ உரித்தானது என்ற எண்ணம் இன்று வரை எனக்கில்லை.

தமிழகத்தில் இரண்டு பதிப்பகங்களின் நிறுவனர்கள் பிறப்பால் பிராமணர்கள். இரண்டு பதிப்பகங்களிலும் அநேக நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் திராவிட இயக்க ஆதரவு நூல்கள் (உண்மையில் இதில் கிழக்கு அநேகமாக முதல் பரிசு வெல்லும்), தலித்திய வரலாற்று நூல்கள் அநேகம் வெளிவந்திருக்கின்றன. கருத்துத் திணிப்புச் செய்வதென்றால் இவர்களெல்லாம் ‘விஜயபாரதம்’ வெளியிட்டிருக்க வேண்டும். ஔரங்கஸீப் பற்றி அமெரிக்க ஆசிரியர் ஆட்ரி டிருஷ்கியின் நூலை வெளியிட்டு கிழக்கு என்ன இழந்ததென்று எனக்குத் தெரியும். இங்கே பிராமணர்களின் கருத்து திணிப்பு பற்றி பேசுவோர் ஒவ்வொரு பதிப்பகத்தாரின் அரசியல் குறித்தும் பேசத் தயாரா?

//இந்தியா போன்ற ‘அநாகரீக சாதிய நாட்டில்’ இத்தகையக் கைதுகளை தற்பெருமைகளாக மாற்றிக் கொள்ளப் பிராமணர்களுக்குத் தெரியும்.// இது அவர்களுக்கு மட்டுமா? திராவிட அரசியல் பற்றி ஆரம்ப அறிவு இருப்பவர்களுக்குக் கூட இது இங்கே வழக்கம் என்பது தெரியாதா? வரலாறு அறியாதவரா பேராசிரியர்?

பத்ரி பற்றி தர்மராஜுக்கு முன்பே தெரியாதா என்று ஒரு பதிவில் வினவி இருந்தேன் அதற்கு அவர் பத்ரி, என்னைப் போலல்லாது, தற்போது தான் பிராமணராக வெளிப்பட்டிருக்கிறார் என்றார் தர்மராஜ். (நான் ஏதோ என்னை வெளிப்படுத்திக் கொண்டதாகவும் சொல்கிறார். எனக்கு கிடைத்திருக்கும் பட்டங்கள் பல, அது அவரவர் அன்றாட கொண்ட மனச் சாய்வுகளையே பிரதிபலிக்கும். ஒரே ஆள் பிராமண அடிவருடி, சங்கி, கிறிஸ்தவன், பிராமண துவேஷி என்றெல்லாம் வாங்குவது எப்படி சாத்தியம்? இணையத்தில் முடியும்). பத்ரி நிச்சயம் கடந்த இரண்டு வருடங்களில் அதீத இந்துத்துவராக மாறி இருக்கிறார், மொழியிலும் கருத்துகளிலும் கடுமை எக்கச்சக்கம். ஆனால் பத்ரி எதோ இப்போது தான் பிராமணராக வெளிப்பட்டிருக்கிறார் என்பது ஆச்சர்யம்.

அடுத்ததாக காந்தி.

//காந்தியையே மகாத்மாவாக நம் தலையில் கட்டியவர்கள் அவர்கள்// நவீன இந்தியாவின் முதன்மையான அடையாளம் காந்தி. இது வரலாற்று உண்மை. இப்படிச் சொல்வதால் “அம்பேத்கர் இல்லையா, படேல் இல்லையா”, “ஏன் நேரு இல்லையா” என்று கேட்பவர்கள் இருப்பார்கள். நிச்சயமாக இக்கூற்று இன்று அம்பேத்கரிஸ்டுகளால் மறுக்கப்படும். அதனை விவாதிக்கலாம், மறுக்கலாம். அதெல்லாம் வேறு விஷயம். ஆனால் இங்கே பேராசிரியர் ஏதோ பிராமண சமூகம் காந்தியை கட்டமைத்து இந்தியர்கள் தலை மீது கட்டிவிட்டதென்கிறார். காந்தியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாத, காந்தியின் மீது விமர்சனமும் கொண்ட, தலித் வரலாற்றாசிரியர்களே ஒடுக்கப்பட்டவர்களுக்கான காந்தியப் பேரியக்கத்தின் பங்களிப்புகள் குறித்து எழுதி இருக்கிறார்கள். காந்தியின் வழி வந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் தலித்துகள் செயல்பட்ட சுதந்திரத்தையும் திராவிட இயக்கத்தில் அச்சுதந்ததிரம் இல்லாதிருந்ததையும் கூட பதிவுச் செய்திருக்கிறார்கள். ஒரு குறுங்குழுவின் பிம்ப கட்டமைப்பு மட்டுமா ஒரு பேராளுமையை வரலாற்றில் நிறுத்த முடியும்?

இன்று பத்ரி சேஷாத்திரியையும் பிராமணர்களையும் வசைப் பாடியதால் மட்டுமே தர்மராஜின் பதிவு பிரபலமாகியிருக்கிறது. இது வரை அவர் கட்டுரைகள் இந்தளவு பிரபலமாகி பார்த்ததில்லை.

இந்த பயணத்தின் போது ஜெயகாந்தனின் “ஜய ஜய சங்கர” வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பல வருடங்கள் என்னிடம் ஒரு தொகுப்பில் இருந்த நாவல் தான் ஆனால் இப்போது தனிப் பிரதி கிடைத்தது. இன்று அந்நாவல் வெளியாகி இருந்தால் அடடா என்னென்ன கூத்துகள் அரங்கேறி இருக்கும் என்று நினைத்தாலே சுவாரசியம்.

சுட்டிகள்:

ராஜன் குறை பதிவு

வாசுகி பாஸ்கர் பதிவு

3. கார்த்திக் வேலு

சந்திரமுகி

மணிப்பூர் குறித்த பத்ரி அளித்த பேட்டியின் துணுக்கு ஒன்று பேஸ்புக்கில் காணக்கிடைக்கிறது.கேட்க தடலாடியாக இருந்தது. சரி முழு பேட்டியையும் பார்க்காமல் நாம் ஒரு கருத்தை சொல்லக்கூடாது என்று முழு பேட்டியையும் பார்த்தேன்.

பேட்டி ஆரம்பித்து மணிப்பூர் விவகாரத்தின் பின்னணி குறித்து பேசும்போதெல்லாம் சரியாகத்தான் பேசுகிறார் . சில பொதுமைப்படுத்தல்களும் விடுபடல்கள் இருந்தாலும் அது அளிக்கும் சித்திரம் ஒட்டுமொத்தமாக சரியாகவே இருப்பதால் அவைகளை பெரிதுபடுத்தாமல் கடந்து போய்விடலாம் .

ஆனால் பத்ரியின் முதல் சறுக்கல் மெய்ட்டிகள் எப்படி இந்து மதத்துக்கு மாற்றப்பட்டார்கள் என்று ஒரு வரிகூட சொல்லாமல் போனதில் ஆரம்பிக்கிறது . வங்காள பிராமணர்களிடையே பழக்கத்தில் இருந்த கெளடிய வைஷ்ணவம் எப்படி பதினெட்டாம், நூற்றாண்டில் மணிப்பூரின் அரசு மதமாக மாறியது என்ற சித்திரத்தை கவனமாக தவிர்க்கிறார் . Understandably so .

இன்றைய மணிப்பூர் சிக்கல் அடிப்படையில் இனக்குழுக்களுக்கான பிரச்சனை என்றாலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இந்துக்களாக ‘மதம் மாற்றப்பட்ட’ மெயிட்டிகளுக்கும் சமகால இந்தியாவில் எழுச்சி கொண்ட இந்து பெரும்பான்மைவாதமும் ஒன்றை ஒன்றும் தொட்டுக்கொள்ளும் புள்ளி தான் சமீபத்திய பூசலின் மைய ஊற்று என்று கருதுகிறேன் .

பிரச்சனையின் முக்கிய தூண்டுகோலான மெயிட்டிகளுக்கு ST அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மணிப்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏதோ எதேச்சையாக நிகழ்ந்த ஒன்றல்ல . இந்த தீர்ப்பு செல்லாது , நீதிமன்றங்களுக்கு ஒரு குழுவை ST பிரிவின் கீழ் அனுமதிக்கும் படி தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இல்லை . இதை உச்சநீதி மன்றம் முன்னரே மிகத்தெளிவாக வரையரை செய்துள்ளது.

இதை தாண்டி இதை மாநில அரசு கையாண்டது சரியா , மணிப்பூர் அரசு பதிவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விகள் எல்லாம் வரும்போது முழு சந்திரமுகியாகவே மாறிவிடுகிறார் . திருமா , அம்பேத்கரியர்கள் , திராவிட ஸ்டாக் என்று அனைவரையும் சரமாரிரயாக விளாசுகிறார் .

PAK தேர்ந்த அணுகுமுறையை இவரும் பின்பற்றுகிறார் . ஒரு தரப்பில் இருக்கும் மிக வலுவற்ற வாதங்களை எடுத்துக்கொண்டு தனது தரப்பை நியாயப்படுத்திக்கொள்கிறார் . மணிப்பூர் விவகாரத்தை மத்திய மாநில அரசு சரியாக கையாண்டதா இல்லையா என்பதை பேச அது குறித்து தமிழ்நாட்டில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா ? Typical straw man argument approach .

தமிழ்நாட்டில் கொலைகளே நடக்கவில்லையா உடவே அரசை கலைத்துவிட்டோமா, பின் மணிப்பூர் அரசை ஏன் கலைக்க வேண்டும் என்ற சப்பைக்கட்டுகள் மூலம் புதிய ஆழங்களுக்கு சறுக்குகிறார் . மணிப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து , மாநிலமே இரண்டாக பிளந்து நிற்கும் சூழலும் தமிழகமும் ஒன்றா ?

பின் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது எதற்கு அரசை கலைக்க வேண்டும் என்கிறார் . மணிப்பூர் விஷயத்தை ஏன் பிரதமரே பேச வேண்டும் அவருக்கு வேறு வேலை இல்லையா? – என்றெல்லாம் முட்டு கொடுக்கும் போது அக்மார்க முரட்டு சங்கியாகவே அவதாரம் கொண்டுவிடுகிறார் . (47:00 mins )

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தை விமர்சிக்கிறார் .அது சரிதான்.இந்த தீர்ப்பை அளித்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சென்னை உயர்நீதி இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு தலைமை நீதிபதியாக சில மாதங்களுக்கு முன்புதான் பதவி உயர்வு பெற்றவர் .இந்த மாற்றலை பரிந்துரைத்தவர் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் , தற்போதைய பாஜக எம்பியுமான ரஞ்சன் கொகோய் .

.இந்த வழக்கு எப்படி எதிர்பாராத வேகத்துடன் தீர்ப்பை நோக்கி நகர்ந்தது , இந்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் அனுமதிக்காது என்று தெரிந்தே ஏன் இப்படி ஒரு தீர்ப்பு வெளியிடப்பட்டது என்பது குறித்து சிந்தித்து பார்த்தால் இந்த வழக்கில் மாநில அரசின் பங்கு என்ன என்பது புரியும். ஒரு உயர்நீதி மன்ற நீதிபதிக்கு , அந்த மாநிலத்தின் முதலமைச்சர்களுக்கு , வழக்குரைஞர்களுக்கு – யாருக்குமே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உயர்நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கும் என்று பத்ரி நம்புகிறாரா ??

அதே போல உச்சநீதி மன்றம் நாங்கள் தலையிடுவோம் என்று எச்சரித்ததையும் கிண்டல் செய்கிறார் . உச்சநீதி மன்றம் அரசியலமைப்புச் சட்டம் 142 ஆம் பிரிவின் படி அயோத்தி தீர்ப்பில் சுதந்திரம் எடுத்துகொண்டதை எல்லாம் வசதியாக மறந்திருப்பார் என்று நினைக்கிறேன் . உச்சநீதி மன்றம் இந்த அதிகாரத்தை வெகு அரிதாகவே பயன்படுத்தினாலும் அவர்களுக்கு தலையிட அதிகாரம் உண்டு என்பதே நிதர்சனம் .

விஷயம் தெரியாத ஒருவர் உளறுவது வேறு ஆனால் விஷயம் தெரிந்தவர் உளறுவதை காண்பது வேதனையளிப்பது. பத்ரி போன்ற ஆராய்ந்து அறியும் திறன் கொண்ட ஒருவர் பாஜக வை ஆதரிக்கும் பொருட்டு ஒரு “வாட்ஸப் அங்கிள்” ரேஞ்சுக்கு போய்விடுவதை பார்க்க உண்மையாகவே ஏமாற்றமாக இருக்கிறது.

4. தர்மராஜ் தம்புராஜ்

பத்ரி சேஷாத்திரி கைதுக்கு வாழ்த்துகள். அவர் ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநராக உயர்ந்து வாழ்வில் சிறப்பார் என்பது என் கணிப்பு. என் ஒரே ஒரு வருத்தமெல்லாம், ‘கிழக்கோடு என் உறவை முறித்துக் கொள்கிறேன்’ நான் என்று அறிவித்த இரண்டாவது நாளில் இது நடந்திருக்க வேண்டாம் என்பது தான்.

மற்றபடி இந்த விவகாரத்தில் ‘கருத்துச் சுதந்திரப் பறிப்பு’ என்று சொல்லப்படும் எல்லாவற்றையும் நான் குப்பையில் தூக்கிப் போடுவேன். ஏனெனில், இந்த தேசத்தில் பிராமணர்களின் கருத்துச் சுதந்திரத்தை எந்தக் கொம்பனாலும் பறித்து விட முடியாது என்பதே வரலாறு. அவர்கள் என்றைக்குமே கருத்தை வெளிப்படுத்துவதோடு நின்று விடுவதில்லை, அதைத் திணிக்கவே முயற்சி செய்வார்கள். பத்ரியின் ‘மணிப்பூர் இந்துத்துவ வெறியாட்ட’ ஆதரவுப் பேச்சையும் கவனித்துப் பார்த்தால் தெரியும், அது சாதுர்யமான கருத்துத் திணிப்பு!

பிராமணர்களின் கருத்துத் திணிப்பிற்கு எதிரான நடவடிக்கை எது என்று இன்று வரையிலும் நம்மால் முடிவு செய்ய இயலவில்லை. சட்டரீதியான கைது என்பது ‘நாகரீக ஜனநாயக நாட்டில்’ மட்டுமே மதிப்பிற்குரியது. இந்தியா போன்ற ‘அநாகரீக சாதிய நாட்டில்’ இத்தகையக் கைதுகளை தற்பெருமைகளாக மாற்றிக் கொள்ளப் பிராமணர்களுக்குத் தெரியும். காந்தியையே மகாத்மாவாக நம் தலையில் கட்டியவர்கள் அவர்கள்.

1990களிலிருந்து (அதாவது மண்டல் கமிஷன் பரிந்துரை நாட்களிலிருந்து) நடைபெற்று வரும் இந்துத்துவ கலவரங்களை இன்னொரு விடுதலைப் போராக அவர்கள் எழுதி வைத்திருக்கும் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு விளங்கும்.

5. அராத்து

பத்ரி சேஷாத்ரி கைது என்ற செய்தி வந்ததும் முதலில் மாநில அரசு கைது செய்ததா அல்லது மத்திய அரசு கைது செய்ததா அல்லது கோர்ட் சுவோ மோட்டோ போட்டு அதன் மூலம் கைதா என குழம்பிப் போனேன்.

பத்ரி சேஷாத்ரி பேசிய விடியோவில் மாநில அரசை அவர் பெரிதாக விமர்சிக்கவில்லை. மாநில அரசுதான் கைது செய்துள்ளது எனத் தெரியவந்ததும் கொஞ்சம் வியப்பாக இருந்தது.

நீதிபதி சந்திர சூட் பற்றி பத்ரி சேஷாத்ரி பேசியிருந்தது நீதிமன்ற அவமதிப்புக்குள் வருமா இல்லையா என்பதை கோர்ட் முடிவெடுக்கட்டும். நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசினால் மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு எனப் படித்ததாக நியாபகம்.

சமூக வலைத்தளங்களில் ரௌடிகள் போல வெறும் அவதூறுகளையும் , ஆபாசக் கருத்துக்கள் மற்றும் கேவலமான தனிமனிதத் தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்வதன் மூலம் அரசு சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு பொதுப் பிரச்சனையில் தன் கருத்தை சொல்கையில் , விமர்சனம் வைக்கையில் கைது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்தாகத்தான் போய் முடியும். பத்ரி சேஷாத்ரி விடியோவில் சொன்ன கருத்துகள் முற்றிலும் மறுக்கக்கூடியவை என்றாலும் இந்தக் கைது தவறு என்பதுதான் என் பார்வை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அவதூறை சட்டத்தால் எதிர்கொள்ள வேண்டும்.

இதுவரை கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அளவு இடம் கொடுத்த மாநிலமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இருந்து வந்திருக்கிறது. பாஜக கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைதுகளை செய்து வந்தால் , அதை எதிர்க்க அதே வழியில் செயல்படுவது நீண்ட நாள் நோக்கில் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.

மத்திய பாஜகவுக்கு இதுவரை பத்ரி சேஷாத்ரி யை தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது. இனி மத்திய பாஜகவில் பத்ரி சேஷாத்ரி க்கு கொஞ்சம் மைலேஜ் கூடும் என நினைக்கிறேன்.

கர்நாடகாவில் பெண்கள் கழிப்பிடத்தில் விடியோ எடுத்து பிரச்சனையான விஷயத்தில் பாஜக அரசியல் செய்கையில் , காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் இது சின்ன பிரச்சனை , இதை பெரிதுபடுத்தாதீர்கள் என சொல்லப்போக ,

ஒரு பாஜக பெண்மணி , இதுவே முதல்வர் மருமகளுக்கோ , மனைவிக்கோ நடந்திருந்தால் , இதை சின்னப் பிரச்சனை என சொல்வீர்களா என கேட்கப் போக , அந்த பாஜக பெண்மணியும் கைது .

நாட்டில் அடிப்படை க்ரைம் களில் நடக்கும் கைதுகளை விட சமூக வலைத்தள போஸ்ட்டுகளுக்கான கைதுகள் அதிகம் ஆகி விடும் போல.

இதுவும் தேவைதான். ஆனால் அதில் ஒரு அளவுகோல் இருக்க வேண்டும். நாட்ல அவன் அவன் கொலை கொள்ளை கற்பழிப்பு பண்ணிட்டு திரிஞ்சிட்டு இருக்கான், சும்மா போஸ்ட் போட்டு , விடியோ போட்டு திரிஞ்சிட்டு இருக்குறவனை அரஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க என மக்கள் பேசும் நிலை வந்து விடக்கூடாது.

அடிப்படை குற்றங்களில் கைது செய்வது கடினம். சமூக வலைத்தள பிரச்சனைகளில் கைது செய்வது எளிது.வீடுக்கு சென்றால் லேப்டாப்பையோ மொபைலையோ நோண்டிக்கொண்டு இருப்பார்கள். லபக் என தூக்கி வந்து விடலாம் 🙂

கலைஞர் அரசில் இப்படியெல்லாம் கைதுகள் நடக்காது. அவர் பக்கத்தில் போய் அவரையே அவதூறாகப் பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார். ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல. எடுத்ததெற்கெல்லாம் கைது. ஜெயலலிதாவிற்கு கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு லௌகீக பெண்மணி போல எடுத்தற்கெல்லாம் முகம் சுளித்துக்கொள்வார்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தற்போதைய திமுக அரசு கலைஞர் வழியில் அல்ல , ஜெயலலிதா வழியில் நடக்கிறது போல 🙂 இதுதான் திமுக தொண்டர்களுக்கும் பிடித்திருக்கிறது.

6. லீனா மணிமேகலை

பதிப்பாளர் பத்ரியின் கருத்துகள் ஏதொன்றிலும் இதுவரை எனக்கு உடன்பாடிருந்ததில்லை. வெளிப்படையான பாசிச வலதுசாரி ஆதரவாளர் மற்றும் பிரசங்கியாக செயல்படுபவர் பத்ரி. சமீபத்தில் அவர் மணிப்பூர் வன்முறை பற்றி பேசியது ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்காக கைது செய்வோம் எனக் கிளம்பியிருக்கும் தமிழக அரசின் செயல்பாடும் கண்டனத்திற்குரியதே!

சமூகநீதி அரசாங்கம் எனப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழக அரசு கருத்துக்காக கைது செய்வது

மோடி அரசாங்கத்தின் பாசிசத்துக்கு குறைந்ததல்ல. ஒரு திரைப்பட போஸ்டருக்காக பிஜேபி அரசாங்கங்களின் விதவிதமான பத்து வாரண்டுகளை சந்தித்து அவற்றைக் கலைய இன்றுவரை சட்டப்படி போராடிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளராக, என் கோரிக்கை – பத்ரியின் விடுதலை.

7. கே ஆர் அதியமான்

பத்ரி பேசியதை கருத்து சுதந்திரமா அல்லது இல்லையா என்பது அல்ல பிரச்சனை. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்ச தண்டனை 4 ஆண்டுகளுக்கும் குறைவானது தான். ஆனால் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான தண்டனை விதிக்கப்படும் குற்றங்களுக்கு, அத்தகையய சட்டப் பிரிவுகளில் மட்டுமே ஒருவரை கைது செய்ய சட்டம் அனுமதிக்கிறது. எனவே அவரின் கைது தவறானது என்பதே சரியான வாதம். இதைப் பற்றிய சட்டத் திருத்தம்

Supreme Court slams trial courts for seeking needless custody | India News – Times of India (indiatimes.com)

8. லக்ஷ்மி மணிவண்ணன்

பத்ரி சேஷாத்ரி விடுவிக்கப்பட்டிருக்கிறார்

பத்ரிக்கு என்னுடைய வாழ்த்துகள். வாழ்க வளமுடன். வெல்க

ஒரு நண்பர் பத்ரி விஷயத்தில் சதா தார்மீக ஓலமிடும் தமிழக அறிவுத் தரப்பினர் வாயே திறக்கவில்லை பாருங்கள் என வருத்தப்பட்டார்

நான் பத்ரி கைதை ஒரு பதிப்பாளர் பார்ட்டி கொடுத்து கொண்டாடினார் என அறிந்தேன்.பத்ரி பதிப்பித்த நூல் ஆசிரியர்களில் கூட பலர் எதுவும் பேசவில்லை. தி. மு. கன்னா அவ்வளவு சின்சியாரிட்டி. பயம். கமுக்கம் .இது வெறும் கைது மட்டுமல்ல. இந்த அரசின் அல்லக்கைகள் இனி அவரது பதிப்பக நூல்களை நூலகங்களில் முடக்கி பழிவாங்குவார்கள்

அ. தி. மு. கவைக் கண்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்கள் இவ்வளவுக்கு பயப்படுவதில்லை .ஓசிக்கு வாயில் வருவதை எல்லாம் பேசுவார்கள்.உடல் மொழியை கேலி செய்வார்கள். பா. ஜ. க எனில் கேட்கவே வேண்டாம், பிள்ளைப்பிராயம் தொட்டு விரோத அமைப்புகளிடம் கற்றது அத்தனையும் வாமிட் செய்வார்கள் .

இத்தனைக்கும் அறிவுச் சமூகத்துக்கு தி. மு. கவினர் ஏதும் செய்யவும் மாட்டார்கள். தங்களுக்கு என சிலபல என்ஜிஓக்களை நிறுவி வைத்திருப்பார்கள். ஆட்சிக்கு வந்தால் வீடுதேடி கல்வி என போலியாக அறிவொளியூட்டி கண்ணைத் திறக்கும் போலி வேலையை அவற்றுக்குக் கொடுப்பார்கள்.அவ்வளவுதான். அதற்காக ஆட்சியில் இல்லாத போதும் அவர்களுக்காக சமூக ஊடகங்களில் கிடந்து அவர்கள் கொந்தளிக்க வேண்டும்.

கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரையில் உள்ளே சென்ற எதுவும் திரும்பி வராது. ஏராளமான உதாரணங்கள். கருணாநிதி 90 என கருணாநிதியை புகழ்ந்து சென்னையில் கவியரங்கம். 90 கவிஞர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து திரட்டி காரியம் முடிந்ததும் கைவிட்டு விட்டார்கள். தொலைதூரங்களில் இருந்து வந்த கவிகள் பிச்சை எடுத்து வீடு திரும்பினார்கள். அந்த அருவருப்பான நிகழ்வில் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளாத இரண்டு கவிஞர் நானும் என். டி. ராஜ்குமாரும் மட்டும் தான். ராஜ்குமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மறுதலித்து இருந்து விட்டார். அதுவொரு தெளிவு. என்னை அவர்கள் அணுகவே இல்லை .எழுத்தாளர்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள் .அவர்களை நம்பி ஒரு ஓட்டேனும் வருமா என்ன? ஆனால் சிறந்த அடிமைகள் அதனை எல்லாம் கருதுவதில்லை. அடிமைகளாகவே இருப்பார்கள். அழைத்தார்களே என இருப்பார்கள். ஒன்றிரண்டு கவிகள் பிச்சை எடுத்துத் திரும்பியதை பேசி நாற்றினார்கள்.

ஒருமுறை அசோகமித்திரன் அழைப்பின் பேரில் கருணாநிதியுடன் சேர்ந்து ஒரு மேடை நிகழ்வில் கலந்து கொண்டார். தனிப்பட்ட முறையில் அசோகமித்திரனிடம் கருணாநிதி அருகில் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டீர்களே சரியா என நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் “அவாள்ளால்லாம் கெட்டவா… கூப்பிட்டா உடனே போய்ரணும் ” என பதில் சொன்னார் என கேள்விப் பட்டிருக்கிறேன்.

எழுத்தோடு தொடர்புடைய எவரை கைது செய்தாலும் அது வாக்தேவியை தாக்குவதற்கு சமம் .அதில் பிராமண எழுத்தாளனுக்கு ஒரு நீதி தலித் எழுத்தாளனுக்கு மற்றொரு நீதி என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. வாக்தேவி தாக்கப்பட்டால் முனிமார் கோபம் அடைவீர்கள். நிச்சயமாக அதற்கு குல வாயிலில் பரிசுண்டு. இது சாபமல்ல. அறியாத பேர்களுக்கு சொல்லித் தருகிறேன். அவ்வளவு தான்

பாஸிச தி. மு. க அவ்வளவு ஆபத்தானது.எனக்கு முன்னே கண்ணதாசன் இதனைச் சொல்லியிருக்கிறான்.ஜெயகாந்தன் இதனைச் சொல்லியிருக்கிறார். தி.மு.க விஷயம் என்று வந்தால் தமிழ்நாட்டின் அறிவுசார் சமூகம் தனது அறச்சீற்றத்தை தனது கவட்டைக்கிடையில் வைத்து ஒடுக்கிக் கொள்ளும் .உறங்கும். பாசாங்கிப் பேசும் .ஆனால் ஒருவன் பேசினாலும் உடையும் கூடுதான் நீங்கள் காத்து ரட்சிப்பது என்பதை அறிந்து கொள்வீராக…

9. சுஜாதா தேசிகன்

பத்ரி சில எண்ணங்கள்

பத்ரியை எனக்கு ராயர் காபி, தமிழ்.டாட்.காம் என்று அவர் பதிப்பகம் ஆரம்பிக்கும் முன்பே தெரியும். நல்ல நண்பர்.

பதிப்பகத்தில் எழுத்தாளருக்கு ராயல்டி இவ்வளவு தானா ? என்று ஆச்சரியப்பட்டு கிழக்கு பதிப்பகத்தை ஒரு கார்பரேட் நிறுவனம் போல ஆரம்பித்தார். தமிழ் கூறும் நூல்லுலகம் ஒரு புரட்சியைக் கண்டது. பதிப்பக துறையில் ப.தி.கொ. போட்ட பலருக்கு இது ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது.

தன் பதிப்பக துறை வேறு, தன் சிந்தனை சித்தாந்தம் வேறு என்ற கொள்கையை உடையவர். சூப்பர் மார்கெட் போல எல்லா சரக்கும் கிடைக்கும்.

புற்றீசல் போல வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள் கிழக்குப் பக்கம் சென்று ‘எழுத்தாளர்’ என்று ’டாட்டூ’ குத்திக்கொண்டு வந்தார்கள். ஒரு முறை என் நண்பருக்கு வேலை வேண்டும் என்று அவரிடம் கேட்ட போது ‘அதற்கு என்ன’ செய்துவிடலாம் என்றார். அவருடன் பல முறை உரையாடியிருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லிவிடுவார். ஏதாவது சந்தேகம் இருந்தால் அவருடன் பேசினால் தீர்வு கிடைக்கும்.

ஒரு முறை இவரைப் பற்றி பேச்சு வந்த போது சுஜாதா சொன்ன ஒரே வரியை நான் இன்னும் மறக்கவில்லை. (நல்ல விதமாகத் தான் சொன்னார், ஆனால் அதை பொதுவில் சொல்ல முடியாது). அதை பத்ரியிடம் சொன்ன போது, சின்ன சிரிப்புடன் கடந்தார்.

நேற்று முகநூலில் இவர் கைது என்று அறிந்துகொண்டேன். மீண்டு வருவார் எழுச்சி பெறுவார் என்ற ஆறுதல் பத்ரிக்கு தேவை இல்லை. நேர்மையானவர், அதனால் எனக்குக் கவலை இல்லை.

எதனால் கைது என்று அந்தக் காணொளியைப் பார்த்தேன். ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் பேட்டி எடுத்திருந்தால் நிச்சயம் இந்தக் கைது நடந்திருக்காது என்பது என் எண்ணம்.

ஒருமுறை சுஜாதா ‘வில்லியம் கப்பி’ (Will Cuppy) எழுதிய ‘The Decline and Fall of Practically everybody’ என்ற புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்தார். நான் அவரிடம் இது போல நீங்கள் தமிழில் எழுதலாமே என்றேன். அதற்கு அவர் அப்படி எழுதினால் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் சிலவற்றைச் சிலர் தான் பேசலாம், எழுதலாம் என்றார்.

10. அழகிய பெரியவன்

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை கண்டித்து நண்பர்கள் என்ற முறையிலும், தன்னுடைய புத்தகத்தைப் பதிப்பித்தவர் என்ற முறையிலும் சக எழுத்தாளர்கள் சிலர் தங்களின் கண்டனத்தை முகநூலில் தெரிவித்திருக்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இன்னும் சொல்லப்போனால் உயரிய குணம்.

காலமெல்லாம் சாதிமுறையையும், இந்து மத வெறியையும், பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான பிற்போக்கு கருத்துகளையும் எழுதியும் தெரிவித்தும் வருகின்ற இத்தகையவர்கள் இந்த ஆதரவைப் பெறுவதற்கு ஏற்றவர்களா, தகுதியானவர்கள் தானா என்று அவர்களிடம் கேட்கத் தோன்றுகிறது.

அவர்கள் எப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள். நாளைக்கு சட்ட நெருக்கடிகளிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு, யாரெல்லாம் தனக்கு ஆதரவாக பேசினார்களோ அவர்களுக்கு எதிராகவே அவர்கள் நிச்சயமாகப் பேசுவார்கள், எழுதுவார்கள் என்பது உறுதி.

எத்தனையோ தருணங்களில், தம்மக்கள் வாழ்வியலையும் உரிமையையும் பண்பாட்டையும் எழுதுகிற எழுத்தாளர்களைக்கூட கைவிட்டுவிடுகிற தமிழ்ச்சமூகம் இவர்களுக்கு ஆதரவாக நிற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்!!!!

வேறென்ன செய்ய? நல்ல குணத்தை பாராட்டித்தானே ஆகவேண்டும்?!!!

11. சுரேஷ் வெங்கடாத்ரி

பத்ரி சேஷாத்திரியின் பாபர் மஸ்ஜித் இடிப்பு குறித்த நிலைப்பாடுகள்,பற்றிய உண்மை

: பத்ரி சேஷாத்ரியின் கைது விவகாரத்தில் மிகவும் பேசப்படுவதும் மேற்கோள் காட்டப்படுவதும் முன்பு அவர் செய்திருந்த ட்வீட் ஒன்று. அந்த ட்வீட்டில் அவர் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு ஏனோ மகிழ்ந்தேன் என்று சொல்லியிருந்தார். அது மட்டுமே இப்போது பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு அவர் மீது வசை மாரி பொழியப்படுகிறது.

ஆனால்,அதனோடு அவர் சொன்னது அந்த மனநிலை 1992ல் தனக்கு ஏற்பட்டது என்றும்,அதன் பின் தான் அதிலிருந்து விடுபட்டேன்,அது தவறு என்பதை உணர்ந்தேன் என்றும் சொல்லியிருக்கிறார். அதை இப்போது அதற்காக அவரைத் திட்டுபவர்கள் எல்லோரும் மிகச் சவுகரியமாக மறந்து விட்டனர்.பத்ரியின் அந்த மனமாற்றம்,அதை அவர் பதிவு செய்தது ஆகியவற்றைக் குறித்து நண்பர் அரவிந்தன்கண்ணையன்,2014லேயே எழுதியிருக்கிறார்.கீழே இருப்பது அவரது அந்தக் கட்டுரையிலிருந்து.

// A much discussed tweet of Seshadri was one where he said that as a then student of Cornell he supported the demolition of Babri Masjid and even went to the extent of trying to form a friends-of-BJP forum in Cornell. What was conveniently left out was that he had added that those were his ideas at that time and ideas that he no longer supports or advocates. Seshadri was being honest and even daringly courageous in openly talking about his intellectual evolution knowing full well how such things matter less in Tamil Nadu where his original sin of being a Brahmin is all that counts for his opponents. . Like my father says, ‘confessions are good for your soul but bad for your reputation’. Unlike many Brahmins and non-Brahmins when Seshadri wanted to rent an apartment he owned he had advertised ‘caste/religion no bar’. But hey who cares, he’s a Brahmin, lets pelt him.//

அரவிந்தன் கண்ணையனின் முழுக் கட்டுரையின் லிங்க்

A contrarian world: Badri Seshadri’s Brahminical Angst Meets Neo-Nazi Lynching and Stereotyping (pro and anti)

இதைத்தவிர இந்த ஒரு லிங்கிலும் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் பத்ரியின் மனமாற்றம் குறித்து ஒரு செய்தி பதிவாகியிருக்கிறது.அதையும் பார்க்கலாம்.

பாபர் மசூதி இடிப்பிற்கு சந்தோஷப்பட்டேன்.. பத்ரி சேஷாத்ரி பதிவின் முழு காரணம் என்ன ? – You Turn

12. பி.ஏ. கிருஷ்ணன்

என் நிலைப்பாடு தெளிவானது.

திரு கோவன் கைதிலிருந்து திரு செந்தில் பாலாஜி கைது வரை அவை அவசியமற்றவை, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானவை என்றுதான் சொல்லி வருகிறேன். பத்ரி கைது விவகாரத்திலும் என் நிலைப்பாடு இதுதான்.

கைது என்பதை கடைசியாக வேறு வழி ஏதுமில்லாவிட்டால்தான் செய்ய வேண்டும் என்பதுதான் சட்ட வழிமுறை. மக்களாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் எல்லா நாடுகளும் இவ்வழிமுறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொல்கிறது. ஆனால் நடப்பது வேறு.

In the case of Mohammed Zubair vs. State of NCT of Delhi & Ors [Writ Petition (Criminal) No. 279 of 2022], the Supreme Court stressed upon how “the machinery of criminal justice has been relentlessly employed against the petitioner” due to which “he is trapped in a vicious cycle of the criminal process where the process has itself become the punishment.”

According to the Court, the existence of the power of arrest must be distinguished from the exercise of the power of arrest. It observed that the exercise of the power of arrest must be pursued sparingly. The Court held that police officers are vested with the power to arrest individuals at various stages of the criminal justice process, including during the course of investigation but this power is not unbridled. The Court stated that the Police officers have a duty to apply their mind to the case before them and ensure that the condition(s) in Section 41 are met before they conduct an arrest.

“In terms of Section 41(1)(b)(ii) of the CrPC, the police officer in question must be satisfied that such arrest is necessary to prevent the person sought to be arrested from committing any further offence, for proper investigation of the offence, to prevent the arrestee from tampering with or destroying evidence, to prevent them from influencing or intimidating potential witnesses, or when it is not possible to ensure their presence in court without arresting them.”

கைதை ஆதரித்து திராவிட இயக்கத்தினர் பதிவு செய்திருக்கின்றனர். அவர்களுடைய நிலைப்பாடு புரிந்து கொள்ள முடிகிறது. அதிமுக ஆளும் வரை, தில்லியில் பாஜக ஆளும் வரை, கருத்து சுதந்திரத்திற்குக் கொடி பிடிப்போம். நாங்கள் ஆளும் போது அதற்கு வியாக்கியானம் எழுதி எதிர் தரப்பினர் கருத்துரிமைப் பறிப்பை, அவசியமற்ற கைதை நியாயபடுத்துவோம் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் தவறாமல் இருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் நண்பர் ஒருவர் இது திரு. ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது என்றார். அவ்வாறு நடந்திருக்குமா என்பதில் எனக்கு ஐயமே.

இஸ்லாமியர் பலர் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். பத்ரியின் பாபர் மசூதி பதிவு அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் இறைமறையை மறந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. இது திருக் குர் ஆன்.

We have not created the heavens and the earth and everything in between except for a purpose. And the Hour is certain to come, so forgive graciously.” (Quran 15:85)

And the retribution for an evil act is an evil one like it, but whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah. Indeed, He does not like wrongdoers.” (Quran 42:40)

அல்லது இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இப்புனிதச் சொற்கள் பொருந்தாது என்று நினைக்கிறார்களா?

தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் வாயைத் திறக்கவே இல்லை. இதுவும் புரிந்து கொள்ள முடிகிறது. விருதுகள், வீடுகள் காத்திருக்கின்றபோது அரசை எதிர்த்துப் பேசுவது சரியாக வராது என்று அவர்களில் சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நிற்கிறார்கள்.

ஆனால் பெருமாள் முருகனின் கருத்து சுதந்திரத்திற்குப் பொங்கியவர்கள் இன்று வாயை மூடிக் கொண்டிருப்பது இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

தமிழ்நாட்டு இடதுசாரிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து மார்க்சியக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு அலையும் இவர்களிடமிருந்து மனிதகுலத்தின் உயர்வை வலியுறுத்தும் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படை. கார்ப்பரேட், ஏகாதிபத்தியம் பாசிசம் என்று வெற்று வசனம் பேசிக் கொண்டு அலையும் இவர்களுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் தொடர்பே கிடையாது. மனச்சாட்சி சிறிதளவு மிச்சமிருக்கும் சில இடதுசாரிகள் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

திரு ராம், நக்கீரன் கோபாலின் கருத்துச் சுதந்திரத்திற்காக வீறு கொண்டு எழுந்தார் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

கருத்து சுதந்திரம் இடம் வலம் சாயாதது. நேராக, நடுவில் செல்லக் கூடியது.


இவர் சொல்வது அப்படமான அவதூறு. ஹிட்லரிய இனவெறியின் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டுமே இது போன்று எழுத முடியும்.

பிராமணர்கள் யாரும் தாங்கள் சொல்வதைக் கேட்கத்தான் வேண்டும் என்று அறிவித்துக் கொண்டு பேசுவதில்லை. அவர்கள் பேசுவதைக் கேட்பது பொது மக்களின் விருப்பம். இவர் பிராமணர்கள் பேசவே கூடாது. பேசினால் பத்ரிக்கு நடந்ததுதான் நடக்கும் என்கிறார்.

இவரைப் போன்றவர்களைப் பேராசிரியர் என்று அடையாளப்படுத்த முடியும் என்றால் பத்ரியையும் எழுத்தாளர் என்றும் பதிப்பாளர் என்றும் அடையாளப்படுத்த முடியும்.

இவர் பெருமாள் முருகன், சலபதி, சகாரியா, ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களையும் அவமதித்திருக்கிறார். அவர்கள் கூடச் சேர்ந்து எழுதியவர்கள் பிறப்பால் பிராமணர்கள். அவர்களில் ஒருவர் பெரியார் அடியார். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று திரு ராமசாமி விரும்புகிறார்?

அ. ராமசாமி

இந்தியப் பிராமணியம் அறிவு என்பது தங்களுடைய அறிவு மட்டுமே; வாழ்வியலும் பண்பாடும் நாங்கள் உருவாக்கியவை. மற்றவர்களெல்லாம் பிராமணியம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டியவர்கள் என்பதை இன்னும் – 21 ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டிருக்கிறது. ஏற்பு என்பதே அவர்களின் கருத்தியல் கிடையாது. விலகலும் ஒதுக்குதலுமே அவர்களின் கருத்தியல்; செயல்தளம்.

இந்திய/ தமிழ்ப் பிராமணியத்தைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பதே வெற்றிக்கான வழி என்று நினைத்ததுண்டு; எழுதியதுண்டு. ஆனால் எங்களைத் தவிர்த்துவிட்டுத் தமிழக அரசியலை முன்னெடுக்க முடியாது என்று காட்ட நினைக்கிறார்கள் பிராமணர்கள். அதன் ஒரு வெளிப்பாடே பத்ரி சேஷாத்ரியின் மணிப்பூர் குறித்த உரை. அவரை எழுத்தாளர் என்றும், பதிப்பாளர் என்றும் அடையாளப்படுத்திக் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூப்பாடு போடும் கூட்டத்தில் இருப்பவர்கள் யாரெல்லாம் என்பது வெள்ளிடைமலை..


க.பா திருப்புத்தூர்

பத்ரி யின் கைதுக்கு குகா முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். எழுத்தாளர்கள் இசைக் கலைஞர்கள் கடிதம் எழுதுகிறார்கள்.

அவ்வளவு செல்வாக்கு மிக்கவர்தான் பத்ரி.

மாறாக நான் அறிந்தே எங்கள் ஊர்ப் பக்கம் அரசியல் தலைவர்கள் குறித்து மீம்ஸ்களைப் பகிர்ந்தார்கள் என்று சொல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்டு.

அவர்கள் குறித்த செய்தி எந்த ஊடகங்களிலும் வந்ததில்லை. அடைக்கப்பட்டவர்களின் குடும்பங்களே அலைந்து பிணை வாங்கின.

இந்தக் கைதுகளைக் கொண்டாடுவதால் எளியவர்களே மேலும் பாதிக்கப்படுவர்.

கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் என்று யார் வேண்டுமானாலும் உள்ளூர் காவல்துறையிடம் அதிகாரம் செலுத்தி இந்த வழக்குகளை முன்மாதிரியாகக் காட்டி கைது செய்ய வைக்க இயலும்.

13. திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்

பத்ரி சேஷாத்ரி கைது!

அதிக பட்சம் பேஸ்புக்கில், டிவிட்டரில் அவரை நாலு பேர் ஆதரிப்பார்கள் என்பதற்காக அவரைப் போன்ற சக்திகளை வெளியில் உலவ விடுதல் ஆபத்து.

பத்ரி சுதந்திரமாக, தெளிவாக , நேர்மையாக, விருப்பு வெறுப்பின்றி, சமுதாயப் பொறுப்புடன், அமைதியாக கருத்துக்களைப் பொதுவெளியில் சொல்லும் தீய சக்தி. படித்தவர், வன்முறையில் இறங்காத கோஷ்டியைச் சேர்ந்தவர்.

அதனால் அவரைக் கைது செய்வது சரியே!

நீதியரசர்கள் suo moto ஆக முன்வந்து அதிக பட்சமாக தீவாந்திர தண்டனை கொடுத்து செக்கிழுக்க வைப்பது நல்ல முன்மாதிரியாக இருக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.