பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…
- இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
- தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
- இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
- தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
- தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
- படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
- முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
- தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
- ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
- இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.
நிறைவேற்றுவதற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறேன்.