Snapjudge

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 3

In Mahabharat on ஜனவரி 4, 2014 at 1:24 முப

முந்தைய பகுதி

1. ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான்.

வாழ்க்கை ஒரு சதுரங்க ஆட்டம்; சில சமயம் ஆடு புலி ஆட்டம்; சில சமயம் பரமபதம். சாண் ஏறி, முழம் சறுக்கி ஓடுகிறோம்.

2. பண்டைய ஆக்கங்கள் முழுக்கவே ஆச்சாரியர்களை முன்னிறுத்துபவை. துர்வாசரைப் பகைத்துக் கொண்டால் சாபம்; விசுவாமித்த்ரருக்கு சிசுருஷை ஒழுங்காக செய்யாவிட்டால் ஜென்ம நாசம். துரோணரும் கூட ஏகலைவனைப் பார்த்துக் கொண்டார்; பரசுராமரும் கர்ணனை கவனித்தார். இந்தப் பகுதியிலும் குருமார்களிடம் சிரத்தையாக நடந்து கொள்ளாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்கிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், முன்கோபத்தோடும் ஆவணத்தோடும், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்னும் மமதையோடு இயங்கும் பெரியோர்களை கடுமையான விமர்சனப் பார்வை பார்த்தாலோ இளமையின் துள்ளலில் அந்த முனிசிரேஷ்டர்களை மனிதர்களாக தரையில் உலாவும் படைப்புகளாக உருவாக்கினாலோ, அதை நான் புனைவாக ஏற்றுக் கொள்வேன்.

3. இளமையில் விதவை ஆவதன் வலிகளை சுருக்கமாக உத்தரை மூலம் கோடிட்டு காண்பிக்கிறார். இந்த மாதிரி தற்காலப் பிரச்சினைகளை அந்தக் கால கதைகளில் விவரமாக உணர்ச்சிபூர்வமாக சொல்வது, வரலாற்றை மறுபார்வை பார்ப்பது போல், மாற்று கோணங்களை உணரவைப்பது போல் மிக முக்கியமானது. இங்கே ஜெயமோகன் வெறும் matter of fact ஆக தற்போதைக்குக் கடந்து போய் விடுகிறார்.

4. ஆனால், போரின் அர்த்தமின்மைக்கும் அதன் விளைவுகளின் நீதிக்கும் இந்தப் பகுதி ஓரளவு திருப்தியாகப் பேசுகிறது.

“குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம்.”

அஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை.

5. மகாபாரதம் துளிக் கூட தெரியாதவர்கள் இந்தியாவில்… தமிழகத்தில்… இணையம் வாசிப்பவர்களில் வெகு வெகுக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நடையும் எழுத்தும் கதாபாத்திரங்களும் பிரச்சினையே இல்லை. இந்தப் பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் எப்படி எடுபடும்?

6. மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்: தமிழ் ஹிந்து

7. அந்தக் காலத்திலேயே விமானம் ஓட்டினோம், கூடு விட்டு கூடு பாய்ந்தோம், அறுவை சிகிச்சை செய்தோம், செல்பேசியில் கதைத்தோம், சோதனைக்குழாயில் பிள்ளை உண்டாக்கினோம், நினைத்த மாத்திரத்தில் நேரப்பயணம் செய்தோம்… என்னும் பட்டியலில், முன்கூட்டியே பிறந்த சிசுவைக் காக்கும் வகையையும் அறிந்திருந்தோம் என நீட்டிக்கலாம்.

8. இருபதாண்டு காலம் திட்டமிட்டார் என ஒரிரு வார்த்தைகளில் கடந்து செல்கிறார். வானம் பொய்த்ததில் வரி வசூல் செய்வதில் பற்றாக்குறையா? மூலகர்த்தாவான xyzம் abcம் விந்திய மலை தாண்டி வரும்போது ஏதாவது ஹோமக்காரர்களுக்குத் தட்டுப்பாடா? நெய் காய்ச்சும்போது நேரம் எடுத்ததில் மாட்டுக்காரிக்கும் கிண்டுபவனுக்கும் குழந்தை பிறந்ததா? இப்படி எல்லாம் பின்புலமும் காரண காரியங்களும் சொல்லாவிட்டாமல், என் நினைவிலும் ஓரிரு நிமிடங்களே தங்கிப் போகும் அனுபவம் ஆகிவிடுகிறது.

9. மன்னர்களுக்கு அலுப்பு தட்டும் வேலை. எதிரிகள் இல்லாமல் தங்கள் பராக்கிரமத்தை எப்படி நிரூபிப்பது? முற்றுகை இடுவோரோ, பிரச்சினை எழுப்புவோரோ உருவாகாவிட்டாமல், தங்கள் வாழ்வின் அர்த்தம் என்ன? இதில் முன்னோர்கள் சொன்ன கதைகளும், சொல்லாமல் விட்டதை வதந்தியாகக் கேள்விபட்டதும் கலந்துருவாகும் நிஜம் என்ன? மது அருந்திய பின்னிரவுகளில் கற்பனை கலந்து கொப்புளிக்கும் கனவுகள் எவ்வாறு இருக்கும்? படியுங்கள் தெரியும் என காண்பிக்கிறார் ஜெயமோகன்.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 3

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.