Snapjudge

Posts Tagged ‘கறுப்பு’

ஜெமோபாரதம் – 9

In Mahabharat on ஜனவரி 9, 2014 at 2:49 முப

முந்தைய பகுதி

இன்று விமர்சன காண்டம்.

இந்தியர்களுக்கு விதியின் மீது பழி போடுதல் மிகவும் பிடித்தமான காரியம்.

விபத்து நடந்ததா… வினைப் பயன்.
புற்றுநோய் வந்ததா… போன ஜென்மத்து பாவம்.
குழந்தை பிறக்கவில்லையா… முற்பிறவி மீது பாரத்தைப் போடலாம்.

காரணமில்லாததற்கு காரணம் கற்பிக்க… தலைவிதி உதவுகிறது. மேலும் மேலும் ஆராய்ந்து மண்டை காயாமல், பிரச்சினைக்கு மூடுவிழா போட பூர்வஜென்மத்து தோஷம் பழியேற்கிறது.

நல்ல படிப்பறிவும், படித்ததை கிரகிக்கும் திறனும் கொண்ட பீஷ்மர் செய்த குளறுபடிகளின் தொகுப்பே மகாபாரதம். அடிமைகளாக மூன்று பெண்களைப் பிடித்து வந்தார். அவர் கற்ற நீதிநெறிகளை பின்பற்றாமல், குற்றம் புரிய சொன்னவர்களிடம் இடித்துரைக்காமல், அறமற்ற சேவகனாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டார்.

கருப்பர்களை நீக்ரோக்கள் என விளித்து அடக்கியாண்டதை எண்ணி அமெரிக்கா நாள்தோறும் விசனப்பட்டு, மாற்றுப் பாதையில் நடப்பதை பார்க்கிறோம். காரோட்டும் உரிமை கூட இல்லாத இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் குரல் எழுப்புகிறோம். இன்னமும் இந்த மகாபாரத அட்டுழியங்களை நாட்டுப் பிரஜைகளோ, அரசியின் சிப்பந்திகளோ உரையாடாத, அரசல் புரசலாகவாவது அங்கலாய்க்காத காலத்தில் இருக்க வேண்டாம்.

பீஷ்மர் ஒரு நாள் கூட ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்காமல் இல்லை. பிரம்மச்சாரி என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டார். சத்தியவதியை நினைத்து கைமைதுனம் செய்திருப்பார் என்பதில் கற்பனையை விட நிஜத்தின் விகிதாச்சாரம் நிறையவே இருக்கும்.

இராமரை அவருடைய குடிமக்கள் விமர்சித்தது போல் வால்மீகியும் கம்பரும் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அங்கே சீதை பெண். ஆனால், பீஷ்மர் கொத்தடிமைகளை அபகரித்து, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்ந்ததை, பீஷ்ம அரசின் கீழ் வாழ்ந்த எந்த குடிமகனும் வம்பு பேசியதாக மகாபாரத எழுத்தாளர்கள் சொல்வதில்லை. எழுதுவது எல்லாமே ஆண்கள்.

அம்பையும் இன்ன பிற மருமகள்களின் வாழ்வு நாசமாகியதற்கு முழுமுதற் காரணம் மாமியார்களே என சன் டிவியும் சோப்ராக்களும் வியாசரும் ஓதுவார்கள்.

பீஷ்மர் மற்றவர்களிடம் இருந்து நல்ல பேரைப் பெற வேண்டும் என்பதற்காக நாய் போல் நன்றியுடன் இயங்கி இருக்கிறார். ”அப்பாவால் மெச்சப் பட வேண்டும்; இவனைப் போல் பிள்ளை கிடைப்பானா” என ஊரார் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பீஷ்ம சபதம். அந்த சபதத்திற்குப் பின் அதிகாரபூர்வமாக மணம் புரியவில்லை. இக்காலமாக இருந்தால் தற்பால் விரும்பி என அம்பை சரியாக ஊகித்திருப்பாள்.

அப்பா போன பின் சித்தியிடமிருந்து பெரிய பாராட்டும் நற்சான்றிதழும் கிடைப்பதற்காக சத்யவதி ஏவிய காரியங்களை நிறைவேற்றுதல். அதன் பிறகு திருதராஷ்டிரனுக்கு… அதன் பிறகு துரியோதனனுக்கு. அரசு ஊழியராக ஓய்வு பெறும் திருப்தி அவருக்கு வேண்டியிருந்திருக்கிறது. முகஸ்துதிக்கும் அங்கீகாரத்திற்கும் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்திருக்கிறார்.

வெறும் கறுப்பு – வெள்ளையாக அமையாமல், நேர்க்கோடில் பலாபலன்களைச் சொல்லிச் செல்லாததால், மேற்கூறிய எண்ணங்களை உருவாக்க வைத்ததால், இன்றைய பகுதி முக்கியமான பகுதி.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 9 :: பகுதி இரண்டு : பொற்கதவம்