Snapjudge

Posts Tagged ‘விஜய் சேதுபதி’

10 Social Media Opinions about Vikram: விக்ரம்

In Blogs, Movies on ஜூன் 5, 2022 at 2:48 முப

1. Chithran Raghunath

கமல்-சுஜாதா-விக்ரம்

நான் சின்னப்பையனாக இருந்தபோது தீவிர கமல் மற்றும் சுஜாதா ரசிகன். 1986-ல் விக்ரம் வெளியானபோது FDFS பார்த்த மாதிரிதான் ஞாபகம். அப்போது உடுமலையில் இருந்தோம். இந்தப் படத்திற்கான கதையை சுஜாதா குமுதம் வார இதழில் தொடர்கதையாக எழுதிக்கொண்டிருக்க, அதற்கு இணையாக அந்தப்படத்தின் ஷூட்டிங்கும் நடந்துகொண்டிருந்தது. அந்தத் தொடர்கதையைப் படிப்பதற்காகவே குமுதம் வந்தவுடன் ஓடிப்போய் வாங்கி வந்துவிடுவேன்.

இந்தத் தொடர்கதைக்கு ஓவியத்துக்கு பதில் விக்ரம் படத்தின் ஸ்டில்களையே வாரா வாரம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவைகளையெல்லாம் வாரம் தவறாமல் கத்தரித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி ஆல்பமாக்கிக்கொண்டிருந்தேன். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே கமலின் பத்திரிக்கைப் புகைப்படங்கள் எல்லாவற்றையும் கத்தரித்து நோட்டில் ஒட்டி வைத்திருந்தேன். (அதெல்லாம் எப்போது தொலைந்துபோனதென்று தெரியவில்லை.)

விக்ரம் தொடர்கதையில் சுஜாதாவின் பல வரிகள் மனப்பாடமாக இருந்தன. வில்லன் சத்யராஜ் ராக்கெட்டை கடத்தும் காட்சியில் ராணுவ வீரர்கள் சுடப்படுவார்கள். அதில் ஒரு வரி: “ஒருவன் மட்டும் தப்பித்து மலைச்சரிவில் தீவிரமாக, மிகத் தீவிரமாக ஓட, சரியாக, மிகச் சரியாகக் குறிபார்க்கப்பட்டு சட்டென்று பின் மண்டையில் ஒரு ரத்தப் பொந்து விழ சரிந்து சரிந்து விழுந்தான்.” (Note: ஓரிரு வார்த்தைகள் மாறியிருக்கலாம்.)

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் அந்த சமயத்தில் ஒரு சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது. அங்கேதான் முதல் முறையாக கம்ப்யூட்டரைப் பார்த்தேன். அதை பத்திரமாக ஒரு குளிரூட்டப்பட்ட ஒரு லேபுக்குள் வைத்திருந்தார்கள். உள்ளே போகும்போது செருப்பைக் கழற்றிவிட்டுப் போகச் சொன்னார்கள். கம்ப்யூட்டர் திரையில் பச்சை நிறத்தில் எழுத்துக்கள் ஒளிர கண்ணாடி அணிந்த ஒரு இளைஞன் டைப் அடித்துக் காட்டினான். வாயைப் பிளந்தபடி பார்த்தேன். அதே மாதிரியே விக்ரம் படத்தில் ஒரு பத்திர ஏஸி ரூமில் கண்ணாடி அணிந்த லிஸி இதே போல் கம்ப்யூட்டரைக் கொஞ்சும் காட்சியைக் காண்பித்தபோது பார்க்கப் புளகாங்கிதமாய் இருந்தது. ஏதோ சயின்ஸ் பிக்‌ஷன் படம் பார்க்கிறோம் என்கிற உணர்வு வந்தது. இதுபோல் படத்தில் பல அம்சங்கள். அந்த மாதிரி ஒரு கம்ப்யூட்டரையெல்லாம் வாழ்நாளில் தொட்டுப் பார்ப்பதென்பது கனவாகவே இருந்தது. (ரெட்ரோ டிக்கட் என்ற ஒரு யூட்யூப் சானலில் 1986 விக்ரமை கார்த்திக் ரங்கநாதன் என்பவர் நன்றாக அலசியிருக்கிறார். லிங்க் முதல் கமெண்ட்டில்)

படத்தின் இன்னொரு கவர்ச்சி அதன் டைட்டில் டிசைன். 7 Segment LED யில் தெரிவதைப்போல எழுத்துக்களின் வடிவமைப்பு.

படம் வந்த சமயத்தில் உடுமலைப்பேட்டையில் ‘விக்ரம்’ என்ற பெயரில் ஒரு ஹோட்டல் திறந்தார்கள். அதன் விளம்பரத்திற்காக. ஆட்டோ ஒன்று “உடுமலையில் மிகச் சிறந்த உணவகம் விக்ரம்..” என்ற குரலைத் தொடர்ந்து “விக்…. ரோம்… விக்…. ரோம்…’ என்ற பாடலை ஒலிபெருக்கியில் போட்டபடி சந்துபொந்துக்களில் வலம் வந்தது. இந்தப் பாட்டு என்னுடைய ஃபேவரிட் பாடல்களில் ஒன்று. இந்த பாட்டின் ஆரம்பத்தில் வரும் கம்ப்யூட்டர் ஒலிகளை மட்டும் ரிவைண்ட் செய்து ரிவைண்ட்செய்து கேட்டுக்கொண்டேயிருப்பேன் அப்போது. (அந்த ஒலிகள் எல்லாவற்றையும் பாட்டில் சேர்த்தது தான்தான் என்று கமல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சொன்னார்.)

சில படங்களில் கமலைப் பார்க்கும்போது கூடவே ஏனோ தெரியாமல் சுஜாதாவும் ஞாபகத்திற்கு வருவார். ‘வெற்றிவிழா’ படம் பார்க்கும்போது இந்த உணர்வு இருந்தது. இருவருமே அறிவுஜீவிகள் என்கிற பொதுவான பிம்பத்தினால் இருக்கலாம்.

லோகேஷின் விக்ரம் படத்தையும் எப்படியும் (தியேட்டரில்) பார்த்துவிடுவேன். அது எப்படியிருந்தாலும். கமல் ரசிகனான அந்தச் சிறுவன் இன்னும் எனக்குள் ஒளிந்துகொண்டிருப்பதால்.


2. Suresh Kannan

விக்ரம் (2022)

உங்களுக்கு ரணகளமான ஆக்ஷன் படம் பிடிக்கும் என்றால் விக்ரம் உங்களுக்கானது. குறிப்பாக ‘கைதி’ படம் பிடித்திருந்தது என்றால் இதற்கு நம்பிச் செல்லலாம். அதை விடவும் ஆக்ஷன் காட்சிகளை எக்சிகியூட் செய்வதில் பல படிகள் தாண்டியிருக்கிறார்கள். ஏன் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளே ‘விக்ரமின்’ மூலம் அடுத்தபடியைத் தாண்டியிருக்கிறது. அத்தனை ரணகளமாக விளையாடியிருக்கிறார்கள். மற்றபடி காமெடி, சென்டி, பாடல் போன்றவற்றின் கலவையை எதிர்பார்த்தால் இது உங்களுக்கானதல்ல.

‘விக்ரம்’ பெரும்பாலும் ‘கமல்’ படமாக அல்லாமல் (பத்தல பத்தல போன்ற காமெடிகளைத் தவிர்த்து) லோகேஷின் படமாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம், சகித்துக் கொள்ளக்கூடிய சில fan boy Moment களைத் தாண்டி இது டைரக்டரின் படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.. லோகேஷின் கைகளுக்கு கமல் தாராளமாக சுதந்திரம் அளித்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

oOo

ஆக…. விக்ரமின் ஹீரோ கமல் கூட அல்ல. அது லோகேஷ்தான். இன்னமும் கேட்டால் அன்பறிவ், அனிருத், கிரிஷ் (ஒளிப்பதிவு) பிலோமின் ராஜ் (எடிட்டிங்) உள்ளிட்ட டெக்னிக்கல் டீம் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. குறிப்பாக ஆக்ஷனும் பிஜிஎம்மும் கூட்டணி சேர்ந்து கை கோர்த்து பின்னிப் பெடல் எடுத்திருக்கிறது. தியேட்டர் எபெக்டில் பார்ப்பது உத்தமம்.

கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியையும், பழைய விக்ரம் பாத்திரத்தையும் திரைக்கதையில் உறுத்தாமல் நன்றாகப் பொருத்தியிருக்கிறார்கள். முதல் பாதியில் கமலுக்கு கூட அத்தனை ஸ்பேஸ் இல்லை. மாறாக ஃபகத் பாஸில் இறங்கி அடித்து நொறுக்கி விளையாடியிருக்கிறார். பார்ப்பதற்கு செளகார்பேட்டையில் பான்பராக் விற்கிற சேட்டுப்பையன் மாதிரி சாதாரண தோற்றத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் எதைச் செய்தாலும் நம்பும்படியாக இருக்கிறது. விசேவின் பாடி லேங்வேஜூம் நன்று.

oOo

‘இது ஏன் Revenge Story அல்ல’ என்று நரேனுக்கு விளக்கும் காட்சியில் கமலின் நடிப்பும் வசனமும் அருமை. (இதில் மட்டும் கமலின் கைங்கர்யம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரின் வாசனை அடிக்கிறது). இப்படி பல காட்சிகளில் அட்டகாசமாக ஜொலிக்கிறார் கமல். மற்றபடி பிரதான பாத்திரங்கள் அனைத்திற்கும் ஸ்பேஸ் வருவது போன்ற திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

சென்னையில் இத்தனை பெரிய Drug mafia gang இருக்குமா, ஏதோ கொலம்பிய தேசத்து பாப்லோ எஸ்கோபர் போல ராணுவம் மாதிரி இத்தனை ஆயுதங்கள் வைத்திருப்பார்களா என்றெல்லாம் யோசித்தால் உங்களால் படத்தை ரசிக்க முடியாது. லோகேஷ் உருவாக்கும் அந்த இருட்டு உலகத்தில் உங்களை ஒப்படைத்துக் கொண்டால் ஏறத்தாழ இரண்டரை மணி நேரமும் படு சுவாரசியம் என்பதை உத்தரவாதமாகச் சொல்ல முடியும்.

கமல் என்பதாலேயே படத்தைப் பற்றி நிறைய நெகட்டிவ், கிண்டல் அபிப்ராயங்கள் வரலாம். Just ignore it. தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாயத்தை லோகேஷ் போன்ற இளம் இயக்குநர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சமீபத்திய சாட்சியம் ‘விக்ரம்’.


3. Haran Prasanna

விக்ரம் (2022)

எங்கே நன்றாக இருந்துவிடுமோ என்கிற அச்சத்தைப் போக்கிய இயக்குநருக்கு நன்றி. முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வன்முறை வெறியாட்டம். ரத்தம் வெட்டு குத்து கொலை துப்பாக்கி வெடிகுண்டு மது போதை. உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் நடிகர்கள். என்ன செய்ய? மேம்போக்கான கதை. ஆனால் கமலுக்கு ரஜினியின் பேட்ட போல ஒரு திரைப்படம் அமைந்துவிட்டது. அப்படி இருந்தும் ஏன் எடுபடவில்லை? கொஞ்சம் கூட ரிலாக்ஸ் காட்சிகளே இல்லாத படம். முதல் நொடியில் இருந்து கடைசி நொடி வரை ஒரே மாதிரியான காட்சிகளைப் பார்க்கும் சலிப்பு. எதோ பெரிய ரகசியத்தைக் காப்பது போன்ற பில்டப், ஆனால் முதல் காட்சியிலேயே எல்லாம் எல்லாருக்கும் தெரியும். அப்ப எதுக்கு வெட்டி பில்டப்?

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் ஹேங் ஓவரில் இருந்து வெளி வரவே இல்லை. சில காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. காரணம் நடிகர்களின் அசாத்திய திறமை. இடைவேளை வரை ஃபகத் ஃபாசில் படம். அதற்குப் பின் கமல் படம். ஃபகத்தும் விஜய் சேதுபதியும் கலக்கி இருக்கிறார்கள். கமல் எனக்கு ஒட்டவில்லை. இசை தலைவலி. பத்தல பாட்டை ஒரே நிமிடத்தில் முடித்துக்கொண்ட இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

எல்லாரும் ஏஜெண்ட் படத்தில். தியேட்டரில் டிக்கெட் கொடுத்தவர் கூட ஏஜெண்ட் வினோத் என நினைக்கிறேன்.

கண்ணை ஸ்கேன் செய்தால் கதவு மூடும் திறக்குமாம். அவள் கண்ணை மூடிவிட்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு போகும் புத்திசாலி ஏஜெண்ட். அந்த செத்த ஏஜெண்ட்டைக் கொண்டு போய கண்ணைக் காமிச்சி கதவைத் திறந்து குழந்தையையும் அம்மாவையும் பத்திரமா அனுப்பி வெச்சிட்டு மீதி தலைவலி கிளைமாக்ஸைக் காட்டித் தொலைத்திருக்கலாமே மிஸ்டர் இயக்குநர்? (அப்டேட்: இதில் இயக்குநரை அன்டர் எஸ்டிமேட்‌ செய்துவிட்டேன் போல. இறந்தவர்களின் கண்ணில் ஸ்கேன்‌ செய்ய முடியாது என்கிறார்கள். I stand corrected.)

இது ஏன் பழிவாங்கல் படமல்ல என்று கமல் தரும் விளக்கம், இன்னுமாய்யா இதையெல்லாம் கட்டி அழறீங்க என்று கதற வைக்கிறது. மொக்கையான வசனம். ஒட்டாமல் நடிக்கும் கமல். மிடில சாமி.

குழந்தைகளும் பெண்களும் அவசியம் பார்க்கவும். அதன் பிறகு கமல் படம் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டிய அவசியம் இருக்காது.


4. Sridhar Narayanan

சூப்பர் ஹீரோ மாஸ்

“தம்பீ! ஃபார்முலாவை கரெக்ட்டா புடிச்சிட்டப்பா. நான் என்னமோ 40 வருஷமா பரீட்சார்த்த முயற்சியா செஞ்சிட்டிருந்ததாவும், இந்தப் படத்துல மட்டுந்தான் உன் வேலைல தலையிடாம இருந்திட்டேன்னும் ஊருக்குள்ளார ஒரே பேச்சா இருக்கு. இந்த மாதிரி குளோரிஃபையிங் மாஸ் ஹீரோ கதைகளை நான் என்னிக்கு வேணாம்னு சொல்லியிருக்கேன். என்ன, இந்த மீடியோகேர் ரசனைக்காரவங்கள சீண்டற மாதிரி அப்பப்ப பேசிடறதால, கடுப்பாகி இதெல்லாம் எனக்கு செட்டாகாதுன்னு இவங்களா முடிவு கட்டிடறாங்க. அந்த ரோஷத்துல ஏதாவது புதுமாதிரி நாலு கேரக்டர், பத்து கேரக்டர், புரோஸ்தெடிக் மேக்கப்பு, வசனம் இல்லாத படம், சைக்கோ கொலைகாரன்னு வீம்புக்கு செஞ்சு வச்சிடறது. அத அப்படியே நம்பிட்டாங்க போல. “

#VikramMovie

“தம்பீ! ஃபார்முலாவை கரெக்ட்டா புடிச்சிட்டப்பா. நான் என்னமோ 40 வருஷமா பரீட்சார்த்த முயற்சியா செஞ்சிட்டிருந்ததாவும், இந்தப் படத்துல மட்டுந்தான் உன் வேலைல தலையிடாம இருந்திட்டேன்னும் ஊருக்குள்ளார ஒரே பேச்சா இருக்கு. இந்த மாதிரி குளோரிஃபையிங் மாஸ் ஹீரோ கதைகளை நான் என்னிக்கு வேணாம்னு சொல்லியிருக்கேன். என்ன, இந்த மீடியோகேர் ரசனைக்காரவங்கள சீண்டற மாதிரி அப்பப்ப பேசிடறதால, கடுப்பாகி இதெல்லாம் எனக்கு செட்டாகாதுன்னு இவங்களா முடிவு கட்டிடறாங்க. அந்த ரோஷத்துல ஏதாவது புதுமாதிரி நாலு கேரக்டர், பத்து கேரக்டர், புரோஸ்தெடிக் மேக்கப்பு, வசனம் இல்லாத படம், சைக்கோ கொலைகாரன்னு வீம்புக்கு செஞ்சு வச்சிடறது. அத அப்படியே நம்பிட்டாங்க போல. “

“அடுத்த பிராஜெக்ட்லயாவது, உங்களோட மாறுபட்ட பார்வை, அறச்சீற்றம், சமூகப் பொறுப்புணர்ச்சி, மண்ணுக்கு நெருக்கமான கதைக்களன்னு பாத்து செஞ்சிடறேன் சார்”

“தம்பீ! சூப்பர் ஹீரோன்னு மாஸ் காட்டறதுதான் பெரிய ரிஸ்க். நாலு வருஷமா படம் வரலியேன்னு தூக்கி வச்சுக் கொண்டாடறாங்க. அதே குரூப்புதான் இவன் பாப்பான், இல்ல பெரியாரிஸ்ட், இரண்டுங்கெட்டான், குழப்பவாதின்னு எல்லாத்தையும் போட்டு மிதிச்சு கவுத்தி விட்ருக்காங்க வயிறெரிஞ்சு வசைபாடறதுக்கு ஆள் பஞ்சமே கிடையாது இங்க. அலங்காரத்துக்கு மேல போடற கார்னிஷிங்ல்லாம் மார்கெட்டிங் போது பாத்துக்கலாம். வசூல் கணக்குக்கு படம் செய்யனும். அதான் சோறு. அதைக் கெடுத்திடாமப் பாத்துக்க.”

“உங்க படங்கள்ல இருந்த டெப்த், அந்த ஃப்ரெஷ்னெஸ்ல்லாம்தான் இப்பவும் நாங்க பேசி புளகாங்கிதமாவோம் சார். அதில ஒரு பத்து பெர்சென்ட்டாவது அசீவ் பண்ணா போதும் சார்”

“அதான் ஃபார்முலாவை சரியாப் புடிச்சிட்டீங்கன்னு முதல்லேயே சர்டிஃபிகேட் கொடுத்திட்டேனே. திரும்பி திரும்பி அதே வாய்சாலக்கை எங்கிட்டயே காட்டறீங்களே தம்பீ. புதுமாதிரி யோசிச்சு படம் கொடுத்தா பத்து பைசாக்கு பிரயோஜனப்படாது. எங்களத் தாண்டி யோசிக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளான்னு வண்டையா வண்டையா வந்து திட்டுவாங்க. அப்புறம் ஆர அமர பத்து வருஷம் கழிச்சு, போனாப் போகுதுன்னு ஒரு பாசிடிவ் விமர்சனக் கட்டுரை வரும். அதுக்கு இந்த பான் இன்டியா படம்னு புஜத்தை உசத்திக் காட்டறது, எவ்வளவு போலித்தனமா இருந்தாலும் சந்தோஷமா இருக்கு தம்பீ”

“இந்த டார்க் டோன்ல, ட்ரக் மாஃபியான்னு இப்படியே போகலாமா, இல்ல உங்க ரூட்ல நெக்ஸ்ட் காமெடிப் படம் மாதிரி ஏதாவது…”

“காமெடில்லாம் சீரியஸ் பிஸினெஸ் தம்பீ. சீரியஸ் படம்கிற பேர்ல இப்படியே காமெடியா, லைட்டா, ஹீரோக்களோட இமேஜ் மேல அப்படியே ஓட்டிடலாம். படம் போற ஸ்பீடுல யாராச்சும், ‘இவ்வளவு பெரிய ஆர்கனைஸ்டு டிரக் மாஃபியால்லாம் மெட்ராஸ்ல எப்படி…. ஆப்கானிஸ்தான் கொலபியால்லாம் கூட இவ்வளவு ஆள் பலம், ஆயுத பலத்தோட டிரக் ட்ராஃபிக்கிங் நடந்திருக்காது போலவே’ன்னு யோசிப்பங்களா. காமெடி படம்னா ஓவ்வொரு சீன்லேயும் லாஜிக் பாத்து குடைஞ்சி எடுப்பாங்கப்பா. கேள்வி கேக்கறது அவங்களுக்கு ஈஸி. விளக்கஞ் சொல்லி சொல்லியே எனக்கும் வயசாயிட்டு”

“அதான் சார்… உங்களுக்கு கொடுக்கிற லைஃப் டைம் அசீவ்மென்ட் அவார்டு ஃபங்ஷன் மாதிரி இந்தப் படத்தை செட் பண்ணிட்டோம். அப்படியே ரிலாக்ஸா எஞ்சாய் பண்ணுங்க 🙏


5. Saravanakarthikeyan Chinnadurai

பார்த்துக்கலாம்

லோகேஷ் கனகராஜ்: “ஒருவழியா விக்ரம் ஸ்க்ரிப்ட் வொர்க் முடிஞ்சுதுய்யா.”

உதவி இயக்குநர்: “ஸார், என்ன இது, இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரே சீன்தான் எழுதி இருக்கீங்க. அதுவும் ரெண்டே வார்த்தை. ‘Action Block’னு இருக்கு?”

லோ.க.: “என்ன பண்றது. டைம் இல்லய்யா. நாளைக்கு ஷூட்டிங் போகனும்.”

உ.இ.: “அப்புறம் எப்படி ஸார் எடுக்கறது?”

லோ.க.: “த்தா.. பார்த்துக்கலாம்.”

oOo

அ) கார்த்திக் சுப்புராஜ் பேட்டயில் செய்தது உண்மையாகவே ஒரு நல்ல ஃபேன்பாய் சம்பவம். லோகேஷ் கனகராஜ் சேனலுக்குச் சேனல் விக்ரம் ஒரு ஃபேன்பாய் படம் என்றார். அவர் சொன்னது ஃபஹத் ஃபாஸில் பற்றி என்று இப்போதுதான் தெரிகிறது. 🙁

ஆ) “விக்ரம் படத்தில் கமல்தான் விக்ரம் என்ற தகவலை ஸ்பாய்லர் போட்டு என் திரை அனுபவத்தையே கெடுத்துட்டாங்க, ப்ரோ.”

இ)

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை விக்ரம் படத்துடன் எப்படி எல்லாம் தொடர்புபடுத்தலாம் என யோசிப்பதற்குச் செலவழித்த மூளையில் கொஞ்சத்தை இரண்டாம் பாதி திரைக்கதையை ஒழுக்கமாக எழுதுவதில் பயன்படுத்தி இருக்கலாம். சும்மா சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஈ)

சில இடங்களில் கமலிடம் பிக்பாஸில் பேசும் வாடை தெரிந்தது. 🙁#விக்ரம்

உ)

“ப்ரோ, நீங்க கமல் ஃபேன்தானே?”

“ஆமா.”

“அப்புறம் ஏன் இவ்வளவு தீவிரமா விக்ரம் படத்தை விமர்சிக்கிறீங்க?”

“கமல் ஃபேன் என்பதால்தான் நேர்மையா விமர்சிக்கிறேன். என்ன கொடுத்தாலும் சப்புக் கொட்டிச் சாப்பிட நாங்க ரஜினி, விஜய், அஜீத் ஃபேனா? எங்களுக்குனு ஒரு இது இருக்கு.”

“அப்படினா?”

“நாயகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம், விருமாண்டி, தேவர் மகன், மகாநதி, குணா, தசாவதாரம், விஸ்வரூபம்னு நூறு பெஞ்ச்மார்க் படங்கள் ஏற்கெனவே இருக்கு. பரம்பரைக் கமல் ரசிகனுக்கு அதெல்லாம் தெரியும். பஞ்சத்துக்குக் கமல் ரசிகன் ஆனவனுகளுக்கு விக்ரமே போதும். அவ்ளோதான் மேட்டர்.”

ஊ)

லோகேஷ் கனகராஜுக்குக்குத் துப்பாக்கிகள் மீது அதீத ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

கைதி படத்தின் உச்சக் காட்சியில் கார்த்தி M134 Minigun-ஐத் தூக்கிச் சுடும் போது மயிர்க்கூச்செரிந்தது. விக்ரம் படத்திலும் கமல் பல விதத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டுக் கொண்டே இருக்கிறார். அந்த M2 Browning Machine Gun காட்சியும் கைதிக்கு இணையான சிலிர்ப்பை அளித்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அதே துப்பாக்கி அதை விடப் பிரமாதமாக கேஜிஎஃப்-2 படத்தில் காட்டப்பட்டு விட்டது (துப்பாக்கி முனையின் கொதிப்பில் சிகரெட் பற்ற வைக்கும் காட்சி) என்பதால் உணர்ச்சிவசப்படாமல் பார்த்து முடிக்கிறோம். விக்ரமில் பிரிட்டிஷ் காலப் பீரங்கி எல்லாம் பயன்படுத்துகிறார் கமல். குடியரசு தின அணிவகுப்பு போல் எப்படியும் கமல் டாங்க் ஓட்டிக் கொண்டு வருவார் என இறுதி வரை எதிர்பார்த்திருந்தேன்.

எ)

எதிர்பார்த்த அளவு இல்லை.

டிஎஸ்பி துரைசிங்கம் பார்க்க வேண்டிய நார்கோடிக்ஸ் கேஸை சர்வதேச ஏஜெண்ட் விக்ரம் ஏன் பார்க்க வேண்டும்! அவர் ஏஜெண்ட் என்பதற்கான தடயங்கள் ஏதும் படத்தில் இல்லை – கொஞ்சம் ஆயுதங்களும் சில பழைய சகாக்களையும் காட்டுவது தவிர. படம் நெடுக வாயிலேயே விக்ரம் குறித்து பில்டப் தருகிறார்களே ஒழிய செயலில் ஏதும் காட்டுவதில்லை (இறுதியில் கால் எலும்பை வெட்டும் காட்சி தவிர). அது ஒரு பெரிய letdown.

முதல் பாதி ஒரு நல்ல துப்பறியும் படமாகத் தொடங்கி இரண்டாம் பாதியில் சாதாரண பழி தீர்க்கும் மசாலா + செண்டிமெண்ட் சினிமாவாகச் சுருங்கிப் போகிறது – nothing exciting. அதுவும் க்ளைமேக்ஸில் நாயகனும் வில்லனும் ‘ஒத்தைக்கு ஒத்தை’ மோதும் காட்சிகள். அனாவசியமாய் சூர்யா. பழைய விக்ரம் படத்துடன் லிங்க், கைதி படத்துடன் லிங்க் எல்லாம் தேவையற்ற செருகல்கள். இது ஏன் விக்ரம் பாத்திரமாக இருக்க வேண்டும்? வேறொரு ஆளாகவும் இருக்கலாம்தானே!

மாஸ்டரில் விஜய்க்காகச் சமரசம் செய்தது போல் இல்லாமல் இது பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் படமாகவே வந்திருக்கிறதுதான். ஆனால் மாநகரமும் கைதியுமே இதை விடச் சிறந்த படங்கள்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நன்று.

ஃபஹத் ஃபாஸில் நல்ல நடிப்பு. விஜய் சேதுபதி அறிமுகக் காட்சி நன்று. ஆனால் மாஸ்டர் பவானி அளவு intense பாத்திரமாக இதில் அவர் ஏற்றிருக்கும் சந்தனம் பாத்திரம் திரளவில்லை. கமல் ஹாசனின் பங்களிப்பு பரவாயில்லை.

பார்க்கலாம்.

oOo

என் தர்க்க ஊகம்

லோகேஷ் கனகராஜ் கைதி-2 திரைக்கதை எழுதி இருக்கிறார். சூர்யா போல் யாரையாவது நாயகனாக நடிக்க வைக்கும் திட்டமாக இருக்கலாம். இடையே கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு வருகிறது. புதிதாக ஒரு கதை யோசித்துச் சொல்ல அவகாசம் குறைவு. ஆனால் கைவசம் இருப்பதோ கைதி-2. அந்தப் பெயரில் கமல் நடிக்க முடியாது. கார்த்தி படத்தின் sequel-ல் கமல் நடிப்பதா! அப்போது அவருக்கு உதித்த innovative ideaதான் பழைய ஏஜெண்ட் விக்ரமை கைதி-2வில் நாயகன் ஆக்குவது. அது கமலுக்கும் குஷியூட்டும். புதிதாக யோசிக்காமல் கைவசம் இருக்கும் ஸ்க்ரிப்ட்டையே பயன்படுத்தியது போலவும் ஆயிற்று. எனவே விக்ரம் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்க்ரிப்ட் புதிதாக எழுதியது போலவும் அதில் தன் முந்திய படமான கைதிக்கு லேசாகத் தொடர்பு இருப்பது போலவும் வெளியில் தோன்றுமாறு பார்த்துக் கொண்டார். இது கைதி-2 என்பதால்தான் முதற்பாதியில் விக்ரமுக்கு அதிகப் பங்களிப்பு ஏதும் இல்லை. ஆனால் கைதி படத்தின் தொடர்பை ரசிகர்களிடம் சொல்லாவிடில் லோகேஷ் எதிர்பார்த்த எதிர்வினைகள் கிடைக்காது. ஆனால் கைதி-2 என்று வெளிப்படையாக அடையாளப்படுத்தவும் இயலாது. அதனால்தான் வெளியீட்டு நாளுக்கு முந்தைய நாள் கைதி பார்த்து வாருங்கள் எனப் பட்டும் படாமல் கோரிக்கை வைத்தார்.

oOo

*Spoiler Alert*

சரி, பதறாதீங்கடா/டி. விக்ரமின் நல்ல விஷயங்களையும் சொல்லி விடுகிறேன்.

1) ஃபஹத் ஃபாஸிலின் நடிப்பு. (ஆனால் இது அவரது சிறந்த நடிப்பாக இருக்க முடியாது என்றும் ஊகிக்க முடிகிறது. ஒரு மசாலா பட போலீஸ் அதிகாரி பாத்திரத்தின் குறுகிய எல்லைக்குள்ளேயே இப்படித் தீ மாதிரி நடித்திருக்கிறார் எனில்…)

2) Reveal of agent Tina. விஸ்வரூபத்தில் கமல் வெளிப்படுவதன் மினியேச்சர் இது.

3) விஜய் சேதுபதி அறிமுகக் காட்சி, அதில் அவரது உடல் மொழி மற்றும் தன்னம்பிக்கை.

4) இறுதிக் காட்சியில் கமலின் கால் எலும்பை வெட்டி விட முனையும் இடத்தின் ட்விஸ்ட்.

5) பாலியல் தொழிலாளி தொடர்பான காட்சிகள். Brilliant and poetic.

6) அநிருத்தின் பின்னணி இசை (அதில் சில பகுதிகள் Tenet காப்பி & இளையராஜாவின் இசை என்றாலும்) + Wasted பாடல்.

7) பல காட்சிகளின் நேர்த்தியான ஒளிப்பதிவு.

😎 முற்பாதியில் நாயகன் அதிகம் வர மாட்டான். ஆனால் அவனைப் பற்றி மற்ற எல்லோரும் பேசிப் பேசியே அவன் பற்றிய ஒரு சித்திரத்தை மெல்ல மெல்ல நமக்குத் தீட்டி அளிப்பார்கள். அங்கே பார்வையாளன் இருப்பது ஃபஹத்தின் இடத்தில். அந்த உத்தி நன்று. (பாராவின் யதி நாவலில் நாயகன் இறுதி வரை நேரில் வர மட்டான். அவன் பற்றி மற்றவர்கள் சொல்லும் கதைகள் வழியே அவனை நாம் உருவாக்கிக் கொள்வோம். அது மாதிரி ஒரு attempt.)

9) ஃபஹத் தன் கல்யாணத்தை மறப்பது, பின் கல்யாணம் செய்து கொள்ளும் காட்சி.

10) கமல் screen presence (Note: நடிப்பு அல்ல).


6. Santhosh Narayanan Chenthilkumar

மாஸ் சினிமா

விக்ரம் பார்த்தேன். எனக்கு மாஸ் படங்கள் பிடிக்கும். சினிமாவை தியேட்டரில் பார்ப்பது என்பது கூட்டத்தில் கரைந்து போய் ‘மாஸ்’களில் ஒன்றாக ஆவது. ‘கூட்டத்தில் தனியே’ என்று மலையாளத்தில் சொல்வார்கள் ஆனால் இது போன்ற மாஸ் சினிமாக்கள் பார்க்கும்போது கூட்டத்தில் தனியனாகவும் கூடவே கூட்டத்தில் ஒருவனாகவும் இருக்கும் இரட்டை மனநிலை எல்லாருக்கும் வாய்க்கும். தனியன் மிகவும் லாஜிக்கானவன், அவனுடைய அறிவு, அகங்காரம், புத்திசாலித்தனம், கேள்வி கேட்கும் திறன் எல்லாம் திரையுடன் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் கூட்டத்தில் ஒருவன் சடங்குகளின் வெறியாட்டு திரளில் எக்ஸ்டசி மனநிலையில் கரைந்து விடுபவன். அவனுக்கு கொண்டாட்டமும் இன்பமும் மட்டுமே அப்போதைய மனநிலையாக இருக்கும்.

அந்த தனியனுக்கும் கூட்டத்தில் ஒருவனுக்குமான போராட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை தீர்மானிப்பது அந்த சினிமாவின் இயக்குனரே. வெறியாட்டில் பங்கு கொள்ளும் பார்வையாளனை தனியன் என்று உணரச்செய்ய வாய்ப்பளிக்காத தலைமை சாமியாடியே அந்த இயக்குனர். ஆம் மாஸ் சினிமா என்பது சினிமாவுக்குள் தனித்ததொரு ‘ஆர்ட் ஃபார்ம்’ என்றே நான் நினைக்கிறேன். மாஸ் சினிமாக்களை வெறுப்புடன் பார்க்கும் நோக்கம் எனக்கு இல்லை. வாய்ப்பு கிடைத்தால் நானே அப்படி ஒரு மாஸ் சினிமாவை செய்யும் விருப்பம் உள்ளவன் தான்.

பார்வையாளனுக்கு புத்திசாலித்தனம் அப்போது வேலை செய்ய தேவை இல்லை என்று சொன்னேன் அல்லவா? ஆனால் இயக்குனருக்கு கண்டிப்பாக அது வேலை செய்யவெண்டும். ஆதியில் வேட்டை முடித்து சமைத்து உண்டு தீப்பந்த வெளிச்சத்தில் ஓய்வெடுக்கும் இனக்குழுவின் நூறு மனிதர்களை மலையடிவார குளிரில் உட்கார வைத்து ஆடலும் பாடலுமாக ஏதேனும் தோலிசைக்கருவியுடன் கதை சொல்லி இருப்பான் அல்லவா ஒருவன். அந்த இருநூறு கண்களையும் செவியையும் இருட்டில் கூராக்கி தன்னிலிருந்து அசைக்க முடியாமல் செய்த ஒருவன். குளிர் மறந்து நேரம் மறந்து காலம் மறந்து அந்த மானுட ஜென்மங்கள் கதைசொல்லியின் உதட்டசைவில் உடலசைவில் கருவியை இசைக்கும் கையசைவில் பெருகி பெருகி வரும் கதையில் தங்களை கரைத்துக்கொண்டிருப்பார்கள் அல்லவா. கதைக்குள் திளைத்திருப்பார்கள் அல்லவா. அந்த கதைசொல்லியின் நுட்பமும் புத்திசாலித்தனமும் இது போன்ற மாஸ் இயக்குனர்களுக்கு வேண்டும் என்றே சொல்வேன்.

விக்ரமையே எடுத்துக்கொள்வோம். அதன் முதல் பாதி அவ்வகையான அனுபவம். அமர் கதாபாத்திரத்துக்குள் புகுந்து கொண்ட நம் காலத்தின் சிறந்த நடிகன் ஒருவனின் திறன் நம்மை அசரடிக்கிறது. சந்தனம் பாத்திரத்தின் துவக்கம், மற்றும் துண்டு துக்கடா பாத்திரங்கள், கர்ணனை பற்றிய தகவல்கள் அமரின் தேடல்கள் வழியாக உருவாகி வளர்ந்து வருவதில் கிடைக்கும் பரவசம், கர்ணன் கதாபாத்திரத்தின் எதிர்பாராத்தன்மை, அவன் விக்ரமாக மாறி தியேட்டரை சல்லியாக்கி பார்வையாளர்களை குலவையிட்டு சன்னதம் கொள்ள செய்யும் உச்சக்கட்ட இடைவேளை. திரையை ஆட்டக்களமென கொண்டு இந்த கதாபாத்திரங்களை ஆடித்தீர்க்கும் ஆற்றல் கொண்ட நடிகர்களின் களியாட்டு போல இருக்கிறது அந்த முதல் பாதி. இங்கே ஊடும் பாவுமாக குறுக்கும் மறுக்குமாக கதையை நெய்து பெருக்கும் திரை எழுத்தாளனின்/இயக்குனனின் புத்திசாலித்தனம் பார்வையாளனை திணறடிக்கிறது.

ஆனால் இரண்டாம் பாதி. ‘ஸ்கிரிப்ட் பேப்பரை எடுத்துட்டு வரல சார்’ என்ற உதவி இயக்குனரிடம் ‘த்தா… பாத்துக்கலாம்’ என்று இயக்குனர் சொல்லி இருக்கலாம். இருக்கிற வெப்பன்ஸை எல்லாம் வைத்து கொத்தியும் கொதறியும் வெட்டியும் சுட்டும் முடிக்கும்போது படமே முடிந்து போய்விடும் என்கிற நம்பிக்கை. ஃப்ரீ ஃபயர் போன்ற வீடியே கேம்களை விளையாடும் இளந்தலைமுறைகளுக்கு இந்த வேட்டுச்சத்தமே கூக்குரலிட்டு கூஸ்பம்ஸ் கொள்ள போதுமானதாயிருக்கிறது என்பதற்கு நான் சாட்சி. கடைசி முக்கால் மணி நேரம் ஏதோ காயலாங்கடைக்குள் இருந்து விட்டு வந்த ஃபீலிங்கை அடைந்தேன். துருவேறாத எதுவும் திரையில் இல்லை. அப்போது தான் திரளுக்குள் நான் தனியனானேன். அல்லது நான் ஏதேனும் தவற விட்டேனா?

நேற்று மாலை அட்லீயின் ஜவான் டைட்டில் டீசரை பார்த்தபோதும் அதில் துப்பாக்கிகளை துடைத்து வைத்து தயாராகிறார் ஷாருக்கான். போனமாதம் முழுக்க ராக்கிபாய் சோஷியல் மீடியாவில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்.

புழு போன்ற சினிமாக்களை ஒரு இ-புக் படிப்பது போல நான் லேப் டாப்பில் பார்த்துக்கொள்வேன். ஆனால் தியேட்டரில் மாஸுடன் தூசாகி நான் தூய்க்கவிரும்புவது இம்மாதிரி மாஸ் படங்களை தான் என்றாலும், ஒரு மாஸ் சினிமா ரசிகனாக, மாஸ் சினிமாக்களில் துப்பாக்கிகள் தோட்டாக்கள் மட்டுமல்லாது திரைக்கதையின் நுட்பங்களும் வேண்டும் என்றே மனம் இறைஞ்சுகிறது.அவ்வகையில் லோகேஷ், நெல்சன், அட்லீ இன்னபிற இயக்குனர்களை ஒரு ரசிகனாக நான் கொண்டாடும் வேளையிலும் கொஞ்சம் கவனமாக இருக்கும் படி அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


7. Abul Kalam Azad

விக்ரமைப் பார்க்க ஆயத்தமாதல்

அனைத்து ரசனைகளுக்கும் பயிற்சி வேண்டும் என நம்புகிறோம், பேசுகிறோம், பரிந்துரைக்கிறோம்.

கவிதைக்கு… அவரை வாசித்தாயா, இவரை வாசித்தாயா?

திரை இசைக்கு… இவரைக் கேட்டிருக்கிறாயா, அவரைக் கேட்டிருக்கிறாயா?

கதை, நாவல், உலகப்படம், இந்தியப் படம், தமிழ்ப் படம் அனைத்துக்கும் நம்மிடம் ஒரு பட்டியல் உள்ளது.

போலவே, சண்டைக்காட்சிகளுக்கு நெடும்பட்டியல் முன்னம் இட்டிருந்தேன்.

இப்போது விக்ரம் ஜுரத்தால், அதைச் சுருக்கி சிலதைச் சேர்த்து இன்று இருபத்தைந்தில் நிறுத்துகிறேன்.

இந்த இருபத்தைந்து சண்டைக்காட்சிகளையும் + எம்ஜிஆரின் சண்டைக்காட்சிகளையும் பார்த்தால் தமிழ்த் திரையில் சண்டைக்கலைஞர்கள் செய்திருக்கும் சாகசங்கள் தெரியும்.

கவனிக்க: இவை எம்ஜியாரல்லாத சண்டைக்காட்சிகள்

மீண்டும் கவனிக்க: நான் ரசித்து இங்கு உங்களுடன் பகிர்ந்த சில சண்டைக்காட்சிகள் இதில் இல்லை, போலவே நீங்கள் ரசித்த சில சண்டைக்காட்சிகளும் இதில் இருக்காது 🙂

1. தசாவதாரம், கமல் – கோயில் சண்டை, பயிற்சி: தியாகராஜன்? கனல் கண்ணன்?

2. பாஷா, ரஜினி – ஆனந்தராஜ் குழுவினர், பயிற்சி: ராஜா

3. புலன் விசாரணை, விஜயகாந்த் – ஷரத் குமார், பயிற்சி: சூப்பர் சுப்பராயன்

4. தேவர் மகன், கமல் சிலம்பச் சண்டை, பயிற்சி: விக்ரம் தர்மா

5. என்னை அறிந்தால், அஜீத் – அருண், பயிற்சி: ஸ்டண்ட் சில்வா

6. விஸ்வரூபம், கமல் – முக்தார் கான் குழுவினர், பயிற்சி: ரமேஷ், பர்வீஸ், ஃபெரோஸ், லீ.

7. மூன்றெழுத்து, ரவிச்சந்திரன் – ஆனந்தன், மலைச் சண்டை, பயிற்சி: திருவாரூர் M.S. தாஸ்

8. கண்ணே பாப்பா, சந்திரபாபு – குழுவினர், சிலம்பச் சண்டை, பயிற்சி: மாடக்குளம் அழகிரிசாமி

9. அன்புக்கு நான் அடிமை, ரஜினி – R.V.T.மணி, கடைசிச் சண்டை, பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்

10. சட்டம் என் கையில், மிஸ். எலிசபத், கடைசிச் சண்டை, பயிற்சி: கிருபா

11. எங்க பாப்பா, ரவிச்சந்திரன், நான் போட்டால் தெரியும் பாடல், பயிற்சி: திருவாரூர் எம்.எஸ்.தாஸ்

12. என் தம்பி, சிவாஜி – பாலாஜி கத்திச்சண்டை, பயிற்சி: ஸ்டண்ட் சோமு

13. முரட்டுக்காளை, ரஜினி – குழுவினர் ரயில் சண்டை, பயிற்சி: ஜூடோ ரத்தினம்.

14. எனக்குள் ஒருவன், நேபாளி கமல், கராத்தே போட்டி, பயிற்சி: சூப்பர் சுப்பராயன்

15. திருமதி பழனிச்சாமி, சத்யராஜ், சிலம்பம், பயிற்சி: விக்ரம் தர்மா

16. ஏழாம் அறிவு, சூர்யா – டோங் லீ, பயிற்சி: பீட்டர் ஹெய்ன்

17. அன்னியன், விக்ரம், டோஜோ சண்டை, பயிற்சி: பீட்டர் ஹெய்ன்

18. நீலமலைத் திருடன், ஈ.ஆர்.சகாதேவன், சிலம்பம், பயிற்சி: ஸ்டண்ட் சோமு

19. சி.ஐ.டி.சங்கர், ஜெய்சங்கர், ஸ்டடி ரூம் சண்டை, பயிற்சி: ஆர். எஸ். பாபு

20. ரங்கா, ரஜினி, டான்ஸ் கிளப் சண்டை, பயிற்சி: ஹயாத்

21. இணைந்த கைகள், ஒகேனக்கல் சண்டைக் காட்சிகள், பயிற்சி: ஜூடோ ராமு

22. பட்டாஸ், தனுஷ் குழுவினர், கராஜ் சண்டை, பயிற்சி: திலீப் சுப்பராயன்

23. மாநாடு, சிம்பு குழுவினர், திருமணக்கூடச் சண்டை, பயிற்சி: ஸ்டண்ட் சில்வா

24. அசுரன், தனுஷ் குழுவினர், வேல் கம்பு, அரிவாள் சண்டை, பயிற்சி: பீட்டர் ஹெய்ன்

25. கபாலி, ரஜினி, ‘கபாலிடா’ சண்டை, பயிற்சி: அன்பறிவ் (அன்பு + அறிவு, இருவர்)

#Anbariv

எங்களுடைய இளமைக்காலத்தில் திரையில் குடிகாரச் சண்டைக்கு ஈர்த்து வைத்தவர் ‘ட்ரங்க்கன் மங்க்’ திரைப்படத்தில் கோர்டன் லியூ. ஆண்டு 1982+

நாற்பது ஆண்டுகளுக்குப் பின், 2022 😉 விக்ரமில் கமல் குடிகாரச் சண்டை ‘ஜிம் ஃபைட்’

(நாற்பது ஆண்டுகளாகியும்… மம்மீ, நான் வளரவே இல்லை 😉 அதே பழைய ஆசாத்தான்)

கமலுக்கு அது மிகச் சிறிய சண்டைக்காட்சிதான்… அந்த டம்பெல்ஸ் ஹாமர் பன்ச்… அதெல்லாம் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.

Product Positioning

1.

விக்ரம் வந்து பால் பாக்கெட் ‘ஆவின் ஆர்ஞ்ச்’தான் வாங்குறாரு.

அது நம்ம வாங்குறதுதான்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

2.

குழந்தை உணவு NAN Pro???தான் வாங்குறாரு.

அதுவும் நாம குழந்தைக்கு வாங்குனதுதான்.

Bebelac, Nurababyனு நாம சவூதிலேர்ந்து வாங்கிக்கினு வரவான்னா, அதெல்லாம் தேவையில்ல NAN Pro இங்கியே வாங்கிக்கலாமுன்னு சொல்லுவாங்க.

இந்த ரெண்டு தயாரிப்பும் படத்துல ரெண்டு செகண்டுகூட வராது. ஆனா, ரெண்டுக்கும் குளோசப் இருக்கு.

NAN Pro சந்தேகமாவே இருக்கு, அது நான் ப்ரோதானானு.

ஆவின் ஆரஞ்ச் சந்தேகமில்லாம அதுதான்.

மூன்று சண்டைக்காட்சிகள்:

உடற்பயிற்சிக்கூடத்தில், திருமண விழாவில், குழந்தையைக் காப்பாற்றும்போது இம்மூன்று சண்டைக்காட்சிகள் அட்டகாசமாக வந்துள்ளன.

விஜய் சேதுபதி – கமல் கடைசிச் சண்டை, கமல் அறிமுகமாகும் சண்டை இரண்டையும் குறை சொல்வதற்கில்லை. இன்னொரு முறை பார்த்தால், அந்த இரண்டு சண்டைகளிலும் உள்ள நுட்பங்கள் பிடிபடலாம். இதற்காகவே இன்னொரு முறை பார்ப்பேன்.

‘குளோஸ் ரேஞ்ச்’ முழங்கைத் தாக்குதலில் திலீப் சுப்பராயனும் (பட்டாஸ், கராஜ் ஃபைட்), ஸ்டண்ட் சில்வாவும் (என்னை நோக்கிப் பாயும் தோட்டா, லிஃப்ட் ஃபைட்) வேள்வி நடத்தியிருப்பார்கள். அதில் இப்போது அன்பறிவின் நேரம். கமலுக்கு குழந்தையைக் காப்பாற்றும் சண்டையில் முழங்கைத் தாக்குதலில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

கமல் – விஜய் சேதுபதி கடைசிச் சண்டையில் சேதுபதியை வீழ்த்தும் கடைசிக் குத்து ‘அப்பர் கட்’ அடித்து கமல் கையை நிறுத்தும் காட்சியை நமக்குக் காட்டும் கோணத்தை யார் வைத்தாரோ அவர் இன்னுமொரு நூற்றாண்டு வாழட்டும்.

நடிகரின் திறனுக்கேற்ப சண்டைக்காட்சிகளை அமைப்பது கலை. விஜய் சேதுபதியின் உடலியக்கத்துக்கு ஏற்றாற் போல சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளது அட்டகாசம். ஊக்கமருந்து உட்கொண்டதும் விஜய் சேதுபதிக்கு உடல் திறன் கூடுவதும் அதைத் தொடர்ந்த வீச்சுகளும் யாருக்கு இருமுகனை (நடிகர் விக்ரம்) நினைவுபடுத்தியதோ இல்லையோ, எனக்கு நினைவுபடுத்தியது. நல்லவேளையாக அதன் அதீதம் இதில் இல்லை.

இன்னொரு முறை பார்த்த பின் மற்றவை.

பி.கு.:

1. அரைகுறை ஆடை நடனங்களில்லாத, எந்த மத அடையாளங்களையும் கேங்க்ஸ்டர்களுடன் தீவிரமாகத் தொடர்புபடுத்தாத ஒரு கேங்க்ஸ்டர் படம். அதற்காகவே பாராட்டலாம்.

2. சூர்யா சார் தாடிகீடிலாம் வெச்சுக்கினு பார்க்றப்போ முகேஷ் திவாரி (போக்கிரி வில்லன் சார்) ஜாடைல தெரியுறது ஏனக்கு மட்டுமா?

3. ஏன் சார், டீ மக்கு டேபிள் மேலேர்ந்து கீழ வுழும்போது கப்புன்னு புடிச்சாங்களே அந்தம்மா, அப்பவே தெரியவேணாமா இது யாரோ ட்ரைண்டு மார்ஷல் ஆர்ட்டிஸ்ட்னு… இன்னாமோ ஃபகத் பாசில் சீக்ரெட் சர்வீசு போங்க சார். (நிச்சயமா இது ஸ்பாய்லர் இல்ல)

4. ஹரீஷ் உத்தமன் பேசற வசனம் இல்லீன்னாலும் நாங்க ‘கைதி’ படத்தோட தொடர்புபடுத்தியிருப்போம் சார்.

5. அர்ஜுன் தாஸ் பாருங்க, எதிர்காலத்துல பெரிய வில்லனா வந்தாலும் வந்திருவாரு.


8. Singara Velan :: World Movies Museum 2.0

Logline.

இதற்கு முன் தமிழ் திரையுலகில் இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ‘விக்ரம்’ அந்த சாதனையை செய்திருக்கிறது.

விக்ரம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் Logline அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனருக்கு

வாழ்த்துகள்!

Logline யை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு படத்திற்கு Logline எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதையே நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

“Vikram is about a retired police officer who goes on a mission to rescue an abducted government official.”

“கடத்தப்பட்ட ஓர் அரசாங்க அதிகாரியை மீட்பதற்காக ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் பயணமே விக்ரம்.”

ஒரு Loglineல் அடிப்படையான மூன்று விஷயங்கள் அவசியம் இடம்பெற வேண்டும். அவை:

1. Protagonist.

2. Inciting Incident.

3. Main Conflict.

Protagonist என்பது முதன்மை கதாப்பாத்திரம் அல்லது ஹீரோ.

Inciting Incident என்பது ஒரு ஹீரோவை தன்னுடைய இலக்கு அல்லது ஒரு முக்கியமான பணியை செய்வதற்காக அவனைத் தூண்டும் அந்த காட்சியை குறிக்கிறது.

Main Conflict என்பது ஒரு ஹீரோ தன் இலக்கை நோக்கி பயணிக்கும்போது அவனுக்கு ஏகப்பட்ட தடைகள் ஏற்படும். அதில் முதன்மையான தடைதான் Main Conflict.

நீங்கள் எழுதும் Loglineல் இவை அனைத்தும் இருந்துவிட்டால் அது சிறப்பான ஒன்றாக மாறிவிடும். இப்போது விக்ரம் Loglineல் இவை எங்கே இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி – Protagonist.

கடத்தப்பட்டவரை நான் மீட்கிறேன் என்று ஹீரோ முடிவெடுக்கும் அந்த காட்சி – Inciting Incident.

ஹீரோ தன் பயணத்தில் மேற்கொள்ளும் முதன்மையான பிரச்சினை – Main Conflict. இதில் பிரச்சினைகள்(Conflict) வெளிப்படையாக இருக்காது. திரைமறைவாகத் தான் இருக்கும்.

விக்ரம் படத்தின் Loglineல் இவை அனைத்தும் சரியாக பொருந்தி இருக்கிறது.

அடுத்து, Logline எழுதும்போது கவணிக்க வேண்டிய ஒன்று, முற்றுப்புள்ளி இல்லாமல் ஒரே வாக்கியத்தில் இதை எழுத வேண்டும். அப்போதுதான் படிப்பவரின் கவனத்தை அது பெறும். அதேசமயம் ஆங்கிலத்தில் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவது போல் தமிழில் எழுதுவது கடினம். 99 சதவீதம் இரண்டு வாக்கியங்களில் தான் தமிழில் எழுத முடியும். ஒரே வாக்கியத்தில் முப்பது வார்த்தைகளுக்குள் ஒரு Loglineயை எழுதிவிட்டால் மிகவும் சிறப்பு.

இறுதியாக, அனைவரும் தங்கள் திரைக்கதைக்கு அவசியம் ஆங்கிலத்தில் ஒரு Loglineயை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைத்து மொழி ரசிகர்களிடமும் உங்கள் படத்தை கொண்டு போய் சேர்க்க முடியும். விக்ரம் படத்தின் Logline கூட ஆங்கிலத்தில் தான் வெளியிடப் பட்டிருக்கிறது.


9. B R Sreenivasan

Tamil Film Music and Songs – Lyrics

If in today’s Tamil movies, in a serious scene if the villain shouts and calls “Dei Michael, Kabali, Manikam engada irukeenga” and they all run and come and say “Yes Boss”, how will it be?

That’s how is Kamal Hassan’s Pathala Pathala Kuthu song from Vikram movie. In 2022, words like Utalakadi, Pakkiri, etc are used in the lyrics. He sings in such an old fashion. The entire lyrics, song and way of rendition is so 1970s and 1980s. Shows Kamal has not evolved or changed one bit with regards to his mindset about “Madras Bashai/Madras Slang”. He is stuck in his own and old world. The song and lyrics and it’s rendition is an example of a typical 1970/80 Mylapore/Alwarpet person’s mindset and view about a Kuthu song and the Madras Bashai.

Pathala Pathala is pathetic, cringe and cliche.

Grow up Kamal.

PS: On the contrary I love Dippam Dappam song from Kaathuvaakula Rendu Kaadhal movie. It’s so grounded, authentic and relatable. The music and lyrics are simple and funny and enjoyable. And Kathija is 🔥

Dippam Dappam – 1

Pathala Pathala – Minus 1876547993235678


10. Prabu K Sankar :: படைப்பு-Padaippu

விக்ரம்

எங்கோ தூரத்திலிருந்து தன் மானசீக குருவின், ஆதர்ச நாயகனின் திரைப்படங்களைப் பார்த்து திரைமொழி கற்றுக்கொண்ட நவீன ஏகலைவனிடம், கமல்ஹாசன் என்னும் துரோணாச்சாரியார்

அவனது கட்டைவிரலை கேட்காமல், தனக்கென ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டால் என்ன நடக்குமோ??

அதைத்தான் நிகழ்த்தியிருக்கிறார்

லோகேஷ் கனகராஜ் என்னும் ஏகலைவன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்றைய மாஸ் ஹீரோக்களான விஜய்-அஜித் திரைப்படங்களுக்கு இணையாக, இரவு காட்சிகளில்கூட திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. திரை அரங்கிற்குள் நுழைவதும், வாகனங்களை பார்க் செய்வதும் அத்தனை பெரிய சவாலான காரியமாக மாறியிருக்கிறது.

அப்படி என்ன மாயம் நிகழ்ந்திருக்கிறது

விக்ரம் திரைப்படத்தில்??

திரைப்படம் முழுக்க கதாநாயகன் மட்டுமே

ஆக்கிரமித்து இருக்கிறாரா???

இல்லை

கதாநாயகன் கதாநாயகியுடன் இரண்டு குத்து பாடலும், வெளிநாட்டில் ஒரு டூயட் பாடலும் பாடி ஆடுகிறாரா???

இல்லை

கதாநாயகனும் வில்லனும் அடிக்கடி சந்தித்து பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார்களா???

இல்லை

நான்கு நிமிடத்திற்கு ஒரு தரம் கேமராவைப் பார்த்து பஞ்ச் டயலாக் அடிக்கிறாரா???

இல்லை

கதாநாயகி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை வெறுமனே வந்து போய் இருக்கிறார்களா??

இல்லை

நெஞ்சைப் பிழியும் அண்ணன்-தங்கை, அம்மா சென்டிமென்ட் அதிகம் இருக்கிறதா??

இல்லை

ஒரு வெகுஜன கமர்ஷியல் சினிமாவுக்கான, எந்த வரைமுறைகளும் இல்லாமல், எப்படி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது??

கொஞ்சம் அலசுவோம்.

எத்தனை கோடிகள் செலவு செய்து திரைப்படங்களை எடுத்தாலும், கதாநாயகனின் பிம்பம் எத்தனை உயரத்தில் இருந்தாலும், ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவது அதன் திரைக்கதையும், அதை பார்வையாளர்களுக்கு கடத்தும் மிகச்சிறந்த நடிகர்களும் தான். இந்த இரண்டையும் நூற்றுக்கு நூறு நிறைவேற்றி இருக்கிறது

விக்ரம்.

இப்படி ஒரு உலகம் சென்னை போன்ற நகரத்தில் இயங்கி வருகிறதா??

இதெல்லாம் எப்படி சாத்தியம்??

பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொண்டோ அல்லது கொலை செய்து கொண்டோ போக முடியுமா?? என்ற எந்த கேள்வியையும், திரைப்படம் பார்க்கும் நேரத்தில், பார்வையாளர்களிடம் எழுப்பாமல், ஒரு புதிய உலகத்திற்குள் அவர்களை இழுத்துச் சென்று, இது வேறொரு களம், வேறொரு உலகமென உணர்த்தியிருக்கிறார் லோகேஷ். அவருக்கு முதலில் பாராட்டுகள்.

அடுத்ததாக இதில் நடித்திருக்கும் நடிகர்கள்.

பகத் பாசில், விஜய் சேதுபதி, கமலஹாசன், சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்குவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட, அத்தனை கவனமாக எழுதப்பட்டு, அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த நான்கு ஜாம்பவான்களை மீறி, Agent Tina என்ற ஒரு பெண் கதாபாத்திரம், அத்தனை கைதட்டல்களும் விசில் சத்தங்களையும் திருடிச் செல்கிறது. பல திரைப்படங்களில் ஷோக்கேஸ் பொம்மையாக வந்து செல்லும் சந்தானபாரதி, கெளதம், காயத்ரி போன்ற நடிகர்கள் லோகேஷ் திரைப்படத்தில் தனியாக தெரிவது பாராட்டப்பட வேண்டியது.

கோடிக்கணக்கில் செலவு செய்து படம் பிடித்தாலும், ஆயிரம் வகையான துப்பாக்கிகளை காண்பித்தாலும் கதாபாத்திரங்களின் கண்கள் பேச வேண்டும். அந்தக் கண்களே பார்ப்பவர்களை கட்டிப்போடும். பகத் பாசிலின் கண்கள் அத்தனை நுணுக்கமாக திரைமொழி பேசுகின்றன.

விஜய் சேதுபதி தான் நடித்து இருக்கிறாரா??

அல்லது வேறு யாராவது நடித்து இருக்கிறார்களா என முதல்முறையாக விஜய் சேதுபதியை தாண்டி, நடை, உடை, குரல் , உச்சரிப்பு என அனைத்திலும் வேறு ஒருவராக மாறியிருக்கிறார் விஜயசேதுபதி. இது அவருக்கான வேறு பாதை.

தன் தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கும் திரைப்படத்தில், தனக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும், அதை தைரியமாக ஒத்துக்கொண்டு, தாடை தசைகள் முதல் 3 வினாடியில் விழியின் ஓரத்திலிருந்து வந்து விழும் கண்ணீர் துளி வரை வேறொரு பரிமாணத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல்ஹாசன்.

சூர்யா-🔥🔥🔥

தனக்கென இசையில் வேறு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார் அணிருத். அவருடைய பின்னணி இசை வெகுவாகப் பாராட்ட பட வேண்டியது.

இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என்பது நிச்சயம் ரசிகர்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதேநேரம் லாக்டவுன் காலத்தில், OTT தளங்களில் பல மொழி திரைப்படங்களை பார்த்ததும், வெப்-சீரீஸ்களை பார்த்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கடைசியாக குணா தொடங்கி உத்தமவில்லன் வரை எத்தனையோ வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியைக் கண்ட உலக நாயகனுக்கு, மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மிகுந்த தேவையாயிருக்கிறது. அவரை விட அவரது ரசிகர்களுக்கு மிகுந்த தேவையாய் இருந்திருக்கிறது.

Once a Ghost is always a Ghost, என்பதை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு

எடுத்துக் காட்டியிருக்கிறது விக்ரம்.

#பிரபுசங்கர்_க


கொசுறுக்கள்

Krishna Kumar L

BREAKING NEWS

’விக்ரம்’ அடுத்த பாகத்தில் ரஜினியை இயக்குகிறார் லோகேஷ். கமலின் பேரன் அமெரிக்காவில் வளர்ந்து ரஜினியாகிறார். தாத்தா கமலும், பேரன் ரஜினியும் இணைந்து வில்லன் சூர்யா குழுவினரை ஐரோப்பாவில் வைத்து துவம்சம் செய்கிறார்கள். 1980ல் போலிஸ் என்கவுண்டரில் போடப்பட்ட கேங்ஸ்டர் ‘பில்லா’வின் மகன்தான் சூர்யா. இறுதிக்காட்சியில் 2007 ’பில்லா’ அஜித்துக்கு ஒரு லீட் தரப்போகிறார்கள். இதற்குள் எப்படியாவது ‘சுறா’ விஜய்யை நுழைக்க முடியுமாவென லோகேஷ் குழுவினர் ரூம் போட்டு ஆலோசனை. ’எங்க ஊர் பாட்டுக்காரன்’ ராமராஜனும் கேமியோ செய்வதாக தகவல்.

Aazhi Senthil Nathan

சமீபத்தில் கமல் நடித்த பிக்பாஸ், மக்கள் நீதி மய்யம் போன்ற படங்களை விட விக்ரம் செமயா இருக்காமே! தியேட்டருக்கு போவவேண்டியதுதான்!

Krishna Dvaipayana

கைதி படத்தில் தில்லி என்னும் கார்த்தியின் கதாபாத்திரம் மன்சூர் அலி கானை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். விக்ரம் படத்தில் மாஸ் காட்சிக்கு பின்னணியாக லோகேஷ் பயன்படுத்தியிருக்கும் சக்கு சக்கு வத்திக்குச்சி பாட்டை பார்த்தால் அதில் மன்சூர் அலி கான் டான்ஸ் ஆடுகிறார். ஒரு வேளை விக்ரம் படமும் மன்சூர் அலி கானுக்கு எழுதப்பட்ட fanboy சம்பவமா என்று படம் பார்த்ததில் இருந்து சந்தேகமாக இருக்கிறது.

Krp Raja

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூணு பொண்டாட்டி பெரிய குடும்பம் அறிவாளியான வில்லன் கதாபாத்திரம்…

இப்போ புரியுது படத்தை ஏன் ஜூன் 3 ரிலீஸ் பண்ணாங்கன்னு😁

2018 – Top 10 Tamil Movies

In Movies, Tamilnadu on திசெம்பர் 15, 2018 at 5:59 பிப

2018ன் திராபையான திரைப்படங்களை பட்டியலிட்டோம். 

இது வரை வெளியான 2018 தமிழ்ப்படங்களில் எது ஏமாற்றமடையச் செய்தது?

எந்த தமிழ் சினிமா கோலிவுட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளியது?

எந்தத் திரைப்படங்கள் வெறும் மார்கெட்டிங் வர்த்தகத்தால் ஓடியது?

2018ன் மோசமான தலை பத்து படங்கள்:

  1. 96
  2. செக்கச் சிவந்த வானம்
  3. தானா சேர்ந்த கூட்டம்
  4. விஸ்வரூபம் II
  5. நடிகையர் திலகம்
  6. மெர்க்குரி
  7. இரும்புத் திரை
  8. எச்சரிக்கை! இது மனிதர்கள் நடமாடும் இடம்
  9. ஸ்கெட்ச்
  10. கடைக்குட்டி சிங்கம்

சிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

#96 Movie – 10 Impressions on Love, Lust & Nostalgia

In Lists on நவம்பர் 23, 2018 at 4:25 பிப

என் பார்வைக்கு செல்லும் முன் ஒரு புத்தக அறிமுகம்: Untrue: Why Nearly Everything We Believe About Women, Lust, and Infidelity Is Wrong and How the New Science Can Set Us Free by Wednesday Martin

In the era of #MeToo, Janelle Monáe videos, “Cat Person,” and Cardi B, it’s clear that #TimesUp on OldThink about female sexuality.

Wednesday Martin’s newest work of non-fiction, UNTRUE: Why Nearly Everything We Believe About Women, Lust, and Adultery is Wrong and How the New Science Can Set Us Free cuts through the junk science and regressive cultural narratives that have shaped our beliefs about female infidelity for centuries, revealing a truth both liberating and disconcerting: women are no more “naturally monogamous” than men; nor are their libidos shrinking violets.

takes readers on an immersive, fascinating journey—from the bonobo enclosure at the San Diego Zoo to an exclusive all-female sex party in Manhattan where most of the revelers identify as heterosexual. UNTRUE asserts that monogamy is a tighter fit for the fairer sex; that females of many species evolved to be “promiscuous”; and that female sexual autonomy may be the most meaningful metric of gender equality.

Alicia Walker—an assistant professor of sociology at Missouri State University—does research that forces us to rethink not only female sexuality but our most cherished and basic beliefs about what women do and are, what they want and how they behave, and the role that context plays. In her extensive review of the sociological and psychological studies on female infidelity, and her own study of forty-six female users of the Ashley Madison website before its infamous hack and shutdown in 2015 (“Life is short. Have an affair,” the company’s tagline suggested), Walker explodes several of our most dearly held notions about fe- male infidelity: that women cheat only when they are unhappy in their marriages; that unlike men, they seek emotional connection, not sexual gratification, from affairs; and that like Diane Lane’s character in Unfaithful, who literally falls and skins her knee, thus attracting the attention of the man with whom she has tryst after hot tryst, women “just” stumble into affairs. For Walker’s cohort, this was no case of having one too many at the holiday party and then somehow sleeping with a coworker. “These women weren’t just falling into it or seeking out companionship,” Walker told me flatly


 

மற்றவர்களின் விமர்சனத்திற்கு செல்வதற்கு முன் என் எண்ணம்:

#96 movie is such a disappointment that it is neither doing what “Sangeetha Swarangal” of Azhagan did in one song nor standing up to “Panneer Pushpangal”.

Azhgan song sequence portrayed the sweet nothings people exchange when they find time to chat during their busy life in a succinct and etching manner.

Panneer Pushpangal is the movie by Bharathi-Vasu. It was original, fresh and had captured the teen romance, 40 years ago.

Let me throw in another movie in the mix: Annayum Rasoolum – it is a slow one like #96
It is a heroine based like #96
It also believes in everlasting romance, but makes sure to have internal logic, youthful ignorance and honest in the narrative

It was a pure fantasy. I love fantasies; but not cliches. Wrote a story long long ago to day dream like this: ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)

What a marketing for a crap!

 


அ). இவ்வளவு எளிமையாக படத்தை சுருக்க அண்ணன் ஷோபா சக்தியால் மட்டுமே முடியும்!

விஜய் சேதுபதி அளவுக்கு, மனநலம் குன்றிய பாத்திரத்தைத் தமிழ்ச் சினிமாவில் யாருமே திறம்பட நடித்ததில்லை. ‘நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தில் விபத்தால் சற்றே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், ‘சூது கவ்வும்’ படத்தில் பாதியளவு மனநிலை பாதிக்கப்பட்ட மனிதன் என நடித்தவர், முற்றாகவே மனவளர்ச்சியில்லாத மனிதனின் பாத்திரத்தில் “96“ திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். Good Job!


ஆ) இவ்வளவு எளிமையாக மனதில் பட்டதை போட்டுடைக்க ஜெயஸ்ரீயால் மட்டுமே முடியும்!

அங்கிள்ஸ் அண்ட் அங்கிள்ஸ்

ஓக்கே. #96 கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் (மட்டும்) ஃபீல் குட் மூவிதான். கடுப்பான காட்சிகள் தான் அதிகம்.

ஆனால் #நீஎபொவ படத்திற்கு அங்கொருவரும் இங்கொருவருமாக நெகிழ்ந்த அங்கிள்களை ஒழியட்டும் என்று அப்போது மன்னிக்க முடிந்தது.

இது அப்படியில்லை.

தனக்கென வேலை வெட்டி எதுவுமில்லாமல் ஊர் விட்டு ஊர் வந்து பின்னாலேயே போய் அவளுடைய வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டேயிருப்பான், கவனித்துக்கொண்டேயிருப்பான்(ஒரு பெரிய லிஸ்ட் வருமே…) திருமணம் உள்பட. அப்படி ஒரு காதலாம்.

ஆனால் ஒரே ஒருமுறை கூட மீண்டும் அவளைப் பார்த்துப் பேசியிருக்கமாட்டானென்பது…

இருவரும் பின்னர் ஒருவரையொருவர் இருக்குமிடமே அறியமுடியவில்லை என்றால் கூட ஒரு நியாயம் இருக்கிறது.

1. ராம் மாதிரி ஒரு கேரக்டர் நாம் சல்லடைபோட்டுத் தேடினாலும் கிடைக்காத பீஸ் அல்லது லூஸ். அதற்கு சம்பந்தமேயில்லாத நீங்களெல்லாம் ஏன் இவ்ளோ ஃபீலிங்ஸ் விட்டீங்க? 😣

2. அந்த நாளின்(சரி இரவின்) அடுத்தடுத்த நிகழ்வுகளை முன்னெடுத்தது முழுக்க முழுக்க ஜானு. ஒருவேளை ஜானு ராம் மாதிரி கேரக்டரா இருந்து, ராம்- அதாவது ஒரு ஆண் அந்த இரவை முன்னெடுத்திருந்தாலும் படத்தை இப்படித்தான் அணுகியிருப்பீர்களா? #என்கிறான்என்நண்பன் 🤔


இ) உஷாவின் ரசனையும் அதை எழுத்தில் கொணர்ந்த வடிவமும் கவர்ந்தது:

96
விசே, கொஞ்சம் உடம்பை கவனிங்க. ப வரிசை சிவாஜி மாதிரி ஆகிட்டு இருக்கீங்க. காட்டன், கிராமத்தான் போன்ற பில்டப் வசனங்களை நம்பாதீங்க.
வரவேற்பரையில் புத்தர் இடத்தை நம்மாழ்வார் பிடிச்சிக்கிட்டார்.
மற்றப்படி, படத்தைப் பற்றி சொல்ல ஒண்ணுமில்லே. படத்தில் 50% பள்ளி சீருடையில், பத்தாவது அதாவது பதினைந்து வயதுக்குள் வரும் கன்னுக்குட்டி காதலை பார்க்கும்பொழுது, இது எத்தனை இளம் உள்ளங்களை கெடுக்குமோ என்ற கவலையில் மனம் படத்தை ரசிக்க முடியவில்ல.
ஒரு சீனில் நாயகியாய் வரும் மாணவி, படிக்காமல் சுமார் மார்க் வாங்கியதை சொல்கிறாள். நாயக பையன் படிப்பு, வேலை வெட்டி இல்லாமல், நாயகி பின்னால் சுற்றுவதே கடமையாய் செய்ததை சொல்கிறான்.
 


 

உ) இவரின் கிளைமாக்ஸ் கருத்தோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன்:

#96

நோ நோ. பயம் வேண்டாம். விமர்சனமோ ஃபீலிங்கோ அல்ல. வினா மட்டும்.

இன்றுதான் படம் பார்க்க முடிந்தது. கசிந்ததும் உண்மை. சொல்ல / கேட்க வந்தது வேறு.

‘யமுனை ஆற்றிலே…’ சாஸ்த்ரிய இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல். படத்தின் ஆதாரமாக இப்பாடல் அமைகிறது. தவிர படத்தின் பல முக்கியமான கட்டங்களில் வரும் பிஜிஎம் அனைத்தும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை.

சொல்லப் போனால் ரசிகர்களின் உணர்வுகளுடன் விளையாடுபவை காட்சிகள் மட்டுமல்ல; பின்னணியும்தான்.

ஆக, இதே ’96’ படத்துக்கு தமிழிசையை மட்டும் பின்னணிக்கு பயன்படுத்தி இருந்தால் இந்தளவுக்கு ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்களா?

அது ஏன் சாஸ்த்ரிய சங்கீதத்தை முழுமையாக பயன்படுத்தும் படைப்புகள் அனைத்தும் ரசிகர்களின் மூளையை மழுங்கச் செய்து மனம் / உள்ளம் / கனவு என அனைத்தையும் ஆக்கிரமித்து கற்பனையில் மிதக்கச் செய்கிறது? புற உலகிலிருந்து விலகி அக உலகுக்குள் வாழ்வதும் ஒருவகை மாஸ்டர்பேஷன்தானே?

‘சங்கராபரணம்’ தொடங்கி எண்ணற்ற திரைப்படங்களையும்; ‘மோக முள்’ நாவல் உட்பட பலவற்றையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாமே?

ஆற்றுப்படுத்தும் வல்லமை இசைக்கு உண்டு. இசையிலும் அரசியல் உண்டு. அரசியலிலும் ஆற்றுப்படுத்தல் திசைத்திருப்பலாக உண்டு.

அதனால்தான் ஜானு என்கிற ஜானகி தேவியின் சமூகப் பின்னணியில் பார்வையாளனின் கவனம் குவியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பள்ளி காலத்தில் ஜானுவை தேடி அவள் வீடிருக்கும் பகுதிக்கு செல்வதும் அவள் வீடு பற்றிய குறிப்புகளும் அக்ரகாரத்தை சுட்டுகிறது.

22 வருடங்கள் கழித்து ராமிடம் தன் காதலை சொல்லும் ஜானு போகிறபோக்குல் ‘எங்கக்கா காதலிச்சு ஓடிப்போன நேரம் அது… 2வது மாசமே எனக்கு அலயன்ஸ் ஃபிக்ஸ் பண்ணினாங்க. அக்கா மேல எல்லாரும் வெறுப்புல இருந்த நேரம். அப்ப எப்படி என் காதலைப் பத்தி சொல்றது..?’ என்கிறாள்.

இந்தக் கட்டமும் வெகு கவனமாக ரசிகர்களின் மனதைத் தைக்காதபடி கடக்கிறது; கடக்கும்படி எடுக்கப்பட்டிருக்கிறது.

பிஜிஎம் இதற்கு துணை நிற்கிறது அல்லவா?

இந்த வினாக்களுக்கான விடை சாஸ்த்ரிய சங்கீதம் எந்தக் காலகட்டத்தில் தமிழிசையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது… அதன் பிறகான தமிழ்ச் சமூகத்தில் சாதிகள் எப்படி மேலாதிக்கம் பெற்றன என்பதில் அடங்கியிருக்கிறது.

புரியும் படியாகவும் எளிமையாகவும் ’96’க்கு நேர் எதிராக இருக்கும் இன்னொரு படத்தை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

‘பரியேறும் பெருமாள்’


ஊ) சுடுவதுதான் சுடுகிறார்கள்! ஹாலிவுட் படங்களை அப்படியே திருடினாலாவது உருப்படியாக இருந்திருக்கும்!

 Nov 10

BlueJay – simple, realistic Hollywood version of 96. 80 mins just two main characters. Even if you dont like 96 you will like this


எ) Suresh Babu படம் பாக்கப்போறதில்லைன்றதை இவ்ளோ திருகலாச் சொல்ல முடியுமா!

நாஸ்டால்ஜியா என்றால் உடனே நினைவிற்கு வருவது அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்கியின் படம்தான். இதில் பதின்மக் காதலை எங்கே கொண்டு போய் பொருத்துவது?! மூளை, மனதை நிறைத்துக் கொண்டால் அங்கு காண ஒன்றுமே இல்லை. ஒன்று என் பால்ய நண்பர்களோடு நான்கைந்து பீர் அடித்துவிட்டு இரண்டை இடுப்பில் சொருகிக் கொண்டு, திருவண்ணாமலை விபிசி தியேட்டரில் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். அல்லது சும்மா இந்த படம் பேச்புக்கில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். பாடல்களை கேட்டு உருகியபோதே இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். வழக்கம்போல உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.