Snapjudge

Posts Tagged ‘2000’

நான் அறிந்த நெட் நாட்டாமைகள்

In Blogs, Tamilnadu on நவம்பர் 16, 2011 at 4:11 முப

இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் எல்லோருமே சில காலம் முன்பு புகழ்பெற்றவர்கள். சச்சின் டெண்டுல்கர் போல் இப்பொழுதும் களத்தில் இருக்கலாம். காஜி கேட்கலாம். ஆனால், பதின்ம வயதின் சச்சின் போல் பத்தாண்டுகளுக்கு முன்பு ரவுண்டு கட்டியவர்கள்.

நெட் நாட்டாமையின் மாண்புகள் என்ன?

  • நிறைய வாசிக்க வேண்டும்; அவனப் பத்தியும் எவளப் பத்தியும் சுட்டத் தெரிய வேண்டும்.
  • எல்லோருக்கும் ஒன்பது துவாரம் இருக்கலாம். ஆனால், யூஸ் செய்வது முக்கியம். அனைவரும் எழுதலாம். காத்திரமான கருத்து வேண்டும்.
  • அச்சில், திரையில் கொடி பறக்ககூடாது.
  • மறுமொழி இடுவதற்கு அசரமாட்டார். வாக்குவாதத்தில் கெட்டி.
  • முசுடு கிடையாது. பெருங்கோபமிருக்கும் இடத்தில்தானே, நோ நான்சென்ஸ் குணம் இருக்கும்!?
  • நிர்வாகி. ஒருங்கிணைப்பாளர். பின்னணியில் செயல்படும் காரியவாதி.
புகழ்பெற்ற தமிழ்ப்பதிவர்களைப் பற்றி சொல்லும்போதே நாட்டாமையின் குணாதிசயங்களை அறியலாம்:
  1. பெயரிலி:
    பிள்ளையார் சுழி மாதிரி இவரைப் போடாவிட்டால் எந்தப் பட்டியலும் சரிப்படாது. புனிதப் பசுவாக இருக்கட்டும்; சுய எள்ளல் ஆகட்டும்; எல்லாவற்றிலும் பாயும் புலி.
  2. பாலபாரதி:
    நெட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தியவர்களின் மேற்சென்று, ரியலிசத்திலும் நாட்டாமையாக முன்னின்று பஞ்சாயத்து செய்தவர். ட்ரைவ் இன் வுட்லண்ட்ஸ் தயிர் வடை கோஷ்டியைத் தாண்டி சென்னைப் பதிவர்களை பட்டறை போட்டவர்.
  3. பி கே சிவகுமார்:
    தனி மரம் தேர்தல் சின்னமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், தோப்பாகாது. தனக்குப் பின்னே அன்பால் அமைந்த கூட்டணி கொண்டவர். பிரபாகரன் தொட்டு முதலியம் வரை பேசாப் பொருள்களுக்கு குத்து விளக்கேற்றியவர்.
  4. நேசகுமார்:
    மண்டனமிஸ்ரரின் மனைவியிடம் தோற்ற ஆதிசங்கரராக இஸ்லாம் கற்றுத் தேர்ந்தவர். முகமது சொன்னதை முல்லாக்களும் அறியாத காலத்தில், முஸ்லீம்களுக்கும் முகத்தை களைய நினைத்தவர்களுக்கும் மண்டை காய வைத்தவர்.
  5. மதி கந்தசாமி:
    தமிழ்மண நட்சத்திரமா? சிறுகதைப் போட்டியா? நுட்பக் கோளாறா? எல்லாவற்றுக்கும் விடையும் நேரமும் வைத்திருந்தவர். தீர்க்கமான தலைமை & தொலை நோக்கம் என்பதற்கு பாடமாக விளங்கியவர்.
  6. முகமூடி:
    சிலருக்கு இவர் புழு – நசுக்க நினைத்தார்கள். சிலருக்கு இவர் பட்டாம்பூச்சி – கேயாஸ் தியரி என்பார்களே… அது மாதிரி அடுக்கடுக்கான மாற்றங்களை உருவாக்கினவர். PMK விரிவாக்கத்தை நினைவில் நிறுத்தியது மட்டுமல்ல. திராவிடத்தின் தோலுரிப்புகளையும் அபிமன்யுவாக கையாண்டவர்.
  7. முத்து தமிழினி:
    விவாதங்களில் கெட்டித் தயிர்; கொள்கை விளக்கங்களில் வெண்ணெய்; நேர்ப்பேச்சில் வழிந்தோடும் மோர்; அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் தூய்மையான வெள்ளந்தி பால்.
  8. குழலி:
    ஒருவன் ஒருவன் முதலாளி என்னும் தேய்பதத்திற்கு உள்ளாகும் அபாயம் இருந்தாலும், அவர்களுக்குக் கிடைத்த உபாயம்.
  9. டோண்டு ராகவன்:
    மூர்த்தியா? இவரா? என்னும் ஒண்டிக்கு ஒண்டி பலப்பரீட்சையில் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, அசராமல் ஆடி ஜெயித்த வீரர்.
  10. ரோசா வசந்த்:
    பூர்ஷ்வா, ரோசா போன்ற நேம் டிராப்பிங் இருக்கும். இளையராஜா என்னும் அணுக்கமும் இருக்கும். கொண்ட முடிவின் கறார்த்தனத்திற்கு ஜெயலலிதாவே வெட்கப்பட வேண்டும். விலாவாரியாக எதிர்வினையின் நீள அகல ஆழத்தைக் கண்டு ஜெயமோகனே நாணங்கொள்ள வேண்டும்.
தூக்கக் கலக்கத்தில் விட்டவர்களை நினைவூட்டவும்.

2000s: Best Directors in Tamil Cinema

In Lists, Movies, Tamilnadu on செப்ரெம்பர் 11, 2009 at 3:43 முப

தலை பத்து டைரக்டர் பட்டியல் போடும் முன் சில காரணங்கள்:

  1. இரண்டு படங்களாவது இயக்கி இருக்க வேண்டும்
  2. கடந்த பத்தாண்டுகளில் ஒரு சூப்பர்ஹிட்டாவது கொடுத்திருக்க வேண்டும்
  3. படத்திற்கு படம் எதிர்பார்ப்பு கூடுமாறு வித்தியாசம் காட்டுபவர்
  4. ஒரே ஃபார்முலாவில் சிக்காதவர்; அப்படியே அதிலேயே சுழன்றாலும், அதிலும் புத்துருவாக்கம் செய்பவர்
  5. விருதுகளுக்காக மட்டும் படம் எடுக்காதவர்
  6. ஒரேயொரு ஆங்கிலப் படத்தை அப்படியே டிட்டோவாக — அப்பட்டமாக தழுவாதவர்
  7. தனக்கென் ஒரு பாணி கொண்டவர்
  8. திரைப்படம் வெளியான காலகட்டத்தின் ட்ரென்டை மாற்றி, தன் சாயலில் பத்து இன்ஸ்பிரேஷன்களை வரவைத்தவர்
  9. ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள் இவரின் டேட்ஸுகளுக்காக காத்திருக்கும் நிலை கொண்டிருப்பவர்
  10. சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பா ராகவன், இரா முருகன், தமிழ்ச்செல்வன், சுபா என்று எழுத்தாளர்களோடு கூட்டணி கண்டவர்

எந்த வரிசையிலும் இல்லை.

1. மிஷ்கின்

இரண்டு படம்தான் இயக்கி இருக்கிறார். பல படங்களில் பிழிந்தெறிந்த சென்னை அடியாள் வாழ்க்கையை வித்தியாசமாகக் காட்டியவர். டூயட் பாட்டென்றாலே ஆடையுடன் புணர்ச்சி என்பதை குத்துப் பாட்டுக்குக் கூட கொசுறாகத் தூவாதவர். அடுத்தது கமலைக் கட்டியாளப் போகிறாராமே! ஈஸ்வரோ ரஷது.

2. செல்வராகவன்

நேர்காணல் கொடுக்கும் தமிழ் இயக்குநர்கள் என்பது டைனோசார் வகையில் சேர்த்தி. அதிலும் தன் படத்தைத் தவிர பிற விஷயங்களைக் குறித்தும் இயல்பாக, கோர்வையாகப் பேசுபவர். ‘பாய்ஸ்’ வருவதற்கு முன்னோடி காரணகர்த்தா.

3. பாலா

கொஞ்சம் சறுக்குமுகம். ரஜினியின் மேற்கோள் போல் கீழே விழுந்தவுடன் எழுந்திருக்கும் யானையா? குதிரையா?

4. சசி

இவரின் கதாநாயகிகள் மனோலயத்தில் ரீங்கரித்து ஆராதிக்கக் கோருபவர்கள். தமிழுக்கு புதுமுகம் பார்வதி, பழகிய முகமான கௌசல்யா, பாந்தமான பூமிகா, ‘காதல்‘ தவிர வேறு எதுவுமே சரியாகப் போகாத சந்தியா: எல்லோருமே முக்கியமான ஹீரோயின் பாத்திரங்கள். சென்றவரைப் போல் அல்லாமல் ஏறுமுகம்.

5. கௌதம் மேனன்

கவுதமின் பெயர் மனதில் நின்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இளைய தளபதி விஜய் படத்தை நிராகரிக்கும் தைரியம் கொண்டவர். சூர்யாவை உண்டாக்கியதில் பாலாவுக்கு பெரும்பங்கு என்றால், பாக்கி பங்கை இவரிடம் கொடுக்க வேண்டும். கமலுடன்தான்…

6. கே எஸ் ரவிக்குமார்

பாரதி-வாசு மாதிரி முதல் படத்தினால் திசை திரும்பினாலும், காற்றடித்த பக்கம் தூற்றிக் கொண்டவர். அந்தக் கால மசாலாவிற்கு ப நீலகண்டன். எஸ் பி முத்துராமன், ஏ பி நாகராஜன் என்றால், இன்றைய அளவில் முதலிடம் பெறுபவர்.

7. வசந்த்

முன்னவர் மாதிரியே 1990ல் களம் புகுந்தவர். முதல் பட வெற்றியும் விமர்சகர் பாராட்டையும் பரவலான கவனிப்பையும் பெற்றவர். கேயெஸாரோ நாற்பது சொச்சம் இயக்கித் தள்ளிவிட, இவர் பொறுக்கியெடுத்து பத்து கூட இன்னும் போடவில்லை. அப்பு மட்டும் தப்பு?

8. சேரன்

பால்ய கால நினைவுகளை மீட்டும் சொந்த ஊர் காவியம், சாதிக் கலவரம் கிட்டத்தட்ட மூளவைத்த முதல் படம் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். நடிப்பில் மயங்கி சுருங்குபவர். படங்களின் மூலம் மெஸேஜ் தருவதை மட்டும் நிறுத்திக் கொண்டானாரேயானால் மேலும் தன்னை வளமாக்கி, நம்மையும் நாட வைக்கலாம்.

9. ஷங்கர்

திறமையான மேலாளருக்கு அடையாளம், சாமர்த்தியசாலிகளிடம் இருந்து தனக்கு வேண்டிய விஷயங்களை கிகாபைட் கிகாபைட்டாக கறப்பது. ஆக்சன் கிங் ஆகட்டும், இசைப் புயல் ஆகட்டும், கவிப்பேரரசு ஆகட்டும், வாத்தியார் ஆகட்டும்… இவருக்கென்று வரும்போது ஏதோ ஸ்பெஷலாய் செய்தார்கள்.

10. மணி ரத்னம்

கடைசியில் வந்த இருவர் பெயரை 786 இட்டுத்தான் இந்தப் பட்டியலே பிள்ளையார் சுழிக்கப்பட்டது.

பட்டியலில் இடம்பிடிக்கக் கூடியவர்கள்:

1. தங்கர் பச்சான்

முதல் ரேங்க் எடுப்பதற்குரிய எல்லாவிதமான முஸ்தீபுகளும் நிறைந்தவர். சோகத்தை ரொப்ப வேண்டும் என்னும் திணித்தலும், உணர்ச்சி என்பது ஏமாற்றம் மட்டும் என்னும் அனுமானத்தினாலும் மனதில் நிலைத்து நிற்காத படங்களோடு நின்றுவிடுகிறார்.

2. விக்கிரமன்

சென்னைக் காதல், மரியாதைக்கு அப்புரம் எல்லாம் இவருக்கு எப்படி இடம்? இருந்தாலும் விஜய்க்கு கூட நல்ல குணச்சித்திரம் அமைக்கும் மனப்பான்மை கொண்டவர். லிங்குசாமி உட்பட பலருக்கும் வானத்தைப் போல வழி காட்டுபவர்.

3. அமீர்

பருத்தி வீரனை விடமௌனம் பேசியதே சுவாரசியமான என்டெர்டெயினர்.

4. எஸ் பி ஜனநாதன்

மசாலா இருக்கும்தான். ஆடலுடன் பாடலும் கிடைக்கும்தான். இருந்தாலும் எது, எப்பொழுது நடக்கும், என்னவாகும் என்று அனுமானிக்க முடியாத திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவிற்கு புதிது. நாயகனோடு நாயகி என்பதேல்லாம் நடவாமல் போவது ரொம்பவே புதிது.

5. பாலாஜி சக்திவேல்

சாமுராய் கூட எனக்கு பிடித்திருந்தது. துள்ளல் கூடிய லட்சணம் கொண்ட ஹீரோயின் சாய்ஸிலேயே தன் ரசனையை நிரூபித்தவர் அல்லவா!

6. தரணி

விஷ்ணு வர்த்தனையோ ஏ ஆர் முருகாதாஸையோத்தான் இங்கே சேர்க்கவில்லை. ஒரு படத்தில் தன் திறமையைக் காட்டியவருக்கான இட ஒதுக்கீடு இங்கே இரு படத்தில் மிளிர்ந்தவருக்கு தரப்படுகிறது.

7. சுந்தர் சி

உள்ளத்தை அள்ளித் தா, அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, மேட்டுக்குடி என்று முழு நேர நடிகராவதற்கு முன்பே முத்திரை இயக்குநர் 😛

8. சுரேஷ் கிருஷ்ணா

ஒரு வார்த்தை போதும்: அண்ணாமலை (மேலே கேட்டால் ஆளவந்தான், பாபா, கஜேந்திரா, சங்கமம்)

9. ஹரி

நான் தாமிரபரணி, வேல் போன்ற சினிமாக்களின் ரசிகன். கடகடவென்று கணக்கு தப்பாத திரைப்படம் கொடுக்கும் கலை அறிந்து வைத்திருக்கிறார்.

10. கே வி ஆனந்த்

‘காதல் தேசம்’ கதிர் போன்றவர்களுக்கு ரெகுலராகக் கிடைத்த ஏ ஆர் ரெஹ்மான் இவருக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்?

நம்பிக்கை நட்சத்திரம் (கொசுறு): கரு பழனியப்பன்

ஊர் விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் பெண்களின் நிலையை அழகாக சொன்ன விதம். சினேகாவிற்கு ப்ரான்ட் ஐடென்டிடி உருவாக்கிய இரட்டை வேடம். நாட்டுப்புற பாடல், விளிம்பு நிலை என்றெல்லாம் மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் உரையாடல். சோனியா அகர்வாலுக்கு விவாகரத்தாமே? இப்பவாது ‘சதுரங்கம்‘ வருமா!