Snapjudge

Posts Tagged ‘தகர டப்பா’

13 picks from 13 of Rangabashyam & Co: Best of Family Masks

In Blogs, Literature, Misc, Politics, Religions on ஜூலை 21, 2009 at 10:38 பிப

1. சர்க்கஸ் வளையாபதி

எல்லோருக்கும் வணக்கம். நான் இணையத்துக்குப் புதுசு. என் பேர்
சர்க்கஸ் வளையாபதி. இப்பத்தான் டெலிபோன் கன்னெக்ஷனுக்கு ஆர்டர் பண்ணியிருக்கேன். வந்ததும், நம்பர், மத்தத் தகவல் எல்லாம் சத்தியமாத் தர்றேன். கொஞ்சநாள் பொறுத்துக்குங்க.

இப்பத்தான் எனக்கு நியூஸ் வந்தது. ரங்கபாஷ்யம் இங்கேயும் வந்துட்டான்னு. அதுக்குத்தான் அவனப்பத்தி ஒங்களுக்கு ரெண்டு வார்த்தை சொல்லிட்டுப் போகலாமுன்னு வேகமா வந்தேன்.

ரங்கபாஷ்யம் நீங்க நெனக்கிற மாதிரி ஆளு ஒண்ணும் இல்ல. அவன் ஒரு சுத்த ஃப்ராடு. நம்பர் ஒண்ணு பித்தலாட்டம். ஆனா வேணி மாமி அப்படியில்ல. பத்தர மாத்துத் தங்கம். எது கேட்டாலும் தயங்காமக் கொடுத்துடும்.

ரங்கபாஷ்யத்தை சின்ன வயசிலிருந்தே நல்லாத் தெரியும். அவன் பாணியிலே சொல்லனும்னா, பால்ய சிநேகிதன். ஆனா, அண்டப் புளுகன்.

நாங்கள்ளாம் சேர்ந்துதான் வளந்தோம், வெளயாடுனோம். நானு, அவன், அமிர்தராஜு (அதான், நம்ம விஜய்யோட அப்பா) மூணு பேரும் எப்பவும் சேர்ந்துதான் தண்ணி போடுவோம். ரங்கபாஷ்யம் மகாகஞ்சன். பாட்டில் வாங்கவோ, இல்லே பட்டாணி வாங்கவோ என்னிக்கும் அவங்கிட்ட இருந்து ஒரு பைசா லேசுலே பெரளாது. மிலிட்டரி ஹோட்டல்ல நல்லா மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா எல்லாம் மூக்கு முட்ட திம்பான், வெளியிலே வந்து, வெங்காயம் கூட சாப்பிடாத வெஜிடேரியன்னு புருடா விடுவான்.

அவங்க தாத்தா மைசூர் மகாராஜா சமஸ்தானத்தில முக்கிய மந்திரியா இருந்தாரு, பெரிய சாஸ்திரி, அப்படி இப்படியின்னு சும்மா பீத்திக்கிட்டிருப்பான்.

அவருக்கு ‘வெளிக்குப்’ போறதுல எப்பவும் கொஞ்சச் சிக்கல். அதனால, சமஸ்தானத்தில ‘முக்கிய’ ஆளா இருந்திருக்கிறார்.

நெஜம்மாவே அவர் ஒண்ணும் மந்திரியா எல்லாம் இருந்ததில்லை. மகாராஜா அரண்மனை சமயக்கட்டுலே, சரக்குமாஸ்டரா இருந்திருக்கிறாரு. அம்புட்டுத்தேன். மகாராஜாவுக்கு நல்லா தக்காளி சூப்பும், பருப்பு ரசமும் மணமா வச்சுக்குடுப்பாரு, மத்த எடுபிடி வேல செய்வாரு.

வேற ஒண்ணும் பீத்திக்கிற மாதிரி எதுவும் கிடையாது.

சின்ன வயசுல்லேர்ந்தே சரியான ஊனக் குசும்பன். இவன் போற இடமெல்லாம், இவனை எல்லோரும் குரங்கு பாஷ்யம், கல்லுளி மங்க பாஷ்யம் இப்படித்தான் கூப்பிடுவாங்க. ரொம்ப மண்டக்கர்வம் வேறே. யாரோடயும் அனுசரிச்சுப் போகமாட்டான். நான் அப்படியில்லை. வளையாபதின்னாலே ரொம்ப flexible டைப்புன்னு எல்லாருக்கும் தெரியும்.

சும்மாக் கெடக்கிற சங்கை ஊதிக்கெடுக்கிற ஆண்டிப்பண்டாரம் வேறு யாரும் இல்ல, இவந்தான். பல்கலைக்கழகம்னு சொல்லித்தான் மொதல்லே உள்ளே பூவான். அப்புறம் என்னதான் நடக்குதுன்னு ஒங்களுக்கு பிடிபடறதுக்குள்ளே, பல்கலைக் ‘கலகமா’ மாத்திடுவ்வான். நாரத கான கலக சிரோமணின்னு இவனுக்கு ஒரு பட்டமே இருக்கு. இவன் இங்கே வந்ததிலிருந்து எவ்ளோ பிரச்னை பாருங்க. நீங்க எல்லாம் ஒரு குடும்பம்னு சொல்லி அனுசரிச்சுப் போயிட்டு இருந்தீங்க. இப்போ இவன் வந்து எல்லோருக்கும் சிண்டு முடிச்சி கலாட்டா பண்ணி, இப்போ எல்லோரும் வரிஞ்சிக் கட்டிக்கிட்டு நிக்குறீங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க.

நான்லாம் ரிட்டையர்டு ஆகிட்டு மருவாதிக் காப்பாத்திட்டு இருக்கலியா? இப்படியா ஊனக் குசும்பு பண்ணிட்டு இருக்கேன். எனக்கென்னமோ, சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். குரங்கு பாஷ்யம் லேசுப்பட்ட பேர்வழி இல்ல. ஜாக்ரதயா இருங்க.

ஆம புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாதுன்னு சொல்வாங்க. இந்த கல்லுளி மங்க பாஷ்யம் ஆமையையும், அமீனாவையுமே சாப்பிட்டுப்போட்டு ஏப்பம் விடற காண்டாமிருகம். இந்தக் காண்டாமிருகம் திரும்பி வந்தா, மிரண்டு போகாம, ஏண்டா வந்தேன்னு அடிச்சு வெரட்டுங்க. ஆமா, போண்டாவாக்கி சாப்பிட்டுருங்க.

எப்பவும் அனுசரிச்சுப் போகும்,

அன்பன் வளையாபதி , மார்ச்சு 20, 1999


2. மணி சுவாமிநாதன்

சுகமே, சுகமா?

வெங்காயம் என்றாலே எனக்கு அலர்ஜி. வெங்காயத்தை சமையலில் இருந்தே பூண்டோடு ஒழித்துவிட்ட எனக்கு, இதற்கு மேலும் பெரியாரை பற்றி உம்முடன் விவாதித்து பொழுதைப் போக்க எனக்கு நாட்டம் இல்லை. பெரியார் ஒரு முடிந்த சகாப்தம். இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு.

மகாலட்சுமியை வருடினா, மடோனா அம்மணமாக வருகிறார்கள் என்று தாங்கள் கூறுவதிலிருந்து பலருடைய மனதை தாங்கள் புண்படுத்தி இருக்கின்றீர்கள். நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை அள்ளித்தந்திடும் திருமகளாம் மகாலட்சுமியை ‘வருடுவது’ என்று விகற்பமாக கூறியிருக்கிறீர்கள். இதன்மூலம் கோடானுகோடி இந்துமித்திரர்களின் உணர்வுகளைக் கொதிக்க வைத்துவிட்டீர்கள். இதே இது, மற்ற மதக் கடவுள்களைத் தாங்கள் சொல்லியிருப்பீன் உங்களை சிலுவையிலோ, கழுவிலோ ஏற்றியிருப்பார்கள். உங்களது பொறுப்பற்ற செயலைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் ஏற்பட்டால், நான் அதற்கு பொறுப்பல்ல. நீர்தான் மூலகாரணம்.

மடோனாவை அம்மணமாகப் பார்க்கலாம் என்று கேவலமாகப் பேசியுள்ளீர்கள். செல்வி மடோனா தமிழ்நங்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனித இனத்துக்கு இன்றியமையாத தேவைகளில் ஒன்றான சிருங்கார ரசத்தை, சிணுங்காமல் வழங்கிவரும் திருமதி மடோனா போன்றவர்கள், தாய்க்குலத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்.

செல்வி மடோனாவை அம்மணமாக பார்க்கும்போது கூட, அன்னை பராசக்தியை பார்க்கும் பாரம்பரியத்தினர் இந்து நண்பர்கள். பரத்தையர் குலம் உயர்ந்த குலம் என்று கருதும் சிலம்புச்செல்வர்கள் நிரம்பிய இணையம் இது. தாங்கள் ஒரு ஆணாதிக்கவாதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தாய்க்குலத்தை அவதூறாகப் பேசுவதற்கு இணையம் உகந்த இடமன்று.

‘அட மின் வருடிங்க அய்யங்காரே’ என்ற உங்களது கூற்றில் தொனிக்கும் இளக்காரத்தை ஆட்சேபிக்கிறேன். அந்தணர்களுக்கு மரியாதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், மகாலட்சுமி – மடோனா – அம்மணம் – வருடுவது – அய்யங்கார் என்று வேண்டுமென்றே சங்கிலித்தொடர் போல அமைத்து நக்கல்செய்வது உங்களைப் போல படித்தவர்களுக்கு அழகல்ல. மனித இனம் இவ்வளவு தூரம் முன்னேறி வருவதற்கு காரணம் கல்விதான். ‘எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று படித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நமது சாஸ்திரங்களை இத்தனை காலமாக பேணிக்காத்து, தமிழர்கள் இன்று உலக அரங்கில் வெற்றிநடை போட வைத்த எங்களுக்கு தாங்கள் நன்றி பாராட்டும் விதம் இதுதானா? நன்றி மறப்பது நன்றன்று!

என்னைக் கையெடுத்துக் கும்பிடுங்கள் என்று இதுவரை நான் உங்களிடம் கேட்டதில்லை. என்னை ஒரு சக மனிதனாக நினைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன். இல்லாவிட்டால், மீண்டும் பழையபடி கற்காலத்துக்கே செல்ல நேரிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள். ஆனால், ஒன்று மாத்திரம் உறுதியாகச் சொல்லுகிறேன். தமிழனின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதை விட்டுவிட்டு, ‘பார்ப்பனன் – பார்ப்பனன் அல்லாதவன்’ என்று குறுகியநோக்கு வட்டத்துக்குள்ளேயே காலமெல்லாம் கும்மியடிக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்.

ஆனால், சிறியவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் பெரியவர்கள் மன்னிப்பது சம்பிரதாயம். அதன்படியே பெரியார் ரங்கபாஷ்யம் அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களை எல்லாம் மன்னித்துவிட்டு, உங்களுடன் பரிவுடன் ஸ்நேகம் செய்ய இஷ்டப்படுகின்றார் என்பது தங்களுக்குத் தெரியும். தேடிவந்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை தக்கவைத்துக் கொள்ளுவதுதான் விவேகம்.

இன்னுமொரு விசயம். நண்பர் சுலைமானுக்கு அமீரக நாட்டு நண்பர்கள் மத்தியில் மரியாதையும் செல்வாக்கும் உள்ளதாகத் தெரிகிறது. ஜாதிமத பேதங்களைக் கடந்து உறுப்பினர்கள் அவரது சொல்லுக்குக் கட்டுப்படுகின்றார்கள் என்றால், இவர் ஏதோ காட்ஃபாதர் மாதிரித்தான் ஆதிக்கம் செலுத்துகின்றார் என்று நினைக்கிறேன். நமக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

சுலைமான் விசுவாசிகள் எல்லோரையும் மொத்தமாக, பெரியார் ரங்கபாஷ்யம் கூட்டணிக்கு கொண்டுவரும் திருப்பணியில், ராமபிரானுக்கு அணில் ஓடி ஓடிச்சென்று உதவியதுபோல, தாங்களும் முடிந்ததைச் செய்யவேணும். சுலைமான் உங்கள் மேல் பாசம் வைத்திருக்கின்றார் என்பதனை இணைய நாட்டில் எல்லோரும் அறிவர். இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அவரிடம் தூது செல்ல வேண்டுகிறேன். தேவைப்பட்டால், நானும் சூட்கேசுடன் வருகிறேன்.

அந்த புண்ணிய பூமி அமீரக நாடுகளிலும் கூட, ஆசிப் மீரான், பரமேஸ்வரன், அரசு, பயசுன்னு சில முரண்டு ஆசாமிகள் இருப்பதாக தகவல் வருகின்றது. அவர்கள் நமது கேம்ப்புக்கு வந்தாலும், உட்கட்சி பூசல், ரகளை போன்ற வம்புதான். அவர்கள் டாக்டர் தத்துவராயர் லோகநாதன் கூட்டணிக்கே சென்றுவிட செய்வோம். அங்கே போனால், தத்துவராயருடன் குரங்குகள் ஏற்றுமதி, இறக்குமதி விளையாட்டுக்களில் மெய்மறந்து நம்மை நிம்மதியாக ஆளவிடுவார்கள்.

டெல்லி சென்றுள்ள பெரியார் ரங்கபாஷ்யம் அவர்கள் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவார். வந்தவுடன் ஒரு சமபந்தி போஜனம் நடத்துவதற்கு அவசரமாக ஆட்களைச் சேகரிக்க உதவுவீர்கள் என நம்புகிறேன். பெரியார் விசுவாசியான தங்களுக்கு, பெரியாரின் வாரிசு ரங்கபாஷ்யம் அவர்களை சந்தோசப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

அன்புள்ள
மணி சுவாமிநாதன்


3. Story of Ramanujar :: ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் – 5 ஜனவரி மாஷம் , கி.பி. 2000

பெருமதிப்பிற்குரிய இணைய நண்பர்களே!

அநேக நமஸ்காரத்துடன் அடியேன் ரங்கபாஷ்யம் எழுதிக்கொள்வது. இப்பவும் நானும் கிருஷ்ணவேணியும் ஸ்ரீமத் ஆச்சார்யாள் கிருபையால் ரொம்பவும் ஷேமமாய் இருந்து வருகிறோம். உங்கள் எல்லோருடைய ஷேமபலன்களையும் அடியேன் தெரிந்து கொள்ள பிரயாசையாய் இருக்கிறேன்.

உலகத்திலேயே மிகவும் பழைமையான மொழி சம்ஸ்கிருதம். ஆல விருட்ஷம் எப்படி ஆயிரம் விழுதுகள் விட்டு, ஒவ்வொன்றும் ஒரு மரமாக உருவெடுக்கும் போது, அந்த மூல விருட்ஷமானது, தான் பெற்ற குழந்தைகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பூரிப்படையும் ஒரு தாயைப் போலவே மகிழுமோ, சம்ஸ்கிருதமும் அப்படித்தான். விழுதில் புறப்பட்ட அந்த மரங்கள் வானைத்தொடும் வகையில் வளர்ந்து பரவி இருக்கும் போது, மூல விருட்ஷத்தை தேடினால், கஷ்டப்பட்டுத்தான் பார்க்கமுடியும். சம்ஸ்கிருதமும் அப்படித்தான்.

சமஸ்கிருதத்தை மாதிரியே, இந்துமதமும் உலகத்திலேயே பழைமையான ஒன்றாகும். மதங்களுக்கு எல்லாம் அதுதான் ஆல விருட்ஷம். பெண்களுக்கு தாய் என்ற அந்தஸ்தைக் கொடுத்து, அவர்களை சக்தியின் பீடமாக போற்றிய மதம் இந்துமதம். அதனாலேயே இந்துமதம் இன்றும் உலகளவில் உயர்ந்த மதமாக விளங்குகிறது.

ஆதிகாலத்தில், இந்து மதத்தில் சரிவர ஒழுக்கம் பேண முடியாதவர்கள், வேதங்களும், சாஸ்திரங்களும் (B, C+, C, F கிரேடுகள்) தெரியாததால் சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்தவர்கள், மது, மாது போன்றவற்றில் நாட்டம் கொண்டவர்கள், இப்படியானவர்கள் எல்லாம் கட்டுப்பாடான இந்துமதத்தில் இருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள். களையெடுக்கப்பட்ட இந்த அதிருப்தியாளர்கள் ஆரம்பித்து வைத்தவைதான் உலகத்தில் உள்ள மற்ற மதங்கள். புத்த, சமண மதத்தினர், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோரும் செய்த கலகங்களினால், இந்துமதம் இன்று சற்று தூசிபடிந்து மங்கி இருக்கிறது.

இன்று இந்துமதத்தைப் பார்த்து நிறையப் பேர் பரிகாசம் செய்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இந்துமதத்தைப் பற்றி சரியாக போதிக்கவேயில்லை. அதனால் தான், தமிழ் அரசன் போன்ற சிறுவர்கள் உன்னதமான நமது இந்து மதத்தைப் பற்றி, அவதூறாக பேசுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் இந்து மதத்தின் பெருமையைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், ஆயுள்காலம் தான் பத்தாது. இருந்தாலும் தமிழ் அரசன் மாதிரியான நாஸ்திகர்களை திருத்தி நல்வழியில் கொண்டு செல்லும் கட்டுரைகளை இங்கே எழுதுவது என் போன்ற பெரியவர்களின் கடமையாகும்.

நான் என் பங்குக்கு இந்து மதத்தலைவர்களுள் மிகவும் வித்தியாசமானவரான வைஷ்ணவர் ராமானுஜரைப் பற்றி உங்களுக்கு வழங்கப் போகின்றேன். ராமானுஜர் வரலாறு நிறையப் பேருக்கு சரியாகத் தெரியாது. அவர் செய்த சமயச் சீர்திருத்தங்கள் ஏராளம். ராமானுஜரை உதாரண புருஷனாகக் கொண்டுதான், பாரதியார் தீண்டத்தகாதவர் ஒருவருக்கு பூணூல் அணிவித்தார். இப்போது காஞ்சிப் பெரியவர்களை தமிழ் அரசன் திட்டுவது போலவே, அந்தக் காலத்தில் ராமானுஜரை திட்டியவர்களும் ஏராளம். மதப்பணி என்றால் சும்மாவா?

சோழர்கள், ஹொய்சளர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பலரின் அன்பும், ஆதரவும் சந்தேகமும், வெறுப்பும் பகையுமாக மாறி மாறி வாங்கிக்கட்டிக் கொண்ட ஒரு இலக்காக அவதிப்பட்டார். அந்த அவதியிலும் நூறு வயதிற்கும் மேலாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மதச்சேவைகளை ஆற்றினார். இவரைக் கண்டதும் வில்லினால் அம்பு போடவேண்டும் என்று சோழமன்னன் ஒரு காலத்தில் 144 தடை உத்தரவே இட்டிருந்தான். இதற்கு பயந்து, ராமானுஜர் மைசூரில் தலைமறைவாக வெகுகாலம் வாழ்ந்துவந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதிரி தலைமறைவாக வாழ்ந்து போதிலும், அவனைப் போல கோழையாக வாழ்ந்ததில்லை. சரணடையப் போகிறேன் என்று சொல்லி எந்தக் காலத்திலும் அவர் யாருக்கும் கேசட் அனுப்பியதாக வரலாற்றில் சான்றே கிடையாது.

அவர் கொண்டுவந்த மதச் சீர்திருத்தங்களினால், இந்து மதமே புது உயிர் பெற்றது. அந்த மறுமலர்ச்சியுடன், மத நல்லிணக்கத்திற்கும் வித்திட்டது. இன்று கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போதும் நோன்புகளின் போதும் அன்னிய மதத்தினருடன் ஜெயலலிதா, கருப்பையா மூப்பனார், கருணாநிதி போன்றவர்கள் சமபந்தி போஜனம் செய்கிறார்கள் அல்லவா? இந்த சம்பிரதாயத்தை முதலில் ஏற்படுத்திக் கொடுத்தவரே ராமானுஜர்தான்.

காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கத்தை என்றும் நிலைக்கும் வைஷ்ணவத் தலைநகராக அமைவதற்கு அன்றே வித்திட்டார். உயர்வு, தாழ்வு அற்ற, மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு நல்லிணக்க நகரமாக ஸ்ரீரங்கம் விளங்கியது என்றால் மிகையாகாது. ராபர்ட் கிளைவும் நவாப்பும் பகல் முழுவதும் கொலைவெறியுடன் கடும்போர் புரிவார்கள். ஆனால், கதிரவன் விழுந்து களைத்துப் போன அந்திப்பொழுதில் இருவரும் ஸ்ரீரங்கம் கோயிலில் தான் நட்புடன் தியானம் செய்து ஓய்வு கொள்ளுவார்கள். பரம வைரிகளுக்குக் கூட சாந்தம் கொடுக்கும் மகிமை வைஷ்ணவத்துக்கு இருந்தது. இதைப் பற்றி ஆழ்வார்கள் மிக அழகாக பாடியிருக்கிறார்கள்.

‘கரையான் புத்துக்கட்ட’ என்றெல்லாம் மீண்டும் திட்டி என்னை எழுதவிடாமல் செய்யாதீர்கள். உங்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். விரைவில் ராமானுஜர் வரலாற்றை தொடர்கதையாக வழங்கப் போகிறேன். விறுவிறுப்பான இந்த பக்தி அமுதத்தை ரசிக அன்பர்கள் எல்லோரும் பருகி, ஆனந்தப் படுமாறு அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

எம்பெருமான் திருவருள் எல்லோருக்கும் நிச்சயம் உண்டு.

அடியேன்
ரங்கபாஷ்யம்


4. ரங்கண்ணா ராமன்

இணைய அனபர்களே,

வணக்கம். ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசனுக்கும், அம்ப்ரோஸ் செபஸ்தியானுக்கும் ஏதேனும் ரகசிய சம்பந்தங்கள் உள்ளனவா என்று கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன. அப்துல்காதருக்கும், அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம்தான் இந்த இரண்டு பேரிடையேயும் உள்ளது.

ரங்கபாஷ்யக் குழு, அம்ப்ரோஸ் செபஸ்தியான் என்ற பினாமி பெயரில், மலேசியாவில் ஒரு கிளை நிறுவனம் நடத்துகின்றது என்று வேண்டப்படாதவர்கள் நிறையப் புரளிகள் கிளப்புகின்றனர். கேட்க நன்றாக இருக்கின்றது என்ற ஒரே காரணத்துக்காக உண்மைக்குப் புறம்பான இந்த வதந்திகளை நம்பிவிடாதிர்கள்.

இதன் மூலம் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், எங்கள் ரங்கபாஷ்யக் குழுவுக்கும், அம்ப்ரோஸ் செபஸ்தியான் என்ற பெயரில் மலேசியாவில் கேம்ப் அடித்துக்கொண்டு இயங்கும் ஒரு வர்த்தக ஸ்தாபனத்துக்கும் எந்த ரகசிய வியாபார உடன்படிக்கைகளோ, கொடுக்கல் வாங்கலோ, கைம்மாறு, கால்மாறோ கிடையாது.

அம்ப்ரோஸ் நிறுவனர்களும், ரங்கபாஷ்யக் குழுவும் திரைகடலோடியும் திரவியம் தேடச்சென்ற கொள்ளைப்பட்டாளத்தின் இரண்டு மாலுமிக் கூட்டங்களே! மற்றபடி, தமிழ் இணையம் என்ற துறைமுகத்தில், தேவை ஒருமிப்பால் நங்கூரம் பாய்ச்சிய இரண்டு கப்பல்களே! இந்த இரண்டு நிறுவனங்களையும் சம்பந்தப் படுத்தி சந்தேகிப்பது, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப்பார்க்க முயற்சிப்பதாகத் தான் உள்ளது.

அவர்கள் வேறு. நாங்கள் வேறு. எங்களது கொள்கை, குறிக்கோள்கள் வேறு. மேலும், எங்களுக்கு பேய் பிசாசு, பில்லி சூன்யம், பச்சை மூங்கில், சுட்ட கோழி, அவுச்ச முட்ட, ஆறுமுழக் கயிறு, பட்ட சாராயம், சுருட்டுக் கட்டு, உடம்புல சாம்பல், இடுப்புல உடுக்கை இவற்றில் எங்களுக்கு நம்பிக்கை (நம்பிக்கை என்று சொல்வதை விட தொழில்ஞானம் என்றுகூட சொல்லலாம்) கொஞ்சமும் கிடையாது. வெறும் Y2K programming க்குக்கே தகிடுதத்தம் போடுகிறோம். மேலும், முனீஸ்வர – சனீஸ்வர சகோதரர்களின் ஏகோபித்த ஆசீர்வாதமும் எங்களுக்கு பக்கபலமாக கிடையாது. நிலைமை இப்படி இருக்கும்போது, எந்த அடிப்படையில் நாங்கள் இந்த லைனுக்கு துணிந்து வரமுடியும்?

மேலும் தொகுதி பங்கீடு பற்றி பேச, இப்போது என்ன அவசரம் வந்துவிட்டது? முதலில் மூப்பனார், ஜெ-சசிகலா, பாமக ராமதாஸ், வைகோ இவர்கள் ஒருசுற்று பேச்சுவார்த்தை நடத்திமுடிக்கட்டும். அப்போது யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி யோசிக்கலாம்.

மற்றபடி, நான் மூப்பனாரையும், ஜெ-சசிகலா சகோதரிகளையும் சந்திக்கச் சென்றது, முறையே மரியாதை நிமித்தமாகவும், (எனது) தொழில் நிமித்தமாகவும் தான். இனிமேல் உங்களுக்கு, தான்தோன்றித் தனமாக கிளம்பிவரும் புலால் கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் நான் பொறுப்பல்ல.

அன்புடன்

விசேஷ நிருபர்
ரங்கண்ணா ராமன்


5. உள்ளிவாயன் பெருங்காயடப்பா :: உலகமாதா வாத்து (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

யுகம் புரண்ட புருஷன் அவம் திரண்ட கருடன்
சூக்மதாரி அடங்காப்பிடாரி இயமம் நியமம்
சோதிடம் சொல்லா நித்ய ஞான கோவணதாரி
காட்டாரி மலையாளபகவதி வேதசகாயி
சின்னக்கருப்பி மஞ்சுள நாட்சி
சரணவ மால ராஜநாயகி அம்மா நரநர
பாவி கந்த சிவம் இடப்பாகி ஜிலேபி
குலேபகாவலி ஆதரி நீயெனை
அம்மா படிந்தேன் சரணம்
ஹரி போல் ராம் ராம்
கோவண்ணப்பால் ராம நமோ நமோ
மலமறு ராட்ஸசி சூத்திரதாரிதன்
சூல்தரு மோகி சரவணத்தாயே
ஜெய ஜெய ஜெய ஜெய
உலகம் வாழ அருள்பொழி மாதா!
___

உள்ளிவாயன் பெருங்காயடப்பா.

மறக்கமுடியுமா?

மூணாம்வகுப்பிலே
மூக்குத்தோண்டியதை
மறக்கமுடியுமா?

வீடுபெருக்கும்
முனியம்மாவைப் பார்த்து
விஸில் அடித்ததை
மறக்கமுடியுமா?

ஆத்தங்கரையிலே
அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
குந்தினதை மறக்கமுடியுமா?

ஏழாம் கிளாசு வாத்தி
இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தக்கா,
எலந்தைப்பழம் தின்னதை
மறக்கமுடியுமா?

சினிமா போய்
இரவிலே சைக்கிளிலே
நிலவிலே திரும்பி வந்ததை
மறக்கமுடியுமா?

இப்போது,
எட்டாத தொலைவிலே
ரிச்மண்டிலே
மண்டிபோட்டு
கம்பியூட்டரிலே
மாங்குமாங்கு
தேங்கா ஸைஸிலே
ஜாவா எழுதினாலும்
இஸ்மயில் பாவா
மூணாம் வகுப்பிலே
மூக்கணாம்ப்பட்டி முனிசிபல் ஸ்கோலிலே
மூக்குத் தோண்டியதையும்
முனியம்மாவையும்
மறக்கமுடியுமா?

அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.
லே ஆப்போ லேத் வர்க்கோ
ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
மூன்றாம் வகுப்பிலே எலந்தைப்பழம் தின்னு
திரும்ப இங்கிபிலீசு படிக்க
பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
கோரைப்புல் கிராமத்துக்குக்
கோவணம் கட்டப் போகிறேன்.

முனுசாமி! முனியம்மா!!
வட் எவர் யு டூ, கிவ் இட் அப்.
பிளீஸ் ரிட்டர்ன் பக் டு
யுவோர் பழைய பாத்திரம்.

ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
ஒரு மூட்டை அல்வா.

கண்டினியூட்டி ஸாட்!
டேக் டென் டு த பவர் இன்பினிட்டி!
ஆக்ஸன் பிளீஸ்!!


6. ரங்கண்ணா ராமன் :: கிடா எப்படி வெட்டுவாங்க!

வணக்கமும், வாழ்த்துக்களும். உங்களது சிந்தையிலிருந்து மந்தை, மந்தையாக வெளிப்படும் விந்தைகளை எண்ணிப்பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது. மெய் சிலிர்ப்பதைப் பற்றி ரங்கபாஷ்யம் சார் மிக சிங்காரமாக எடுத்துச் சொல்வார். கந்தசாமியின் கிராமத்தில் கிடாவை எப்படி மெய் சிலிர்க்கவைத்து வெட்டுவார்கள் என்று graphic voilence உடன் ஒருமுறை விவரித்திருக்கின்றார். கிடாவை வெட்டும் பூசாரி, கிடாவுக்கு மாலைகள், சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, பட்டாக்கத்தியின் கூரான நுனியினால், கிடாவின் கழுத்தில் மெல்ல ஒரு ‘குத்து’ குத்துவான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கிடா, தன்னில் ஏற்படும் involuntary impulse இல் சிலிர்த்துக் கொள்ளும். அந்த சிலிர்ப்பில், கழுத்தில் சரியான பதத்துக்கு விறைப்பு ஏற்படும்; அப்போது பார்த்து பூசாரி பட்டாக்கத்தியை சதக்கென்று ஒரே போடாக இறக்குவான். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு, ரத்தம் நான்கு (பக்கம்). அந்த ரத்த வெள்ளத்தைப் பார்த்ததும் ஜனங்களுக்கு ஒரே மகிழ்ச்சி வெறி. மேளக்காரன் உச்சஸ்தாயியில் மேளம் அடிப்பான். சாமி ஆடுபவர்கள் எந்த ஒரு நாட்டிய இலக்கணமும் இல்லாமல் ஆடுவார்கள். சில பெண்கள் சாமி ஆட்டத்துக்கு பின்னணி குரல் கொடுப்பதுபோல, உல்லோல்லோல்லோ என்று ஒருமாதிரியாக நாக்கை உதப்பலாட்டம் போட்டுக்கொண்டே, தமிழ்பாஷை தொடங்கும்முன்னே இருந்த ஏதோ ஒரு முன்னோடி பாஷையில் பாடுவதுபோல பாடுவார்கள். இவற்றையெல்லாம் ரங்கபாஷ்யம் சார் மாதிரியே, வெங்காய ராமசாமி நாயக்கரும் கண்கூடாக நேரில் பார்த்திருப்பார் போலும். அதனால்தான், தமிழ்பாஷையை அப்படி விவரித்திருக்கின்றார்.

நிற்க.

நான் முக்கியமாக சொல்ல வந்த விசயம் இதுதான். நண்பர் கிருஷ்ணனின் வேண்டுகோளின்படி நீங்கள் சிருங்கார ரசம் எழுத ஆரம்பித்ததற்கு நன்றியும் பாராட்டுதல்களும். நியூஜெர்ஸியில் நிர்வாண நடனம் ஆடும் தமிழ் அம்மணிகளின் பேட்டித் தொகுப்புக்களை இணையத்தில் எழுதவேண்டும் என்று எவ்வளவுதான் ஆர்வமாக இருந்தாலும், நேரமின்மை காரணமாக இதுவரையிலும் நிகழவில்லை. நேரம் கிடைக்கும்போது, பேட்டியின் முழுவிவரங்களும் எழுதுகின்றேன்.

இந்த இரண்டு அம்மணிகளின் ஆட்ட விஷயத்தில் மாத்திரம் சாதி பேதம் எதுவுமே கிடையாது.

அம்மனும் ‘அம்மணி’யாகத்தான் ஆடுகின்றாள்.
அம்பாளும் ‘அம்மணி’யாகத்தான் ஆடுகின்றாள்.

அம்மணமாக ஆடி தமிழ் வாலிப வயோதிக அன்பர்களை ஜொள்ளு கொட்ட வைத்து, பரவசத்தின் எல்லைக்கே இட்டுச்செல்லும் இரண்டு தமிழ்ப் பெண்மணிகளில் ஒருவர் அம்மன். மற்றொருவர் அம்பாள்.

அம்மன் சரியான அட்டைக் கருப்பு. நிச்சயம் கந்தசாமி அல்லது குப்பன் மாதிரியானவர்களின் கிராமம் போல தெரிகிறது. பக்கத்தில் போனாலே தமிழ்மணம் (வேறென்ன, கடலைப்புண்ணாக்கு நெடிதான்), போட்டுக் கொண்டிருக்கும் சென்ட்டையும் மீறி, கமழ்கின்றது. அம்மன், அம்மணியாகி ஆடும் ஆட்டமோ, ஒரே டப்பாங்குத்து ரெக்கார்டு டான்ஸ்தான். சில நேரங்களில் கிடாவெட்டும் திருவிழாவில் சாமி ஆடுபவர்களின் ஆட்டத்தை நினைவுபடுத்துவது மாதிரி இருக்கின்றது. பாவம், அவள் என்ன செய்வாள், நம்பிவந்த கணவன் கைவிட்டு விட்டான். வேறெந்த தொழிலும் தெரியாது. வாழ்க்கை சூன்யத்திலிருந்து விடுபட ஆண்டவனாக ஒரு வழியை அமைத்துக் கொடுத்திருக்கின்றான். தனக்கு ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது என்ற நிம்மதி ஒரு பக்கம் இருக்க, தன்னை நம்பி கிளப்புக்கு வரும் ரசிகர்கள் வாழ்க்கையில் தன்னால் இயன்ற அளவுக்கு சந்தோசம் அளிக்கமுடிகின்றதே என்ற மனத்திருப்தியை, அவளது கண்ணில் இருந்து வழிந்த ஆனந்தக்கண்ணீர் துளிகளே அமைதியாக சொல்லின.

அடுத்து நமது அம்பாள். அம்பாளின் கதையே வேறு. ஆனால் நோக்கம் ஒன்றுதான். அம்பாள் நல்ல வைதீகமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இன்னமும் ஆச்சார அனுஷ்டானங்கள், பூஜை புனஸ்காரங்கள் எல்லாவற்றையும் கடைபிடிப்பவர்கள். Wall Street இல் பெரிய கம்பெனி ஒன்றில் பொறுப்பான பதவி ஒன்றை வகிப்பவர்கள். சின்ன வயதிலிருந்தே சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும், கலாஷேத்திராவில் முறைப்படி கற்றவர்கள். நாட்டிய அரங்கேற்றம் நடத்தி, நிறைய நாட்டியக் கலைநிகழ்ச்சிகளும் உலகெங்கும் டூர் செய்து இந்தியக் கலாச்சாரத்தை பலநாட்டுத் தூதரகங்களின் மூலம் பரப்பியவர்கள்.

அம்பாளின் குடும்பப் பின்னணியில் சோகமென்று எதுவும் கிடையாது. இன்னும் குழந்தைகள் இல்லாவிட்டாலும், நிறைவான திருமண வாழ்க்கை. இவரது திருமணம் காதல் மணம். கலப்பு மணம். கணவர் கலையுணர்வு மிகுந்த ஒரு தலித்து.

கணவரின் பரிபூர்ண சம்மதத்துடனும், கொடுக்கும் உற்சாக மிகுதியாலுமே இந்த அம்பாள் ‘அம்மணி’யானார். இலக்கண சுத்தத்துடன், கலாஷேத்திரா ஸ்டைலில், இவர் நிர்வாணமாக பரதநாட்டியம் ஆடுவது, எனக்குத்தெரிந்து அமெரிக்காவிலேயே முதல் நிகழ்வு என்றுதான் நினைக்கின்றேன். ‘எப்படி உங்களால் இந்த மாதிரி செய்ய முடிகின்றது, அதுவும் இல்லற வாழ்வில் இருந்து கொண்டே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பரந்த மனதும், திறந்த மேனியும் இருந்தால், இந்த தொழில் ரொம்ப சுலபம்’ என்றார்கள்.

அலுவலக நேரத்தில்கூட, ஒழுங்காக வேலை செய்யாமல் internet இல் உலா வரும் பொறுப்பற்ற இந்திய சோம்பேறி programmer கள் மத்தியில், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற ஈடுபாட்டுடன், சிரத்தையுடன் சிருங்கார ரசத்தைப் பரப்பும் இந்த அம்மனையும், அம்பாளையும் நினைத்தால், கைகூப்பி வழிபட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது.

அன்புடன்,

விசேஷ நிருபர்
ரங்கண்ணா ராமன்


7. ஒட்டக்கூத்த ராயன்

சாந்த சொரூபன் தகர டப்பா (Tin Drum) என்கிற மொழியியல் அறிஞரைத் தெரியாதவர்கள் தமிழ் இணைய உலகில் வெகுசிலரே எனலாம். அவர் எழுதுவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிறது என்பது தெரிந்த விசயம் தான்.

ஆனால், உங்களை எல்லாம் மகிழ்விக்க தமிழ்நெட்டில் இப்போது புதிதாக உள்ளிவாயன் பெருங்காய டப்பா (Hing Drum) என்கிற பாபாஜி அவர்கள் எழுந்தருளியிருக்கின்றார். அவரது வருகை நாம் எல்லோரும் பெற்ற பெரும்பாக்கியமே எனலாம்.

பொதுவாக, துணுக்குப் படிப்பவர்கள், ஒருவித மெத்தனமான ரிலாக்ஸ்டு மனதோடு படிப்பார்கள். அவர்களே, கவிதை என்று ஒன்றைக் கையில் கொடுத்தால், ஏதோ அட்டென்ஷனில் தேசிய கீதத்தைக் கேட்பதுபோல, பீடத்தில் வைத்து சூடத்தைக் கொளுத்தாத குறையாக, பயபக்தியோடு ரொம்பவே மரியாதையோடு படிப்பார்கள். இது சகஜம். மரபுக்கும் கவித்துவத்திற்கும் நாம் கொடுக்கும் மரியாதையின் அடையாளமே அது.

பெருங்காய டப்பாவின் கவிதைகள், தமிழினத்தை சீர்திருத்துவதற்காக எழுதப்பட்டவை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே, பெருங்காய டப்பாவின் கவிதைகளை படிப்பதற்கு முன், “மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு, துணுக்குப் படிப்பதுபோல, ஜாலியாக ரசித்துப்படியுங்கள். அதில் வரும் சத்தமும் சந்தமும் தானாகவே உங்களை ஆட்கொள்ளும்.

பெருங்காய டப்பாவின் மூன்று கவிதைகளை இன்று அனுப்புகிறேன். மற்றவற்றை இன்னொரு நாள் அனுப்புகிறேன். உங்களது விமரிசனங்கள் எதனையும் தாங்கும் வலி மை பெருங்காய டப்பாவுக்கு உண்டு என்று நம்பலாம். “வாசமில்லா டப்பாயிது… வசந்தத்தைத் தேடுது…” என்று பாடினாலும் அசமந்தமாகக் கேட்டுக்கொள்ளும்.

எதையும் தாங்கும் இதயம்கொண்ட டப்பாயிது; எளிதில் நொறுங்கிப் போகா டப்பாயிது; வெள்ளத்தால் அழியாத, வெந்தணலால் வேகாத, மோப்பக் குழையா பெருங்காய டப்பாவே!

அன்பன்
ஒட்டக்கூத்த ராயன்

டிஸ்கிளெய்மர்: பெருங்காய டப்பாவுக்கும் ரங்கபாஷ்யக் குழுவுக்கும் கொடுக்கல் வாங்கலோ, பிறிதொரு சம்பந்தமோ கிடையாது.


8. தகர டப்பா :: பண்ணையார் குடும்ப சரித்திரம் அல்லது மோகினிப் பித்தர்கள் மர்மம்

அம்புரோஸின் பொறுப்பற்ற பில்லி சூன்ய மந்திரங்கள் நாட்டில் இவ்வளவு பாதிப்பை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க முடிந்திருக்காது. இத்தனைக்கும் தமிழ்நெட்டின் பிரபல்ய one-line comedian, மதிப்பிற்குரிய செல்லையா திரு அவர்கள் ‘உள்ள ஆபாசமா?’ என்று வினவி எச்சரித்தும்கூட, மக்கள் இந்த மயக்க வலையில் சிக்குவது மிகவும் வருந்தத்தக்கதே.

சுலைமான் போன்ற இளைஞர்கள் இந்த மாதிரி மோகினி மந்திரங்களுக்கு, தேடி வந்து விழும் விட்டில்பூச்சி மாதிரி முதற்பலி ஆவர் என்பது எதிர்பார்த்ததே. ஆனால், விவேகம் மிகுந்த சுவாமிநாதன் கூட நிதானத்தை இழந்து வாழைத்தோப்பு தரும் கிறக்கத்தில் தம்மை அர்ப்பணித்து விட்டது எம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றது. தமிழர்களாகிய நாம் இந்த கிறக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். இந்த நேரத்தில்கூட, நமது கொடுக்காப்புளிப் புலவர் தமிழ் அரசன் அம்புரோஸுக்கு சரியான பதிலடி ‘கொடுக்கா’மல் அசமந்தம் காத்தாரென்றால், அது அவர் வெறும் கொடுக்கா ‘புலி’ புலவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ததாகி விடும்.

சுவாமிநாதனுக்கு இதில் என்ன சம்பந்தமோ எனக்குத் தெரியாது. ஆனால், வேண்டுமென்றே அவர் உண்மையில் நடந்ததை மாற்றி எழுதியிருக்கின்றார். பவுர்ணமி அன்று வந்தது சின்னவீட்டுக்கு சென்று கொண்டிருந்த பண்ணையார் அல்ல. பண்ணையாரின் மூத்த மகள்தான், நிலாச்சோறு நிறைய தின்றுவிட்டதாலும், ஏப்பம் வராமல் அவஸ்தையாக இருந்ததாலும் வாழைத்தோப்புப் பக்கம் வாக் போனாள். அங்கே மோகினிக்காக காத்திருந்தவர் (அவ’ர்’ யாராயிருந்தாலும் நமக்கென்ன, அவர் நமக்கெல்லாம் பரிச்சயப் பட்டவர், வேண்டியவர் என்பதால் மரியாதை கொடுக்க வேண்டியதாயிற்று, அவ்வளவுதான்), பண்ணையார் மகளை மோகினி என்று நினைத்து ஆசையாய் ஒடினார். அவரைப் பார்த்ததும் ‘பேயாக இருக்குமோ?’ என்று மிரண்ட அந்த பெண் கூச்சலிடவும், ஊரே திரண்டுவிட்டது. ஆனால் அவர்கள் இந்த பெண்ணின் கதையைக் கேட்காமல், அது அவளது கள்ளக் காதலன் என்று பஞ்சாயத்து செய்து, அவருக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி மற்ற மரியாதைகள் எல்லாம் கச்சிதமாக செய்து கழுதையின்மேலேற்றி ஊர்வலமும் அனுப்பி வைத்தனர்.

இந்த அவமானம் தாங்காமல் பண்ணையார், மூங்கில், உயிர்க்கோழி, 18 முட்டை, ஆறுமுழக்கயிறு (அதுதான், தெரியாதவர்களுக்கென்று அம்புரோஸ் ஒரு சரக்குப் பட்டியலே போட்டுக் கொடுத்திருக்கின்றாரே) சகிதமாக புளியமரத்துக்குப் போய் சுருக்குப் போட்டு செத்துவிட்டார். பண்ணையாருக்கு ரெண்டு மகள்கள். அந்த பெண்களுக்கு எதிர்காலம் திடீரென்று சூன்யமாகி விட்டது. ஜே ஜே என்று வாழ்ந்த பண்ணையாரின் குடும்பம் ஒரு பாதகரின் அற்ப மோகினிப் பைத்தியத்தினால், நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. காலமெல்லாம் தீராத அசிங்க முத்திரை, அந்த அக்காப் பெண்ணின்மேல் குத்தப் பட்டுவிட்டது.

பாரிவள்ளல் புதல்விகள் கதை உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கின்றதோ, தெரியாது. ஆனால், இந்த பெண்களின் கதையும் அங்கவை, சங்கவை சகோதரிகள் கதையாகத் தான் ஆகிவிட்டது. இனிமேல், எந்த சேர, சோழ, பாண்டிய மன்னன் (கொடுக்காப்புளி மன்னன் என்று வாசிக்கவும்) இவர்களை பெண்கேட்டு வந்து மணம்முடிக்கப் போகின்றான். ஆகவே அவர்கள் சோகத்தில்,

அற்றைத் திங்கள் ‘அவ்வெண்ணிலவில்’
எந்தையும் இருந்தார், தோப்பும் இருந்ததுவே

என்று திரும்ப திரும்ப அந்த பவுர்ணமி நாளையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். பாவம், கபிலர் மாமாதான் தள்ளாத வயதிலும் கூட பொறுப்பேற்று வரன் தேடிக்கொண்டிருக்கின்றார்.

இந்தப் பெண்களின் வீடு, சொத்து, பத்து, வாழைத்தோப்பு எல்லாம் போய்விட்டது. அக்காப் பெண் வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் சுரத்தில்லாமல் நடைப்பிணம் போல் காலம்தள்ளுகின்றாள். தங்கைய்யோ அக்காவுக்கு நேர்ந்த கதியை நினைத்து உருகி அழும் அதே வேளையில், தனது கடமையுணர்ச்சியோடும் நெஞ்சுரத்தோடும் அக்காவைத் தேற்றி பழையதை மறந்து எதிர்கால வாழ்க்கையை இனிமையாக வாழவேண்டும் என்று உற்சாகமூட்டுகின்றாள்.

இந்த சம்பாஷணைகளை சிம்பாலிக்காக, அக்காக்காரி ‘வாழலை, வாழலை…’ (வாழ இல்லை) என்று தெருவில் கூவி வாழை இலை விற்பதும், தங்கையோ, ‘வாழக்கா, வாழக்கா…’ (வாழ் அக்கா) என்று கூவி வாழைக்காயை விற்பதுவும் வாடிக்கையாகி விட்டது.

பண்ணையார் குடும்பம் வாழைத்தோப்போடு கொடிகட்டி வாழ்ந்த காலம் போய், ஒரு மோகினிப்பித்தரால், சின்னாபின்னமாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட கதையை ‘வாழக்கா’, ‘வாழலை’ என்ற ரெண்டே வார்த்தைகளில் சொல்லிக்கொண்டு செல்லும் அக்கா-தங்கையைப் பார்க்கும் ஊர்மக்களுக்கு கண்கள் குளமாகி, நெஞ்சே பிளப்பதுபோல இருந்தது.

!
!
!
!

பண்ணையாருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்

தகர டப்பா


9. சாந்தி தங்கராஜன்

நீங்க இங்க எழுதறதுல ரொம்ப சந்தோசம். இந்த மாதிரி ஒரு கம்பெனிக்காகத்தான் ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டிருந்தேன். நீங்க ஒண்ணு கவனிச்சீங்களா, இங்க எழுதறதுல முக்காலே அரைக்காவாசிப் பேர் எல்லாருமே ஆம்பளைங்க தான். என்னத்தத்தான் மாஞ்சி மாஞ்சி இந்த இன்டர்நெட்டைக் காட்டி மாயறாங்களோ, நமக்கு வீட்டு வேலைகளுக்கே நேரம் பத்தமாட்டேங்குது. கழுதை கெட்டா குட்டிச் சுவர்ங்கற மாதிரி, எந்நேரமும் இன்டர்நெட்டுத்தான் அவருக்குப் பெரிசாப் போச்சு. இப்ப வந்தவங்க எல்லாரும் WALL STREET ல போயி உத்தியோகம் பார்த்து கை நெறய சம்பளம் வாங்கறாங்க. இவரு இன்னமும் இந்த little WALL (குட்டிச்சுவர்) STREET ஐயே சுத்தி சுத்தி வந்திக்கிட்டு இருக்காரு. எங்களுக்கு எப்பத்தான் விடியப் போகுதோ?

ரங்கண்ணாவுக்கு நீங்க நறுக் நறுக்குன்னு பதில் வெட்டற ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தட்டிக்கேட்க ஆளில்லைங்கற (ஆக்சுவலா பொம்பளைங்க இல்லைங்கற) தைரியத்துலதானே, அவரும் டிப்பிக்கல் ஆம்பளை மாதிரி இவ்வளவு இளக்காரமா எழுதறாரு. பரவாயில்லை, விட்டுத்தான் பிடிப்போமே. அவரும் அவரோட ஜால்ரா வெட்டியாப் போனவனும் என்னதான் சொல்ல வர்றாங்கன்னு ஒரு கை பார்த்துருவோம். Let us hear it from the horse’s mouth ன்னு சொல்லுவாங்களே, இந்த லொள்ளு பிடிச்ச ஜொள்ளுக் குதிரைங்க, நம்ம கிட்ட கொள்ளுவா கேட்குது? கேக்கட்டும், கேக்கட்டும், போகப் போக நாம அவங்களுக்கு அல்வாவே கொடுப்போம்.

அந்தம்மா கிருஷ்ணவேணி மாமியோட முகராசிக்காகத் தான் நானும் ரங்கபாஷ்யக் குழுவுல சேர்ந்து எழுதவே ஒத்துக்கிட்டேன். அதுக்காக ரங்கண்ணாவையோ, குப்பனையோ குறை சொல்லறதா அர்த்தம் இல்லை. ஆண் வர்க்கத்துக்குன்னே உள்ள குறுக்கு புத்தி அவங்களை விட்டு எங்க போகும்? அதைத் தப்பா பெருசா எடுத்துக்கல்லேன்னா, மத்தபடி எங்க டீம்ல எல்லாரும் ஜாலியான ஆளுங்கதான். அதுவும் ரங்கண்ணா ரொம்ப தமாஷா பேசுவார். எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கும். வெட்டிக்கு வாய் அதிகம். டீம்ல யாரும் அவனைக் கண்டுக்கறதேயில்லை. அதான், இங்க வந்து உங்களை எல்லாம் அறுக்கறான்.

ஆமா, தேங்க்ஸ்கிவ்விங்க்கு என்ன செய்யப் போறீங்க? எங்கயும் போறீங்களா…? நாங்க இந்த வருஷம் வீட்டோடத்தான். எங்க வீட்டுக்காரரோட கிளாஸ்மேட் நண்பர் ஒருத்தரு குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வர்றாங்க. வியாழனும் வெள்ளியும் வீட்டோட இருந்து விருந்து சாப்பிட்டுட்டு, சினிமா, ஷாப்பிங்ன்னு பொழுது போயிடும். சனிக்கிழமை நியூயார்க்கை சுத்திப் பார்க்க எல்லாரும் 2 வேன்ல போறோம்.

நாளைக்கு காலையில வீட்டில வெண்பொங்கல், உளுந்தவடை, சேமியா கேசரி. வடைக்கு இந்த MTR mix, GITS mix ன்னு விக்கறான்னே இந்த ரெடிமிக்ஸ் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. டேபிள்ட்டாப் கிரைண்டர் ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன். உளுந்து ஊறப்போட்டு, நைஸா அரைச்சி எடுத்து, நெறய shallots உம் கறிவேப்பிலையும், இஞ்சியும் நறுக்கிப் போட்டுத்தான் வடை சுடுவேன். Shallots ன்னாத்தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே, நம்ம ஊரு சின்ன வெங்காயம் மாதிரி, ஆனா இன்னமும் பெருசா, பருவட்டா இருக்கும். பவுண்டு 2 டாலர் சொல்லுவான், இருந்தாலும் அதைப் போட்டு வடை சுட்டு சாப்பிட்டுட்டீங்கன்னா, வாழ்க்கைக்கும் நாக்கு அதையே நெனச்சி ஏங்கிக்கிட்டிருக்கும்.

அப்பறம் டின்னருக்கு மெயின் ஐட்டம் டர்க்கி. குழந்தைகளுக்கு ஆவன்ல வச்சி, stuffing போட்டு ரோஸ்ட் செஞ்ச டர்க்கி. பெரியவங்களுக்கு வான்கோழி பிரியாணி. தீபாவளி, பொங்கல் நேரத்துல விருதுநகர் நாடார் கடைகள்ல வான்கோழி பிரியாணி ஸ்பெஷல்ன்னு மணக்க மணக்க போடுவாங்களே, அதுகூட தாளிச்சிக் கொட்டின கெட்டித்தயிர்ப் பச்சடியும் சேர்த்துக்குங்க. ஒரு தடவை சாப்பிட்டுட்டு பீடா போட்டாச்சுன்னா, அந்த பிரியாணி மணம் ஒரு வாரத்துக்கு கையை விட்டுப் போகாது. அதே ரெசிப்பியை வச்சித்தான் நாளைக்கு வான்கோழி பிரியாணி செய்யப்போறேன்.

ஆமா, நான் பாட்டுக்கு பிரியாணியைப் பத்தி பேசிக்கிட்டே போறேன். மொதல்ல, நீங்க வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா, அதச் சொல்லுங்க. நீங்க எழுதற ஜாடைய வச்சிப் பார்த்தா, நீங்க பிராமின்ஸ் போலத் தெரியுது. ஆனா பிராமின்ஸ் ஒண்ணும் பப்ளிக்கா மட்டன் சாப்பிடறது இல்லியே. எங்க ரங்கபாஷ்யம் சார் ஐதிகமான அய்யங்கார்தான். ஆனா, அவர் குடிக்கற விஸ்கியில பாதியைக் கூட பாலமுரளிகிருஷ்ணாவோ, சுருளிராஜனோ தாக்குப்பிடிச்சி சாப்பிட முடியாது. ஆனா ஒண்ணு, கிருஷ்ணவேணி மாமி வீட்டுல மட்டன் வகையறா எல்லாம் புழங்க மாட்டாங்க.

சரி உமா, உளுந்து ஊறிடுச்சுன்னு நெனைக்கிறேன். போயி அரைக்கனும். நெறைய வேலை இருக்கு. அடிக்கடி எழுதுங்க. அப்ப பார்க்கலாமா?

அன்புள்ள

சாந்தி தங்கராஜன்


10. சராசரி குப்பன்

கும்பிடுறேனுங்க. நான் தான் குப்பன், இப்பத்தான் ஊர்ல இருந்து வந்தேன். ஊரா அது, சரியான குப்பக் காடு. தேர்தல் வேலைக்குன்னு நம்மள நல்லா பெண்டு நிமித்திப்புட்டாங்க. வேலை முடிஞ்சதும் ‘அப்ப பார்க்கலாண்டா குப்பா’ன்னு கழத்திப்புட்டாங்க. கட்சி ஆபிஸ்ல இருந்து அப்பப்ப பிரியாணி பொட்டலமும் பாட்டிலும் கொடுத்ததோடு சரி, கைச்செலவுக்கு நாலு காசு தர வக்கில்லாம போயிட்டாங்க.

என் வாழ்க்கையிலே இந்த மாதிரி ஒரு தேர்தலை நான் பார்த்ததேயில்லை. அரசியல் வாதிங்க எல்லாம் ரொம்ப குழம்பிப் போயிருக்காங்க. எதிர்காலம் ஒரே இருட்டா இருக்கறதாவும் பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியாம திகைக்கறதாகவும் பேசிக்கறாங்க. முன்னாடி எம்ப்பியா இருந்த எங்க பக்கத்து ஊர்க்காரருக்கு இந்தவாட்டி கட்சில்ல இருந்து டிக்கட்டு கொடுக்கல. அவங்க சம்சாரம் ‘போயி கொத்தனார் வேலை செஞ்சாவது நாலு காசு சம்பாதிச்சுட்டு வந்தாத்தான் சோறு’ன்னு சொல்லி விரட்டி அடிச்சிட்டாங்க. பாவம், அவரும் என் கூட சேர்ந்துக்கிட்டு போஸ்டர் ஒட்டுன்னாரு. அமெரிக்காவுக்கு நான் போய் சேர்ந்ததும் பின்னாடியே அவரையும் கூப்புட்டுக்கணும்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டாரு. காளிமுத்து மாதிரி இணையத்துல நல்லா அறிக்கை விடுவாராம். நாட்ல நெலம அப்படி இருக்கு. இந்த லட்சணத்துல எம் பையன் மந்திரி ஆயிருவான்னு ஆத்தா வேற ஊரெல்லாம் பொலம்பித் தள்ளறா. சுத்த விவரம் கெட்ட ஆத்தா.

சொந்த ஊர்லதான் செல்வாக்கு இல்லேன்னு ஆயிடுச்சு. ஆனா, எங்க மொதலாளி புண்ணியத்துல குப்பன் கெட்டா அமெரிக்கான்னும் அமஞ்சுடுச்சி பாருங்க. இந்தக் குப்பன் ரொம்ப கொடுத்து வச்சவன் தாங்க. ஆனா இதெல்லாம் பார்க்க எங்க நயினாதான் இல்லே. காமராசு காலத்துலேயே மண்டையப் போட்டுட்டான், பாவம்.

ஆனாலும் இந்த நாலு மாசத்துல அமெரிக்கா ரொம்பத்தான் மாறிப்போயிடுச்சுங்க. எங்க மொதலாளி ரங்கபாஷ்யம் சார் முன்னமாதிரி இல்லே. அவரோட பையன் பார்த்தசாரதியும் மாட்டுப்பொண்ணும் தனிக்குடித்தனம் போயிட்டாங்க. ரொம்ப தூரம் ஒண்ணும் போயிடல்ல, ரெண்டு பிளாக்கு தள்ளிதான். இருந்தாலும் எம் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான்னு இத்தினிநா நம்பிக்கையோட இருந்த கிருஷ்ணவேணி மாமி ஏமாற்றத்துல இடிஞ்சி போயிட்டாங்க. டிப்பிரஷன்லேயே டவுன் ஆகி, புரோசாக் மாத்திரை சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க. வளர்த்த கடா மார்ல பாயும்னு சொல்லுவாங்க. ரங்கபாஷ்யம் சாரோட பையன் தனிக்குடித்தனம் போனது மாத்திரம் இல்லாம, மொகம்மூடி வேற மாட்டிக்கிட்டு இணையத்துக்கே வந்துட்டதா, நம்ம சர்க்கஸ் வளையாபதி சார் சொன்னாரு. பாவம் எப்படி இருந்த பாஷ்யம் சார் குடும்பம், யார் கண்ணு பட்டதோ, எப்படி ஆயிடுச்சி பாருங்க.

வளையாபதி சாரும் துப்பாக்கி நாயக்கரும் தான் என்னைக் கூப்பிட்டுப் போக ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருந்தாங்க. பாஷ்யம் சார், கம்பெனியில நெறய பேருக்கு சம்பள பாக்கி வச்சிருக்கறதாகவும், அதனாலதான் இணையத்துல எழுதறத விட்டுட்டாங்கன்னும் சொன்னாங்க. நான் இல்லாத நேரம் வெட்டியா போனவனை, நம்ம பிலிப்பய்யாவுக்கு ஏஜன்ட்டா இர்றான்னு சொல்லிட்டுப் போனேன், அவன் என்னடான்னா அவரை பாடாப் படுத்திட்டான்னு சொன்னாங்க.

என்ன இருந்தாலும், நீங்க வெட்டிக்கு இவ்வளவு தூரம் வாலு முளைக்க விட்டுருக்கக் கூடாதுதான். கடேசில என்னமோ, ஒரு நல்ல குருநாதராப் பார்த்து சீடனா சேர்ந்தானே, அந்த மட்டுக்கும் சந்தோசம் தான். நான் வளையாபதி சாரையும் துப்பாக்கி நாயக்கரையும் எப்படியோ பேசி நைஸ் பண்ணி திரும்பவும் எழுதவக்கப் பாக்கறேன். துப்பாக்கி நாயக்கரு பார்க்கறதுக்குத்தான் இஞ்சி மொறப்பா தின்னவரு மாதிரி இருப்பாரு. மத்தபடி, அவருக்கும் வளையாபதி சார் மாதிரியே அனுசரிச்சிப் போகற சுபாவம்தான். இங்க இணையத்துல இப்ப எல்லாரும் உசிலைமணி மாதிரி தலையினாலேயே உருண்டு நடக்கறதயும் ஓடறதயும் பார்த்தா, சர்க்கஸ் வளையாபதி சார் ரொம்ப குஷாலாகிப் போயிடுவார்.

ஒங்களை எல்லாம் திரும்பியும் சந்திக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோசம். ஒரே கொட்டாவியா வர்றது… கொஞ்சநா டைம் கொடுங்க. மொதல்ல இந்த ஜெட்லாக் போயித் தொலையட்டும். வெட்டியா போனவனைப் பத்திக் கவலைப் படாதீங்க. அவனை எப்பப்ப, எப்படி தட்டிவிட்டு ஒரு லெவல்ல வச்சிருக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். அவனைப் போயி சீரியஸா எடுத்துக்கிட்டு, இத்தினிநா ஜாலியை கெடுத்துக்கிட்டு, வெட்டியா போயிட்டீங்களே. சரி சரி, மேக்கொண்டு ஆக வேண்டியதப் பாருங்க. ஒண்ணு மாத்திரம் மனசுல வச்சுக்கங்க…

ஜாலிதான் நமக்கு எப்பவும் ஜோலி

சராசரி குப்பன்

பி.கு.: ஆமா, பீன் கவுண்டர் அய்யா, அதுதான் நம்ம அலெக்ஸ், அப்பறம் மாப்பிள்ள மகேஷ் இவுகள்ளாம் ஊர்லதான் இருக்காகளா?


11. ரங்கண்ணா ராமன்

காலப்போக்கின் வேகமும், காலத்தின் அருமையும், காலன் வந்து வாசலில் நிற்கும்போது தான் தெரியும். அப்போது தான் வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக்கில் ஓட்டிப்பார்ப்பார்கள். அடடா, வாழ்க்கையை எப்படியெல்லாம் வெட்டியாக போக்கினேன், அந்த நேரங்களை என் மனைவி, மக்களுடனும் மற்ற நண்பர்களுடனும் மகிழ்ச்சிகரமாக கழித்து இனிமையான நினைவுகளாவது நிறைய விட்டுச்சென்றிருக்கலாமே என்றெல்லாம் தோன்றும். இந்த காலம் கடந்த ஞானோதயத்துக்குப் பெயர்தான் ‘கடைசி நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது’.

ரங்கபாஷ்யக் குழுவினர் இங்கே எழுத ஆரம்பித்து சென்ற வாரத்துடன் ஒரு வருடம் ஆகிறது. ஏதோ நேற்றுதான் ஆரம்பித்த மாதிரி நிறைய பேருக்குத் தோன்றலாம். சென்ற மார்ச்சு மாதம் 10 ஆம் தேதி பெரியவர் ரங்கபாஷ்யம் அவர்கள் திடுதிப்பென்று இங்கு குதித்தார். அன்றிலிருந்து இன்றுவரையிலும் எங்கள் குழுவினர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கையை நிறையப் பேரால் ஊகிக்கக் கூட முடியாதுதான். ஒரு வருடம் என்றால் எவ்வளவு என்பதனை சிறிதாக நினைவூட்டவே ‘சங்கரா, சங்கரா’ என்ற தத்துவம் இங்கே சொன்னது, யாருக்கும் திகிலூட்ட அல்ல.

(சட்டத்தின் தராசுபடி) குற்றம் செய்துவிட்டு, பிள்ளைகுட்டிகளை எல்லாம் விலகி ஒரு வருஷம் சிறைக்குச் செல்பவன், ‘இதோ, ஒரு வருசம் என்பது கண்மூடி கண்திறக்கும் முன்னாடி மளமளவென்று போய்விடும்’ என்று ஆறுதல் செய்துகொண்டு செல்லுவான். ஆனால், உயிர் போவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன என்று டாக்டர் நாள் குறித்த பின், புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு, காலத்தின் அருமை, வாழ்க்கையின் மகிமை எல்லாமே புதிதாக தெரியும். அய்யோ, போதுமான அளவுக்கு லைஃப் இன்சூரன்சு கூட எடுக்காமல் பிள்ளைகுட்டிகளை அம்போ என்று நடுத்தெருவில் விட்டுச்செல்கிறேனே என்று அப்போது தான் தவறை உணர்வான்.

அந்த வகையில் ஒரு வருடம் என்றால் என்ன என்பதை நினைவூட்டும் வகையில், ரங்கபாஷ்யம் குழுவினரின் முதல் மடலை அடுத்து பிரசுரிக்கின்றேன். tamil.net archives களில், நிறைய மடல்கள் விட்டுப்போயுள்ளன. மேலும் அவற்றில் search போன்றவை எல்லாம் இல்லாததால், எங்கள் குழுவினரின் மடல்களையும் மற்ற நண்பர்களின் பரிமாற்றங்களையும் நேரம் கிடைக்கும்போது தொகுத்து, ஒரு வலைப்புலத்தில் இடலாமா? என யோசித்து வருகின்றேன். அதுவரையிலும், எங்களது குறிப்பிட்ட சில மடல்களையும், அவை சார்ந்த மற்ற நண்பர்களின் மடல்களையும் அவ்வப்போது மறுபிரசுரம் செய்ய உத்தேசித்துள்ளேன். இதில் யாருக்கேனும் உடன்பாடு இல்லையென்றால், தயக்கமின்றி கருத்துச் சொல்லவும்.

மேலும் ஒரு விசயம்:

எது இன்ட்டர்நெட் அடிக்ஷன், எது இல்லை என்று ஒருவரிடம் சொல்லும்போது, கூடவே How will you know When you are in denial, When you are not? என்பதையும் சொல்லவேண்டும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தத்துவத்தை நினைவுகூரும் போது, நம் பிள்ளை, குட்டிகளின் வாழ்க்கையும் இனிமையாக வாழ்வதற்கே என்பதையும் உடன் மனத்தில் கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வெட்கப்படாமல் சொந்த வாழ்க்கையை அலசி, சுகமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும். எப்போதும் பொதுவாக காமெடியே எழுதும் எங்கள் குழுவினர், இங்குள்ள களேபரத்தில் அவ்வப்போது உங்கள் காதில் உரிமையுடன் சங்கும் ஊதிச் செல்வதை பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

என்றென்றும் உங்கள் அன்பையும் நட்பையும் நாடும்

அன்பன்
ரங்கண்ணா ராமன்


12. No Subject :: ரங்கபாஷ்யம்

அநேக நமஸ்காரம்.

இணையத்தில் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? இப்பவும் பகவத் க்ருபையாலும் ஸ்ரீ ஆசார்யாள் அனுக்ரஹத்தாலும், பார்த்தசாரதி, மாட்டுப்பொண்ணு சம்பாத்தியத்தினாலும் எனக்கு வாழ்க்கை ஒரு குறையும் இல்லாமல் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இன்னக்கி தலைப்பு வந்து தங்கமலை ரகசியம். தங்கமலையைப்பற்றி உங்களில் நிறையப் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அப்போது நீங்கள் சிறுவர்கள். தமிழ் அரசன், சுலைமான், லோகநாதன் போன்ற இளைஞர்கள் பிறந்திருக்கவேயில்லை. ‘லோக’த்தில் ஆணவ மலங்களும் கொஞ்சம் குறைவே.

கிருஷ்ணவேணியின் பெரியப்பா அனந்தாச்சாரிக்கு சொந்தமானது தங்கமலை. ஆறுபடையப்பனின் கிரானைட் மலைக்கு அருகாமையில் உள்ளது. தங்கமலை முழுதும் தங்கப்பாறைகள் மயம்தான். தங்கப்பாறைகளை டைனமைட்டினால் தகர்த்தெடுத்து, வடிவாகக் கூறுபோட்டு, சுண்ணாம்பில் காவி கலந்து சாயம் பூசி, கள்ளக்கடத்தல்காரர்களின் மூலம் வெளிநாடுகளுக்கு நல்ல விலைக்கு விற்று ஏற்றுமதி செய்துவிடுவார்.

பக்கத்தில் உள்ள கிடாமலை எஸ்டேட்டில், ஏற்கனவே இருந்த தேயிலைத் தோட்டங்களை அழித்துவிட்டு கஞ்சாச்செடிகள் பயிரிட்டு, கொழுத்த லாப ருசி கண்டவராயிற்றே! சர்க்கார் ஆபீசர்கள் வந்தால், கிடாமலை எஸ்டேட்டில் உள்ள கெஸ்ட்ஹவுசில் ஸ்பெஷல் பார்ட்டி தடபுடலாக நடத்தி, சன்மானமும் கொடுத்து அனுப்பிவிடுவார். அதனால் சர்க்காரிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

தமிழ்சினிமாக் காரர்கள் சூட்டிங் செய்வதற்காக ஒருமுறை தங்கமலைக்கு வந்திருந்தார்கள். தங்கமலையில் தங்கப்பாறைகள் உற்பத்தி செய்து கடத்தல் செய்வது வெளியே யாருக்கும் தெரியாத ரகசியம். இந்த ரகசியம் குடும்பத்தை விட்டு யாருக்கும் வெளியே தெரியக்கூடாது என்று அனந்தாச்சாரி கண்டிசனான உத்தரவு போட்டு இருந்தார். அனந்தாச்சாரியாரைப் பார்க்கவே பயமாக இருக்கும். நல்ல பவுன் கலரில், கம்பீரமான உருவம். எடுப்பான மூக்கு. தூக்கித் துருத்திக் கொண்டு ‘உள்ளேன் அய்யா’ சொல்லும் காதுகள். பார்ப்பதற்கு ஜூலியஸ் சீசர் மாதிரியே இருப்பார். எங்கள் வம்சாவளி அப்படி.

கிருஷ்ணவேணி அப்போது விவரம் தெரியாத (இப்போதும் கூட அபிஷ்ட்டுதான்) சிறுமி. பட்டுப்பாவாடையும், ரெட்டைச்சடையுமாக காமராவையும், சினிமாக்காரர்களையும் சுற்றி சுற்றி ஆவலுடன் வந்து கொண்டிருந்தாள். அந்த சினிமாவுக்கு கதை வசன கருத்தன், ஏதோ தென்மாவட்டத்தைச் சேர்ந்த வறண்ட கிராமத்தான். இந்த வசன கருத்தன், மிட்டாயும், அதே மாதிரி இனிப்பான பேச்சும் கொடுத்து கிருஷ்ணவேணியை சிநேகம் பிடித்துக்கொண்டான்.

கிருஷ்ணவேணியின் அந்த அறியாப்பருவத்தில், அப்பாவிப்பிஞ்சு உள்ளத்தில், தங்கப்பாறைகளைப் பற்றிய ரகசியத்தை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. ரகசியத்தை அறியவந்ததும், வசனகருத்தனுக்கு, ரெண்டு நாட்களுக்கு நித்திரையோ, இருப்போ கொள்ளவில்லை. ரகசியத்தை நாலு பேருடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையும் வயிறும் வெடித்துவிடும் போல இருந்தது. தனது சொந்த அனுபவத்தையே கதையாக எழுதி காமெடி சீன் மாதிரி சேர்ப்பது பற்றி யோசிக்கத் துவங்கினான்.

அப்படித்தான் ஆரம்பமானது, அனந்தாச்சாரியின் காதுகளைப் போலவே ராஜாவுக்கும் கழுதைக்காதுகளாகப் படைத்தான். எப்போதும் தலைப்பாகையை கொஞ்சம் இறக்கிக்கட்டி, காதுகளின் ரகசியத்தைக் கட்டிக்காத்து வந்த ராஜா ஒருநாள் தலைப்பாகை இல்லாமலேயே தவறுதலாக அந்தப்புரத்துக்குள் நுழைந்து, வேலைக்காரியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகிறார். அப்புறம் வேலைக்காரிக்கும் தலையும் வயிறும் உப்பி, மன உபாதை கூடிவருகின்றது. பின்னர் பைத்திய வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம், ஒரு உபாயத்தை பரிகாரம் சொல்கின்றார்கள்.

உபாயத்தின்படி, ஊருக்கு வெளியே பாதாளமாக ஒரு குழி வெட்டி வேலைக்காரி குழியில் எட்டிப்பார்த்து, ‘ராஜாக் காது கழுதைக் காது, ராஜாக் காது கழுதைக் காது’ என்று ஆசைதீர உரக்க, தலையும் வயிறும் திரும்பவும் நார்மல் லெவலுக்கு சுருங்கும்வரை, கக்கியும், கத்தியும், நிம்மதியும் சுகமும் அடையப்பெறுவாள். இந்தக் காட்சிகளை காமெடியாக அமைத்து படத்துக்கு தங்கமலை ரகசியம் என்று பெயரும் மாற்றம் செய்து திரையிட்டார்கள். படமும் ஓகோ என்று ஓடி ஜமாய்த்தது.

இதை எல்லாம் ஏன் சொல்ல வருகின்றேன் என்றால், நமது சிநேகிதர் தமிழ் அரசருக்கும் பத்தியமில்லா, பைத்திய வைத்தியம் ஒன்று கைவசம் வைத்திருக்கின்றேன். தமிழ் இணையம் இப்போதைக்கு ஒரு unmoderated single topic list ஆக இருக்கின்றது. இது ஒரு புறம்போக்கு பூமி. யார் வேண்டுமானாலும் உழுதுவிட்டுப் போகலாம். விரைவில் இதற்கு ஒரு வழி பார்ப்போம். நல்ல நேரம் கூடிவரும்போது, எல்லோருக்கும் தனித்தனியாக egroups ஸ்டைலில் ஆளுக்கொரு லிஸ்ட் கொடுத்து விடுவோம்.

தமிழ் அரசனுக்கு, பார்ப்பான்-bashing.com என்ற பெயரில் ஒரு வெப்சைட்டும், ஒரு லிஸ்ட்டும் அன்பளித்து விடுவோம். அத்துடன் TamilBot என்று ஒரு artificial intelligence software உம் கொடுக்கலாம்.

அது உலகமுழுக்க உள்ள தமிழ்சைட்டுகளை தேடிச்சென்று, பக்கங்களை parse, syntax, semantic வேலைகள் எல்லாம் செய்து, பக்கங்களின் உட்கருத்துக்களை அறிந்து ஏதேனும் பார்ப்பன சதிகள் வேலை செய்கின்றனவா என்று ஆராய்ந்து உடனுக்குடன் ரிப்போர்ட் செய்யும். தமிழ் அரசனின் வேலையும் மிக சுலபமாகிவிடும். ரிப்போர்ட் வந்தவுடன், அவர் ஆசை தீரும்வரை பார்ப்பனர்களுக்கு அர்ச்சனை போட்டு, மண்டை சுருங்கி, வையத்துள் வாழ்வாங்கு, மண்டை போடும்வரை வாழ்வார்.

எம்பெருமான் திருவருள் அரசருக்கு எப்போதுமே உண்டு.

அடியேன்
ரங்கபாஷ்யம்


13. தொண்டரடிப் பொடியன் ரங்கண்ணா ராமன்

ரங்கபாஷ்யம் குழுவினருக்கு வயதாகிக் கொண்டே வருவதால் ஏற்படும் தளர்ச்சியை என்ன பாடுபட்டாலும், மறைக்க முடியவில்லை. எழுதும் எழுத்தில் கிழத்தன்மை தென்பட்டாலும் கூட, ஆணவமலங்களாலும் அலைகள்போல சீறிப்பாயும் புலால் கனவுகளாலும் ஏதோ கொஞ்சம் தாக்குப்பிடிக்க முடிகின்றது. இருந்தாலும், இதுவே சாசுவதமாக இருக்கமுடியுமா? எனக்குப் பின்னர் இணையத்தில் யார் என்ற கவலைகள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. கோமாளித்தனத்தில், தர்பாரில் எனக்கிணையாக எவரும் உண்டோ? என்று ரொம்பவே இறுமாப்புக் கொண்டிருந்தேன்.

எனது கவலையைத் தணிப்பதற்கென்றே, முனீஸ்வரரே பார்த்து நண்பர் அம்ப்ரோஸ் செபஸ்தியானை அனுப்பிவைத்திருக்கின்றார். இனிமேல் தத்துவராயரும் அம்ப்ரோஸும் நடத்தும் கலைநிகழ்ச்சிகளே இணையத்தைக் கட்டுக்குலையாமல் சுவாரஸ்யமாக கொண்டுசெல்லும் என்று நான் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

உண்மையிலேயே சொல்லுகிறேன், இப்போது எனக்கு நன்றாகவே சுகமாக, ரிலாக்ஸ்டாக உள்ளது. நகைச்சுவையைப் பற்றி எனது அனுபவங்களை சற்றுப் பகிர்ந்துகொள்ள இது நல்ல நேரம்.

தமிழ் இணையத்திற்கு வந்தபின்னர் தான் எனக்கு நிறைய சுகமான அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. முதலில் தமிழில் மீண்டும் எழுதுவதை (அன்புள்ள அம்மா, அப்பா அவர்களுக்கு நலம், நலமறிய அவா, என்றெழுதிகூட நீண்ட வருடங்கள் ஆகியுள்ளன) தூசிதட்ட முடிந்துள்ளது. தமிழ்ப்பத்திரிக்கைகள் படித்தே வெகுவருடங்கள் ஆகிவிட்டன. எப்பொழுதாவது நண்பர்கள் வீட்டில் coffee table இல் குமுதமோ, விகடனோ பார்த்தால் நாலைந்து பக்கங்கள் புரட்டிப் பார்ப்பேன், அவ்வளவுதான். பள்ளிக்கூடத்தில் தமிழ்ப்பாடத்தில், இலக்கணம், செய்யுள் எல்லாம் படித்து, கட்டுரைகள் எழுதியதுதான். தமிழில் தனி ஆர்வம் என்று அப்போது எதுவும் கிடையாது.

மிகவும் மோசமான வீடியோக்களே கிடைத்துவந்ததாலும், படவிமரிசனங்கள் கிடைக்காததாலும் (சில தடவைகள் கடைச்சொந்தக்காரன் – குஜராத்திக் காரன் – சிபாரிசை நம்பியே கேஸ்ஸட் எடுத்து வந்திருக்கின்றேன்), தமிழ்ப் படங்கள் பார்த்ததும் மிகக்குறைவு. மேலும், மற்ற பல விசயங்கள் என்னை பிஸியாக வைத்திருந்ததாலும், தமிழ் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஓரளவிற்குத்தான் நாட்டம் கொள்ளமுடிந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக, தியேட்டருக்கு சென்று தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கின்றேன். என் பின்னணி மாதிரி, இணையத்தில் உள்ள கணிசமானப் பேர்களுக்கும் பொருந்திவரும் என்று தெரியும்.

மற்றபடி நகைச்சுவையாக எழுதும்போது, எப்போதுமே sarcasm ஒரு பங்கு கலந்துதான் எழுதுவேன். நவரசங்களைப் போல அதுவும் ஒருவகை நகையுணர்வுதானே. இருப்பினும் அடுத்த மனிதர்களின் உணர்வுகளை மனத்தில் வைத்துக்கொண்டு, கணக்கிட்டுத்தான் sarcasm கலக்க முயற்சிப்பேன். சில நேரங்களில் ஆர்வமிகுதியில் judgemental error செய்ய வாய்ப்பிருக்கின்றது. ஆனால், இணையத்தவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் ரசிக்கக் (சகிக்க?) கற்றுக்கொண்டார்கள்.

சிலருக்கு நகைச்சுவையாக எழுதுவது என்பது சமையல் மாதிரி இயல்பாக நன்றாக வரும். இன்னும் சிலர் cookbook – சமையல் குறிப்பு புஸ்தகங்கள் மாதிரி கைவசம் இருந்தால், அதைப்படித்து சிறப்பாக செய்வர். நான் இரண்டாம் வகை. உணர்ச்சிகள் என்றால் என்ன புத்தகத்தில் படித்துப்பார்த்து விட்டு, manual க்கு ஏற்ற மாதிரி நகைச்சுவை எழுதுகிறேன். எப்படியோ ஒரு வழியாக சட்டியில் பண்டம் நிரம்பி அகப் பைக்கு, அதுதான் உங்கள் மனப் பைக்கு, சுவையாக வந்தால் சரிதான்.

யார் வேண்டுமானாலும் நகைச்சுவையாக எழுதலாம், அட்லீஸ்ட் எழுத முயலவாவது செய்யலாம் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணமே. மற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை நான் அவ்வளவாகப் படித்ததில்லை. ஆனால், அது எந்த விதத்திலும் என்னை ஊனனாக்க வில்லை. புனைபெயரில் எழுதுவது நிச்சயம் உதவியது. மேடைக்கூச்சம் போல, எழுத்துக்கூச்சத்தைத் தவிர்க்க நிறைய கைகொடுத்தது.

நிறைய புத்தகங்கள் படிப்பவனோ, வாழ்க்கை நுணுக்கங்களைக் கூர்ந்து கவனிப்பவனோ நானல்ல. அங்கங்கே, அவ்வப்போது உதிரியாக சேகரித்துக் கொண்டவைதாம் எல்லாம். திரு கண்ணன் அவர்கள் ஒருமுறை சொல்லி இருந்தார், இந்த ரங்கபாஷ்யக் குழு ஏதோ நிழல்வெளிப் பரிசோதனை செய்வதுபோல உணர்கிறேன் என்று. ஒரு விதத்தில் அது உண்மைதான். Pushing the limits – ஒரு சாமானியன் எந்த அளவிற்கு, எல்லாம் தெரிந்த ஒரு மாயாஜாலக் கில்லாடி மாதிரி பாவலா செய்யமுடியும், அதுவும் எத்தனை நாளைக்கு நீடிக்க முடியும் என்று பார்ப்பதே ஒரு பரிசோதனையோ என்னவோ.

எல்லாமே ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும். திடீரென்று ஒருநாள் அகஸ்த்துமாத்தாக கமிஷனர் கொடுக்கும் சமிக்ஞையினால், பூபதி என்னை பிடித்துப்போட்டு, எக்குத்தப்பாக கழுவேற்றலாம். அல்லது, நான் செய்யும் சஸ்பென்ஸ் எனக்கே தாங்காமல், வயிறு உப்பி வெடிக்கும்முன்னர் நானே வெளிச்சத்தில் குதிக்க நேரிடலாம். எல்லாமே ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும். திடீரென்று யாருக்கும் சொல்லிக்காமல் கொள்ளாமல், முன் அபாய அறிவுப்பு எதுவும் இல்லாமல், யார் என்ன என்ற எந்த மர்மமும் விடுபடாமலேயே, ரங்கபாஷ்யக் குழு எழுதுவதை நிறுத்திவிட்டால், ரங்கபாஷ்யக் குழு செத்துக்கூடப் போயிருக்கலாம்.

சாவைப் பற்றி சொன்னதும் என்ன, நெஞ்சம் கனக்கிறதா? கவலைப் படாதீர்கள். ரங்கபாஷ்யம் ஒருவிதத்தில் சாகாவரம் பெற்றவன். அம்ப்ரோஸ் செபஸ்தியானிடம் எனது ஹாட்மெயிலின் (சுடுவஞ்சல்) பாஸ்வர்டு கொடுத்துவிட்டுத் தான் சாவேன். நான் செத்தது யாருக்குமே வெளியே தெரியாமல், அம்ப்ரோஸ் அவர்கள், முனீஸ்வரன் – சனீஸ்வரன் சகோதரர்களின் ஆசியுடன், ஸ்மூத்தாக ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாதவகையில் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்வார்.

நான் ஆடாவிட்டாலும், என் பேய் வந்து ஆடும்.

பேயாழ்வாரின் திருவருள் எல்லோர்க்கும் நிச்சயம் உண்டு.

அடியேன்,
விசேஷ நிருபன்
தொண்டரடிப் பொடியன் ரங்கண்ணா ராமன்


14. பேரன்புள்ள இணைய நண்பர்களே,

முதற்கண் எனது வணக்கம்.

நான் இன்று வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. ‘ரங்கபாஷ்யக் குழுவினர்’ இணையத்தில் எழுத ஆரம்பித்து இத்துடன் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. என் வாழ்க்கையின் மற்ற அனுபவங்களைப் போல என் இணையப் பங்கேற்பும் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. நான் ஒருமுறை சொல்லியிருந்தேன், வாழ்க்கையில் எதுவுமே ஒருநேரம் முடிவுக்கு வரத்தான் செய்யும் என்று. நான் தமிழிணையத்தில் எழுதும் படலமும் அந்த நேரத்தை நெருங்கிவிட்டது. ஏனெனில், வேறு அனுபவங்களை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் அநாமதேயமாக எழுதிவந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயமோ சங்கோஜமோ நிச்சயம் காரணம் இல்லை. நான் தப்பான அபிப்பிராயங்கள் சொல்ல நேர்ந்து, அதற்கு சொந்தக்காரன் என்று முத்திரை குத்திவிடுவார்களே என்ற கூச்சம் ஒன்றும் கிடையாது. Vocabulary, sentence-structuring, white space and paragraph formatting, style எல்லாம் மாதிரியே anonymity was also part of the design.

நான் யார், எனது ஊர், பேர், தொழில், முகம் என்று எதுவுமே தெரியாத வகையில் எனது கதாபாத்திரங்களுக்கு ஒரு உயிரோட்டம் இருக்கின்றது. ‘வெட்டியாப் போனவனை’ அவனது எழுத்துக்கள் மூலம் மாத்திரமே அறிந்திருப்பவர்களுக்கு அவனுக்கு கண், காது, மூக்கு எல்லாம் அமைத்து குரல் ஏற்ற, இறக்கங்கள் கூட கொடுத்து உயிர்கொடுக்க முடிகின்றது. வெட்டியாப் போனவன், பேசும்போது எப்படி முந்திரிக்கொட்டை மாதிரி நறுக்,நறுக்கென்று, என்ன மாதிரி குரலில் பேசுவான் என்று எல்லோரும் உருவகப்படுத்தி வைத்திருக்கின்றீர்கள். இது எனது வேலையைச் சுலபமாக்குகின்றது.

நான் யார் என்ற விவரங்கள் தெரிந்தபின்னர் கூட, நமது இணைய அன்பர்கள் சிலர் பொறுமையுடன் ரகசியம் காத்தனர். I thank them, for being a good sport. நான் யார், முகவரி என்ன என்பது போன்ற விசயங்களை அறிவிக்காமலேதான், இணையத்தில் எழுதத்துவங்கினேன். அதேமாதிரி பிரிந்தால்தான் நலமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், அது முறையாகுமா என்பது என்றும் கேள்விக்குரியதே. விலகும்போதாவது நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு விலகுவதுதான் முறை என்று சில பேர் கருத்துக் கொண்டிருப்பர். அதுகுறித்து நேரம் வரும்போது மறுபரிசீலனை செய்வேன்.

எல்லா மனிதர்களிடமும் குறைகள் உள்ளன. இதனை மனத்தில் இருத்திக் கொண்டு, வீட்டிலும் அலுவலகத்திலும், நண்பர்கள் மத்தியிலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமை ஓங்கியே இருக்கும். அன்பர்கள் உங்களது எல்லோருடைய வாழ்க்கையும் வளமான எதிர்காலம் கொண்டதாக அமைய எனது வாழ்த்துக்கள்.

கடந்த ஒன்பது மாதங்களாக உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து கலகலப்பு ஊட்டி, உங்களது வாழ்க்கையின் அங்கமாக ஒன்றிப்போய்விட்ட

  1. சராசரிக் குப்பன்
  2. வெட்டியாப் போனவன்
  3. ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்
  4. சர்க்கஸ் வளையாபதி
  5. துப்பாக்கி நாயக்கர்
  6. பார்த்தசாரதி
  7. கிருஷ்ணவேணி
  8. சாந்தி தங்கராஜன்
  9. S. அண்ணாமலை
  10. பாதாம்ஸ்ரீ பத்மா
  11. துட்டுமி சான்
  12. தகர டப்பா
  13. மணி சுவாமிநாதன்

ஆகிய முகமூடி அணிந்த நிழல்வெளி மனிதர்களை நீங்கள் மாத்திரம் அல்ல, இந்த சாதாரணனும் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்.

இந்த நிழல்வெளி மனிதர்களை மிகுந்த சிரமத்துடனும், கனத்த நெஞ்சுடனும் ஈரக் கண்களுடனும் தான் உங்களிடம் இருந்து பிரிக்க வேண்டியிருக்கிறது.

அதற்காக உங்கள் மன்னிப்பைக் கோரும், இன்னோரு நிழல்வெளி நண்பன்,

உங்கள் விசேஷ நிருபன்

ரங்கண்ணா ராமன்