1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.
2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.
3. ஆம்னிபஸ், அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.
4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.
5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.
6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.
7. நான் கணினில் நிரலி எழுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.
8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.
9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.