Source: தத்துவத்தைக் கண்காணித்தல் :: ஜெயமோகன்
என் நோக்கில் தத்துவக் கருத்துக்களின் பெறுமதியை அறியும் மதிப்பீடுகள் சில உள்ளன. அவற்றை பத்து விதிகளாகவே சொல்கிறேன்.
1. தர்க்கபூர்வமாக சரியாக இருப்பதனாலேயே ஒரு கருத்து உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. அது தருக்கபூர்வமான உண்மை மட்டுமே.
2 ஒரு சரியான கருத்து அதற்கு நேர் எதிரான கருத்தை தவறாக ஆக்க வேண்டும் என்பதில்லை. இரண்டுமே சரிகளாக இருக்கலாம். அவை வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்
3. இலக்கியம் ஒருபோதும் தத்துவத்தை முன்வைப்பதில்லை. தத்துவத்தின் சாயலையே அது முன்வைக்கிறது. தத்துவ சிந்தனையை உருவாக்கும் மனநிலைகளை வாசகனில் அது எழுப்புகிறது
4 ஓர் இலட்சியவாதக் கருத்து நடைமுறைத்தளத்தில் ஓரளவேனும் செல்லுபடியாகவேண்டும். முற்றிலும் இலட்சியவாதத்தனமாக உள்ள கருத்து என்பது பெரும்பாலும் பயனற்றதே
5 ஒரு திட்டவட்டமான கருத்தை அருவமாக்கியும் ஓர் அருவமான கருத்தை திட்டவட்டமாக ஆக்கியும் அதன் உண்மைமதிப்பை ஊணர முடியும்
6 ஓர் நடைமுறைக்கருத்து ஒருபோதும் திட்டவட்டமாக – முடிவானதாக இருக்கலாகாது. அது சற்றேனும் ஐயத்துக்கும் மாறுதலுக்கும் இடமளிக்கும்போது மட்டுமே அது நேர்மையானதாக இருக்க முடியும்
7 ஒரு மீபொருண்மைக் [மெட·பிஸிகல் ] கருத்து கவித்துவம் மூலம் நிலைநாட்டப்படாமல் அதிகாரம் அல்லது நம்பிக்கை மூலம் நிலைநாட்டப்படுமென்றால் அதை முற்றாக நிராகரிப்பதே முறை.
8 தத்துவத்துடன் எப்போதுமே நேரடியான அதிகாரம் தொடர்புகொண்டுள்ளது. பெரும்பாலும் தத்துவ விவாதங்கள் அதிகாரங்கள் நடுவே உள்ள விவாதங்களே. ஆகவே நட்பான தளம் இல்லாவிட்டால் ஒருபோதும் தத்துவ விவாதம்செய்யலாகாது. அது உடனடியாக தத்துவத்தின் தளத்தை விட்டு வெளியே சென்றுவிடும்
9 அன்றாடவாழ்க்கைக்கு எவ்வகையிலேனும் பயனளிக்குமா என்ற கேள்வி தத்துவத்தின் பெறுமதியை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது