மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம் பார்த்தேன். இணையத்தை விட நேரடியாக சென்று கேட்பதுதான் இப்போதைய டிரெண்ட்.
என்னுடைய ஆலோசனைகள்:
1. பத்து தன்னார்வலர்களை சேர்க்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு வாரயிறுதியும் மக்களைத் தொடர்பு கொள்வதில் முனைப்புடன் ஈடுபட வேண்டும். எப்படிப்பட்ட மக்களை அணுக வேண்டும்?
2. கோவில் வாசலில் சாம்பிள் புத்தகத்துடன் நிற்க வேண்டும். காலை ஆறரையில் இருந்து பத்து வரை இருவர்; பின் சாயங்காலம் இரண்டு ஷிஃப்ட். ஒவ்வொரு பக்தரையும் அணுகினால், நாளொன்றுக்கு பன்னிரெண்டாவது விற்கும்.
3. தொலைபேசி டைரக்டரியை எடுத்து ஐயங்கார்களையும் பெருமாள் பெயர் கொண்டவர்களையும் அழைக்க வேண்டும். விருப்பம் காண்பித்து பேசுபவர்களிடம் நேரடியாக சென்று தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
4. நூற்றியெட்டு திருப்பதி பயணம் செல்லும் நிறுவனங்களோடு பேச வேண்டும். அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் புத்தகத்தை விற்றுத் தர சொல்ல வேண்டும். இந்த மாதிரி புத்தகங்களைப் படிப்போர் இணையத்தை விட பயணத்தை விரும்புவோராக இருப்பார்கள்.
5. நரசிம்மப்ரியா போன்ற இதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் சந்தாதாரர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். அஞ்சல் அனுப்பும்போது வெளியீட்டாளரின் புகைப்படம், வரலாறு எல்லாம் சேர்த்து கொஞ்சம் ரத்தமும் சதையுமாக அனுப்ப வேண்டும். தட்டச்சிற்கு பதிலாக கைப்பட எழுதிப் போட்டால் இன்னும் நல்லது.
6. அஹோபிலம் மடம் போன்ற இடங்களில் புத்தக விற்பனை மையத்தில் ஒருவரை வாயிலில் இருத்த வேண்டும். அங்கு நுழைவோரிடம் இந்தத் திட்டம் பற்றி எடுத்துரைத்து வாங்க வைக்க வேண்டும்.
7. பூஜை சரக்குகள் விற்கும் இடங்களின் வாயிலில் ஒருவர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் flyerஆவது இருக்க வேண்டும். எந்தப் புத்தகம், எப்படி இருக்கும், எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் அச்சிட்டு விளம்பரத் தாளாக விநியோகிக்க வேண்டும்.
8. இன்றே, இப்பொழுதே வாங்கினால்தான் சலுகை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த க்ஷணமே வாங்குவதாக முன்பணம் கொடுத்தால்தான் இந்த விலை; நாளைக்கு வந்தால் ஆறாயிரம் ஆகி விடும் என்று மிரட்ட வேண்டும்.