முந்தைய மேற்கோள் 10:
தமிழகத் தேர்தல் களம்: அரசியல் பேச்சு – மேடை மொழி
1. லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் :
“எங்களுக்கு காங்கிரசுடன் தகராறு எதுவும் கிடையாது. மன்மோகன்சிங்கையே மீண்டும் பிரதமர் ஆக்க விரும்புகிறோம்.”
2. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் :
“மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது.”
3. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்யும் பிரியங்கா வாத்ராவின் பதில் :
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது.”
4. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி:
“தமிழ்நாட்டிலும் சரி, இந்திய துணைக்கண்டத்திலும் சரி. இப்போது வருகின்ற செய்திகளை பார்த்தபோதும், எங்கெங்கே எத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இன்றைக்கு பிடிக்கின்றன என்பதை உற்று நோக்கும் நேரத்தில், தேர்தல் ஜாதகத்தை கணிப்பவர்கள், அடுத்து வரும் ஆட்சியும் இந்திய துணைக்கண்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான் என்று முடிவுகளை சொல்லியிருக்கிறார்கள்.”
5. திராவிட முன்னேற்ற கழக அமைச்சர் அன்பழகன் :
“டெல்லியில் மீண்டும் சமய சார்பற்ற, மசூதிகளை இடிக்காத, மசூதிகளை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்ற சொல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும்.”
6. காங்கிரஸ் தலைவர் தங்கபாலு :
“காங்கிரஸ் கட்சியும், அன்னை சோனியாகாந்தியும் இருக்கும்வரை தி.மு.க.வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.”
7. திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் பிரசாரம் செய்த முக ஸ்டாலின் :
“பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.
ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்.”
8. மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில் :
“நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.”
9. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தபோது:
“அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம்.”
10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை அறிமுக நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :
“எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். சுகாதார வசதி கிடைக்க வேண்டும். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள்.
தமிழகம் டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனையில் மட்டும் வளர்ந்துள்ளது. வேறு எதிலும் வளர்ச்சி அடையவில்லை.”
கொசுறு: பாஜக தலைவர் இல.கணேசன் :
“தென் சென்னையில் உள்ள வாக்காளர்களில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. தங்களது ஜனநாயக பொறுப்பை அவர்கள் உணர வேண்டும். கண்டிப்பாக வாக்களிக்க முன்வர வேண்டும்.“