முந்தைய பகுதி
1. “சிப்பிக்குள் வாழ்ந்த பரீட்சித் தனக்கென அறையை உருவாக்கிக் கொண்டதும் சரி, கண் தெரியாத குட்டிநாயாக தன்னை ஜனமேஜயன் உணர்வதும் சரி அவ்வாறு வாசிக்கப்படவேண்டியவை.”
“வியாசனை நோக்கி கடலில் வரும் மீன்களை சொற்களாக எடுத்துக்கொண்டால் அவருக்கு ஸித்தி காட்சிகொடுப்பது வரை ஒரு கவிதையைக் காணமுடியும்.”
– வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…
2. எழுத்தாளரே தன் எழுத்திற்கு விளக்கம் கொடுப்பது எனக்கு உதவுகிறது. அதனால்தான், எழுத்தாளரின் பேட்டியை வாசிக்கிறேன். நேர்காணல் எடுக்க விரும்புகிறேன். ஆக்கினவரின் வாயினாலேயே ஆக்கத்தின் அர்த்தத்தையும் நுண்ணிய தருணங்களையும் இது போன்ற பொறிப்புரைகளையும் ரசிக்கிறேன். ஆங்கிலத் திரைப்படம் பார்த்து முடித்த பிறகு, அந்தப் படத்தை இயக்கியவரின் வர்ணனையோடு படத்தை மீண்டும் பார்ப்பது போல், படைப்பாளியின் குரலில் படைப்பை மீண்டும் படிக்க இவை உதவுகிறது.
இந்த வார நியு யார்க்கரிலும் ”ஆமென்” என்கிறார் ஹானா ரோஸ்ஃபீல்ட்: No More Questions: A Brief History of Author Interviews : The New Yorker
3. “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன”
“People will always elect the government they deserve” (பிரஜைக்களுக்குத் தக்க ராஜாதான் கிடைக்கிறார்) என்பது லிங்கன் முதல் ஜோசப் வரை சொல்வதாக ஜார்ஜ் புஷ்ஷின், இராக் பழிவாங்கல் போரினால் அமெரிக்காவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. சில பெருநிதி நிறுவனங்கள், இன்னும் மிகச் சில அதிசெல்வந்தர்கள், இன்னும் மிக மிகச் சில உலக சூத்திரதாரிகளால் அவை ஏவப்படுகின்றன என்பதை ஆய்வு புத்தகங்களும் உள்நோக்கர்களும் அமெரிக்காவிலேயே விமர்சனபூர்வமாக தெரிவித்தாலும், அமெரிக்கா என்றால் சண்டைக்கோழி என்னும் பிம்பம் மாறவாப் போகிறது?
4. இரப்பர் காலத்தில் இருந்தே இளமையையும் அழகையும் அந்த வயதில் ஏற்படும் காதலையும் இரம்மியமாக சித்தரிப்பவர் ஜெயமோகன். எப்பின் – த்ரேஸ் ஈடுபாட்டை படித்த பின்னர் இன்னொரு திருப்தியான நேசப் பரிமாற்றமாக இன்றைய அத்ரிகை – சத்தியவான் பகுதி அமைந்திருக்கிறது.
5. “ நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன.”
“இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன.”
“ ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார்.”
6. மச்சகன்னி, கடற்கன்னி என்றெல்லாம் கொச்சை வார்த்தைகளைத் தவிர்த்து நீர்மகளிர் என்னும் சொல்லாக்கமே கண்ணியம் கலந்த ஆர்வத்தைத் தூண்டும் பிரயோகம். அதே மாதிரி இம்மி பிசகினாலும் விரசம் ஆகிவிடக் கூடிய பத்மினி, சித்ரிணி, சங்கினி, ஹஸ்தினி இன்ன பிற விவரிப்பும், வெறும் தகவலாக அமையாமல் காட்சியோடும் கதையோடும் ஊடாடி சொருகப்பட்டிருக்கும் லாவகத்திற்காகவே இந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.
7. சமீபத்தில் ஜப்பானிய பொருட்காட்சி சென்றிருந்தபோது அங்கே, “ஆ… ஊ…” என்று சத்தம். தலையில் கொண்டை; கூடவே ஆம் அத்மி மாதிரி தொப்பியோ அல்லது ஆங்காங்கே சொருகிய ரிப்பனோ எட்டிப் பார்த்தது. அவளுக்கு மேலே பிள்ளையார் சதுர்த்தி போல் குடை ஒன்று நின்றிருந்தது. எதிரே பெரிய டமாரம். அதில் அடித்து அதகளம் செய்து கொண்டிருந்தாள். இன்னொரு புறம் நிறைய சிப்பிகள். எல்லாமே அழுக்காக, பார்ப்பதற்கு பழுப்பும் கருப்பும் கலந்து அருவருக்கவைத்தன. அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தால், அதில் இருந்து முத்தை எடுத்து நகையாக்கித் தருகிறாள். அலங்காரம், செய்தொழில் ஒவ்வொன்றிலும் கேளிக்கை கலந்த ஆர்பாட்ட வழிமுறை, இவற்றை வேடிக்கையாக அலுக்காமல் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுவது என்பதால், மச்சகந்தி ஜப்பானில் இருந்து வந்திருப்பாளோ?
8. இருநூற்றியிருபது முத்துக்களை ஒவ்வொரு முழுநிலவுநாளாகப் பிரித்தால், கிட்டத்தட்ட 220 மாதங்கள். அப்படியானால், பதினெட்டே கால் வருடங்கள் சேர்ந்திருந்திருக்கார்கள் என்றவுடன் பழைய ஜோக் தோன்றியது.
கல்யாணம் ஆன முதல் வருடம் மனைவியுடன் சேரும்போதெல்லாம், ஒரு ஜாடியில் ஒரு டாலர் போடுங்கள். முதல் வருடம் முடிந்த பிறகு, உங்கள் மனைவியுடன் எப்பொழுதெல்லாம் சேருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம், அந்த ஜாடியில் இருந்து ஒரு டாலரை எடுங்கள். நீங்கள் சாகும் வரை, அந்த ஜாடியில் நிறைய டாலர்கள் நிச்சயமாக பாக்கி இருக்கும்.
9. திடீர்னு “கடல்” பாடல் நினைவிற்கு வந்தது:
சித்திரை நிலா ஒரே நிலா
பரந்த வானம் படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையிலே நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 7: பகுதி இரண்டு : பொற்கதவம்