நான் கடவுள் படத்திற்கு இன்னொரு உச்சகட்ட காட்சியை நெறியாளுநர் பாலா அமைத்திருந்தார்.
தற்போதைய உச்சகாட்சி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், இதை வைத்து மாற்றியமைத்து, அரங்கிற்கு மீண்டும் பார்வையாளர்களை அழைக்கலாம் என்பது சாதாரணமாக சினிமா இயக்குநர்கள் செய்வதுதான்.
அந்த இன்னொரு க்ளைமாக்ஸ் என்ன? அப்படி என்னதான் டைரக்டர் பாலா யோசித்திருந்தார்?? எதை எழுத்தாளர் ஜெயமோகன் மாற்று முடிவாக கதைக்கு எழுதிக் கொடுத்தார்???
10 ஹாட் எக்ஸ்க்ளூசிவ்:
- தாண்டவனும் அகோரி. ருத்ரனை தாண்டவன் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். literally.
- அம்சவள்ளியில் இந்த நிலைக்கு பழநி முழு முதற்காரணம். தொடர்வண்டியில் கண்டுபிடித்து, காவல்நிலையத்தில் வாங்கி, பிச்சைக்கு தயார் செய்தது அவரே. (தாண்டவனுக்கு பதிலாக) பழனியை ருத்ரன் சாகடிக்கிறார்.
- துவக்கத்தில் இருந்து பூஜாவின் எந்தக் கோரிக்கைக்கும் எந்தக் கடவுளும் செவிசாய்க்கவில்லை. தொலைநோக்குப் பார்வையற்ற ஆர்யாவின் மதியில்லாத செயலினால், ஆர்யாவின் அம்மாவுக்காக பரிந்து பேசியதைப் போல் விளக்கிச் சொல்லாமல் தடாலடியாகத் தீர்த்துக் கட்டியதால், அழகும் குலைந்ததால், அம்சவள்ளி நான் கடவுள் ஆகிறாள். ருத்ரனுக்கு ‘வர்தான்’ தருகிறார்.
- மலையாளத்தில் எழுதினால் இந்நேரம் ஜெயமோகனுக்கு சாகித்ய அகாதெமியும், கேரளாவினால் பாலாவிற்கு தேசிய கவனிப்பும் கிடைத்திருக்கும். எனவே, இதெல்லாம் மலையாள சேட்டனின் சூழ்ச்சி. முல்லைப் பெரியாறு போல் மொத்தமாக உருப்படிகளை அபகரிக்கும் திட்டத்திற்கு திராவிட தாண்டவன் பலியாகிறார்.
- தி டெவில்ஸ் அட்வகேட்: தாண்டவன் கடைசியில் உண்மையை சொல்கிறார். அவர்தான் ஆரியாவின் உண்மையான தந்தை. அவர் பிறிதொரு பிச்சைக்காரியுடன் உறவுகொண்டதில் பிறந்தவள் பூஜா. அமசவள்ளியும் மகள். இருவரையும் இணையச் சொல்கிறார்.
- தாண்டவன் பதுக்கி வைத்திருந்த அஞ்சு பைசா, பத்து பைசாக்கள் வெளிவருகிறது. இந்தியாவில் நிலவும் சில்லறைப் பஞ்சம் குறைகிறது. பணப்புழக்கம் ஏறுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
- ருத்ரன் பாகிஸ்தானில் வந்திருக்கும் தீவிரவாதி. வாரநாசி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ருத்ரன் என்பதை தமிழகக் காவல்துறை துப்புதுலக்குகிறது.
- தாண்டவன் அழிந்தபின்பும் பகவான் காலபைரவருக்கு குடும்ப பந்தம் விலகவில்லை. ‘தசாவதார’ கோவிந்தும் ‘நான் கடவுள்’ ருத்ரனும் சந்திக்கும் தருணத்தில் சுனாமி நிகழ்கிறது. ருத்ரனுக்கு சரியான வேட்டை. இறுதியில் கமலும், பதினொன்றாவது கமல்ஹாசனாக இயக்குனர் பாலாவும் ‘யார் கடவுள்? நானே கடவுள்?’ என்று சண்டையிடுகின்றனர்.
- லகான் கடி குழு: தாண்டவன் ‘ஒண்டிக்கு ஒண்டி’ பதில், குழுப் போட்டிக்கு அழைக்கிறான். அவனுடைய டீமில் இருந்து பதினொன்று விளிம்புநிலையாளர்களும், ருத்ரனின் அகோரிக்கள் பதினோரு பேரும் இடையே கடிப் போட்டி. தாண்டவனின் கடி ஜோக்குகளுக்கு அகோரி சாமியார்கள் சிரித்துவிட்டால், காசி பிஷுக்கள் பிச்சையெடுக்க வந்துவிட வேண்டும். இல்லையென்றால், அகோரிக்களுக்கு உணவாகி விடுவார்கள்.
- கட்டாங்கடைசியாக — இடைவேளைக்கு அப்புறம் எவரும் திரையரங்கில் இருக்க மாட்டார். எனவே, அங்கேயே ‘தி என்ட்’ போட்டுடலாம் என்றிருப்பார் பாலா.