Snapjudge

13 Facebookers about Suzhal – Amazon Prime TV Series: சுழல்

In Lists, Movies, TV on ஜூலை 2, 2022 at 7:53 பிப

0. Suresh Kannan

‘சுழல்’ வெப்சீரிஸின் முதல் எபிஸோட் மட்டும் பார்த்தேன். சில வெளிநாட்டுத் தொடர்களின் தரத்தைப் பார்க்கும் போது ‘நம்மூரில் இது போல் வருவதற்கு பல வருடங்களாகும்’ என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் ஏற்படும்.

இதுவரை தமிழில் வந்த பல அரைகுறையான இணையத் தொடர்களும் – நான் பார்த்த வரைக்கும் – அதை மெய்ப்பித்தன. என் எதிர்பார்ப்பை ஓரளவு எட்டிய தொடர் என்று கௌதம் மேனன் இயக்கிய ‘க்வீனை’ சொல்வேன்.

இந்த எதிர்பார்ப்பில் மேலும் சில படிகளை தாண்டிச் சென்றிருக்கிறது ‘சுழல்’. நமக்கு கொலம்பியா போதைப் பொருள் மாஃபியா போன்ற அயல் நாட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் தேவையில்லை. நம்முடைய தொன்ம கலாசாரங்களில் இருந்து காட்டவே ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அந்த வகையில், இந்தத் தொடரில் ‘மசானக் கொள்ளை’யின் பின்னணியை இத்தனை விஸ்தாரமாகவும் நுணுக்கமாகவும், பிரம்மாணடமாகவும் உருவாக்கிக் காட்டிய அந்த மெனக்கெடலுக்காகவே ஒரு பெரிய சபாஷ். ஏறத்தாழ ஒரு திரைப்படத்திற்கு நிகரான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

இது தவிர தொழிற்சாலை போராட்டம், யூனியன் லீடரின் குடும்ப உறவுகள், சிக்கல்கள், இன்ஸ்பெக்டரின் குடும்பம் என்று முதல் எபிசோடியிலேயே தொடர் களை கட்டி விட்டது.

ஆனால் – மணிரத்னம் திரைப்படங்களைக் கவனித்தால் சில காட்சிக்கோர்வைகளை, உணர்வுகளை அத்தனை ஆழமாக, பிரமிப்பேற்றும் வகையில் உருவாக்கி விடுவார். இதற்கு முரணாக சில காட்சிகள் பிளாஸ்டிக் தன்மையுடன் ஒட்டாத வகையில் செயற்கையாக இருக்கும்.

இதிலும் அந்த வாசனையை சிலபல இடங்களில் உணர்ந்தேன். அந்த வகையில் இந்தத் தொடர் இன்னமும் கூட உயரத்தை எட்டியிருக்கலாம் என்று தோன்றியது. (முதல் எபிசோடை வைத்தே இதை சொல்லக்கூடாது என்றாலும்).

oOo

ஸ்ரேயா ரெட்டியை எனக்கு அவர் SS Music-ல் விஜேவாக இருந்த காலத்தில் இருந்தே அத்தனை பிடிக்கும். அவரின் தோற்றத்தில் ஏதோவொரு தனித்த வசீகரம் இருக்கிறது. இந்தத் தொடரில், போலீஸ் யூனிபார்மிலும் சரி, புடவையிலும் சரி, பார்ப்பதற்கே அத்தனை ரகளையாக இருக்கிறார். நெருங்கிச் சென்று ப்ரபோஸ் செய்து விடலாம் போல தோன்றுகிறது.

‘அழகி’ படத்தில் வரும் சண்முகம் என்கிற பாத்திரப் பெயரை வைத்து விட்டதாலோ என்னமோ, அந்தப் படத்தில் வருவது போலவே அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி துடைத்துக் கொள்கிறார், பார்த்திபன். ஆனால் கவனிக்கத்தக்க நடிப்பு. மற்றபடி கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆசிரம மனைவி, பாக்டரி முதலாளி என்று ஒவ்வொரு பாத்திரமுமே தனித்துத் தெரிகிறார்கள். ஒவ்வொரு கேரக்ட்டரை அதன் தனித்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.

புஷ்கர் காயத்ரி என்கிற பெயரே இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அது வீண் போகவில்லை. முதல் எபிசோடை பிரம்மா சிறப்பாக இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசையும் சிறப்பு. ஒளிப்பதிவின் நோ்த்தி ரகளையாக இருக்கிறது.

oOo

ஏற்கெனவே சொன்னதுதான். தமிழ் வெப்சீரிஸ்களில் இதுவரை வந்தவற்றின் தரத்தில் ஒரு புதிய மைல்கல்லை இந்தத் தொடர் ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். முழுதும் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

Do not Miss it.


1. பொம்மையா முருகன்

நாலு இல்ல அஞ்சி எபிசோடுகளோட கிரிஸ்பா முடிக்க வேண்டியத எட்டு வரைக்கும் இழுவையா இழுத்திருக்காங்க.

பொதுவாக இந்த மாதியான சஸ்பென்ஸ் கதைகளில் முதலில் குற்றம் நடக்கும் கிளைமேக்சில் சஸ்பென்ஸ் உடையும் இடைப்பட்ட காட்சிகளின் டிவிஸ்ட் நம்மை அட போடவைக்கும் ஆனால் இதில் இடைப்பட்ட காட்சிகள் அப்படி அட போட வைக்கவில்லை ஓ… அப்படியா எனத்தான் சொல்லவைக்கிறது

அதனாலோ என்னவோ கிளைமேக்ஸ்சில் இவர்தான் குற்றவாளி என சஸ்பென்ஸ் உடையும் போதும் ஓ.. அப்படியா எனத்தான் கேக்க வைக்கிறது…

நேரடி குற்றவாளி அவர்தான் எனினும் மறைமுக குற்றவாளிகள் பார்த்திபனும் அவர் மனைவியும் இதை அடுத்த சீசனில் எடுத்துச் சொல்லவார்கள் என நினைக்கிறேன்.

பெண் குழந்தைகள் வளரும் வீட்டில் கனவன் மனைவிக்குள் ஈகோ இருக்கக் கூடாது ஈகோ வால் இருவரும் பிரிந்ததால் தான் அந்த குழந்தைகளுக்கு விபரீதம் ஏற்படுகிறது என்பதுதான் இந்த சீசனின் சொல்லப்படாத மையக்கரு.

மற்றபடி இந்த சீசனில் கவர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி பாசமான அம்மா, பொறுப்பான காவல் அதிகாரி என ரெண்டுலயுமே ஸ்கோர் செய்கிறார். பார்த்திபனுக்கு கிட்டத்தட்ட இதில் கவுரவ தோற்றம் தான்.

மொத்தத்தில் O2 படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.


2. Ponnambalam Kalidoss Ashok

‘பெற்றோர் பிரிந்து வாழ்ந்தால் குழந்தைகளின் நிலைமை.குறிப்பாக , குழந்தைகள் பெண்களாக இருந்தால்? ‘

என்ற கருவை வைத்து ஒரு கிரைம் திரில்லர்..’சுழல்’

திரைக்கதையோடு மயானக் கொள்ளை என்ற ஒன்பது நாட்கள் நிகழ்வுகளையும் பொருத்தி படம் இயங்குகிறது. அதற்கான பொருத்தமான தலைப்புகள் ! Creation had it’s flavours! Great!

எட்டு எபிசோடுகள். இறுதி வரை படு சஸ்பென்ஸ். ஒவ்வருவரையும் சந்தேகித்து அவர்களை விடுவிக்க அடுத்த சுழல். இறுதியில் முடிச்சு அவிழும் பொழுது நாம் உறைகிறோம்.

இரு இயக்குநர்கள் எபிசோடு இயக்குநர்கள்.

கதிர் படம் முழுக்க படு வேகமாக.. அம்மாவின் மீது பாசமாக..வருங்கால மனைவியிடம் காவலர்களின் சூழலை புரிய வைத்தல்..கோபம் குமுறல் என படம் முழுக்க ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

அவர் அதிகாரியாக ஸ்ரேயா ரெட்டியும் தொழிலாளத் தலைவராக பார்த்திபனும் ஆஹா. ஹரிஷ் உத்தமன் ..அவரின் தந்தை..சந்தான பாரதி..குழந்தைகள்.. குமாரவேல்..காவல் நிலைய அலுவலர்கள் என ஒவ்வருவரும் படத்தை அற்புதமாக நகர்த்துகின்றனர். ஈஸ்வரனாக வருபவர் மிரள வைக்கிறார்.

திருநங்கையர் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது. அதே போல் குழந்தைகளின் அவல நிலை.. அதனை மறைக்காது சொல்ல வேண்டும் என்ற பல உணர்வுகளை படம் சொல்வது தேவையான ஒன்று.

குமாரவேலும் ஐஸ்வர்யா ராஜேஷும் பிரமாதம். இசை சரியாக .

ஒளிப்பதிவு குறிப்பாக ஒன்பது நாள் மயானக் கொள்ளையை படத்துடன் நகர்த்த அபாரமாக உதவுகிறது. புரிசைக் குழுவினர் என்று நினைக்கிறேன். ஆஹா!

கதையையும் குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத்தையும் சேர்த்து விறு விறுப்புக் குறையாமல் அதே சமயம் எடுத்துக் கொண்ட கதையை தெளிவாகச் சொல்லிய குழுவிற்கு பேரன்பு!


3. Sivakumar Venkatachalam

சுழல் (ஸ்பாய்லர் இல்லை)

கொஞ்சம் ஏனோதானோ என்று போகும் கதை ஏழாவது எபிஸோடில் எழுந்து உட்கார வைத்து விடுகிறது.

அதுவரையிலும் சற்று அசுவராஸியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பது என்னவோ உண்மை. ஆனால் கடைசி இரண்டு எபிஸோடுகளில் இயக்குநரின் திறமை பளிச்சென்று வெளிப்படுகிறது. குழம்பிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு போகிற போக்கிலேயே விடைகள் கிடைத்து விடுகின்றன. அந்த நேரத்தில் டைரக்டரைக் கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என்கிற எண்ணத்தை வரவழைத்து விட்டார்கள்.

இதை மூன்று மணி நேரமாக ட்ரிம் செய்து தியேட்டரில் படமாக விட்டிருந்தாலும் சிறப்பாக ஓடியிருக்கும். மொத்தமாக ஒரு புதிய டீம், வித்தியாசமான காம்போ, ஃப்ரஷ்ஷான முகங்கள், யூகிக்கமுடியாத திருப்பங்கள் என்று பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

அந்த மயானக்கொள்ளையை மிகவும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். அதற்காக ஒருநாள் செட் போட்டு முடித்துவிட்டு கழற்றி வைத்ததுமாதிரியும் தெரியவில்லை. முன்னும் பின்னுமான காட்சிகளில் அந்த மயானக்கொள்ளையில் கதாபாத்திரங்களை நடக்கவிட்டு கதையோடு கலந்திருக்கிறார்கள். அதற்கான இயக்குநரின் திட்டமிடுதல் மிகவும் பாராட்டத்தக்கது.

ஸ்ரேயா ரெட்டி. திமிரு படத்தையடுத்து இப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். என்னவொரு ஆளுமையான நடிப்பு! அதுவும் ஆம்பிளைகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு. இப்படிப்பட்ட கம்பீரம் கொண்ட பெண்கள் தனி அழகு.

பார்த்திபன் ஆரம்பத்தில் ரொம்பவே சுமாராக ஏதோ ஆர்வமில்லாதவர் போல நடிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக லைன் பிடித்துவிட்டார்.

கதிர், ஹரீஷ் உத்தமன், அவரது அப்பாவாக வரும் சேட்டு, அந்த இளம் ஜோடி என்று எல்லோருமே இயல்பான நடிப்பு. கேரக்டர்களை பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து கதையோடு மிக அழகாக ஐக்கியமாக்கி இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் உச்சம் தொடுகிறார். கேரக்டரை உள்வாங்கிக் கொள்வதில் ரொம்பவே கில்லாடி.

சாம் சிஎஸ்ஸின் இசை சினிமாவுக்கு சமமாக இருக்கிறது. சின்ஸியராக வேலை செய்திருக்கிறார். கேமரா வொர்க், குறிப்பாக ட்ரோன் ஷாட்டுகள் பிரமாதம். எட்டு எபிஸோடுகள் கொண்ட கம்ப்ளீட் பேக்கேஜ். சோபாவில் குண்டுக்கட்டாக அமர்ந்தவாறு குட்டித் தலையணையை மடியில் போட்டபடி நகங்கடித்துக்கொண்டே பார்ப்பதற்கு ஒரு

அருமையான கண்டன்ட்


4. Braveenan Sritharan

சுழல்

முதல் 4 episodes இலயே series முடிச்சிருக்கலாமே 😔

சிறுபராயக்காதல் தான். ஆனால் அதன் ஆழத்தை ஒரு வசனத்தில் அழகாக சொல்லியிருப்பார்கள் “Postmortem பண்ணும் போது இரண்டு பேரையும் பிரிக்கவே கஷ்டமாப்போச்சு. நகமும் சதையுமா ஒட்டியே இருந்தாங்க.”

அடுத்த 4 episodes சமூகத்துக்கு இப்போது தேவையான கருத்தை நோக்கிய பகுதிகள். அதை இறுதி episode வரை கொண்டு வந்து தெளிவுபடுத்தியது தான் மொத்த webseries இன் வெற்றி.


5. Syeda Fareeha

தமிழ்ல வந்து இருக்கிற வெப் சீரிஸ்..

முழுமையான சமூக, குடும்ப, தனிமனித உளவியல் சார்ந்த கதை.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிண்ணனியா ஒரு உளவியல் காரணம், குடும்ப அமைப்பு சிதைவுகள், நம்பிக்கைக்கும் நிஜங்களுக்குமான இடைவெளி.. இப்டி பல அடுக்குகள்…

கதையோட கரு பெண் பிள்ளைகளுக்கு வீட்லயே நடக்குற sexual abuse‌ தான்..

So பேரன்ட்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க..

Last வரைக்கும் கொலையாளி யாருனு மண்டைய பிச்சுக்க வைக்குற செம திரில்லர் web series..


6. Sundar

#சுழல் must watch tamik web series #Suzhal

Must watch one, ஏன்?

சிவப்பு கொடி, கறுப்பு சட்டையை காட்டியதற்காக இல்லை,

Communism கடவுள் மறுப்பு கொள்கையை காட்டியதற்காக இல்லை

பெரியாரையும், Marxயும் காட்டியதற்காகவும் இல்லை.. 🙂

பின் எதற்கு என்றால், Gender equality இருக்கும், women charactersஅ மிக அருமையா காட்சி படுத்தியிருப்பாங்க..

ஆண்கள் எழுதி direct செ‌ய்‌கிற typical cinemaக்களுக்கு நடுவுல

பெண்கள் பார்வையில் பெண்களை காட்சிபடுத்தினால் எப்படி இருக்கும்னு இதுல சத்தமாசொன்ன மாதிரியான ஒரு கதை.. இன்னும் இது போன்று பல.. ❣️😌

“சுழல்” பற்றி உரையாட நிறைய இருக்கு,.. Must watch one


7. அருண் அலெக்ஸாண்டர்

The Vortex

நாளைக்கு சண்டே லீவு சரி ஒரு வெப்சீரிஸ் பார்க்கலாம்னு டவுன்லோட் பண்ணிட்டு ஒரு மூனு எபிசோட் வரைக்கும் பார்த்துட்டு மீதி நாளைக்கு பார்க்கலாம் தான் உட்கார்ந்தேன், ஆனா மூணாவது எபிசோடு இறுதியில் ஆரம்பிச்சு ஒரு பரபரப்பான திரில்லர் மூவி மேக்கிங்,ஸ்கிரீன்பிளே படத்தோட இறுதி வரைக்கும் விறுவிறுப்பாக கொண்டு போச்சு, கிரைம் நாவல் ரசிகர்களுக்கு நல்ல தீனி இந்த வெப்சீரிஸ். ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும் நம்ம யூகிக்க முடியாத ட்விஸ்ட் வச்சு பிரில்லியண்ட் மேக்கிங்….. 🙌🙌🙌

ஸ்ரேயா ரெட்டி ,சந்தானபாரதி மற்றும் கதிர் சிறப்பான நடிப்பு….

நல்ல தரமான வெப்சீரிஸ்… ஒரு சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும், ஆனாலும் அனைவரும் குடும்பத்துடன் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம்…

மொத்தம் 8 எபிசோட் ஒரு தோராயமாக ஆறு மணி நேரம் தாண்டி வரும்.


8. சசி தரணி

கதிரையும்,திரிலோக்கையும் புடுச்சுது..

கடசி 3 எபிசோட் நல்லாருக்கு..

ரிப்பீட்டு ஆயிட்டே இருக்கற திருவிழா காட்சி ஒரு மாதிரி அயர்ச்சியா இருக்கு..

நைட் ஒரு மணி வரைக்கும் பாத்து முடிச்சேன்.என்னதா நடந்துச்சுனு பாக்க வெக்கற மாதிரிதா இருக்கு..


9. Valli Subbiah

சுழல்..

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் (ஒரே நாளில் பார்ப்பது கடினம்) அமேசான் பிரைம் வீடியோ வில் பார்த்தது “சுழல்” வெப் சீரீஸ்…6.மணி நேரம் ஓடும் இந்த வெப் சீரீஸ் ஒரு க்ரைம் த்ரில்லர். அடுத்தடுத்து பார்க்கத் தூண்டும் கதையமைப்பு ..

இந்தக் கதையை எழுதியது புஷ்கர்- காயத்ரி ..இயக்கம் பிரம்மா G. அனுசரன் முருகையன்… கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரேயா ரெட்டி என நட்சத்திரப் பட்டாளத்துக்கு குறைவில்லை.

‘சர்க்கரை’ என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தியாக சப் இன்ஸ்பெக்டர் ரோலில் கதிர் படம் முழுக்க ஆதிக்கத்தை செலுத்துகிறார். உணர்ச்சிகள் நன்றாக முகத்தில் பிரதிபலிக்கிறது.அவருக்கு மேலதிகாரியாக வரும் பெண் கதாபாத்திரம் அருமை.முதல் பாதியிலும், பிற்பாதியிலும் இரு வேறுபட்ட உணர்வுகளை

அருமையாக காட்டியுள்ளார்.

பார்த்திபன் தன் அனுபவ நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ,அவர் தங்கையாக வரும் பெண் ..இன்ஸ்பெக்டர் மகன் ..ஆலையின் ஓனர், அவர் மகன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, இயல்பான நடிப்பால் கவர்கின்றனர் .

கதைக்குள் அதிகமாக போக விரும்பவில்லை, ஏனெனில் பார்க்காதவர்கள்… பார்க்க நினைப்பவர்கள்… நிறைய பேர் இருப்பார்கள் ..நடக்கும் ஒரு குற்றம். ..சந்தேக புள்ளி, ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் மாறிக்கொண்டே இருக்கிறது ..அந்த சஸ்பென்ஸ் இறுதி எபிசோடில் அவிழ்கிறது ..சுழல் என்ற தலைப்பு இதனாலேயே மிகப் பொருத்தம்.

ஊட்டியின் அழகான இயற்கை காட்சிகள் ஒவ்வொரு பிரேமிலும் மனதை கொள்ளை அடிக்கிறது. சினிமேட்டோகிராபி முகேஷ்வரன் நூறு சதவீத பாராட்டுக்கு தகுதியானவர்.

மெயின் கதையின் இணை கதையாக, அவ்வூர் பெண் தெய்வம் அங்காளம்மன்… 10 நாள் திருவிழாவான “மயான கொள்ளை” ஊரில் கொண்டாடப்படுகிறது .. ஒவ்வொரு நாள் ஒரு சிறப்பு. திருவிழா காட்சிகள் சுவாரசியமாக கதையுடன் சேர்த்து பின்னப் பட்டிருக்கிறது. அங்காளம்மன் திருவிழா காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக படமாக்கப்பட்டிருக்கிறது.. இறுதியில் பத்தாம் நாள் திருவிழாவில் கதையின் முடிச்சு அவிழ்கிறது.

மிக விறுவிறுப்பாக காட்சிகள் நகர்வதால் பார்க்க சலிப்பு தட்டவில்லை…இனிமையான இயற்கை சூழல்.. விறுவிறுப்பான கதை நகர்வு..இயல்பான நடிப்பு..

என நம்மை சுழல் இழுத்துச் செல்கிறது.

விறுவிறுப்பாக கதை சென்றாலும், அடுத்தடுத்த திருப்பங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகள் என்று இருந்தாலும், மிக அதிகப்படியான திருப்பங்கள் கொண்டதோ என்ற ஒரு சிறு எண்ணம் என் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை …அதனாலேயே சுழல் என்று பெயர் பெயர் பொருந்தும்…மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின்னணி கதை அவசியமா என்று தோன்றுகிறது.

போகிற போக்கில் சமூகத்திற்கு ஒரு

அருமையான , அவசியமான, மெசேஜையும் சொல்லிச் செல்கிறது இத்தொடர். சிறுவயது நிகழ்வுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கும் ..குழந்தைகள் அதனைப் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாத போது அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறும் என்பது மிக ஆழமாக, அழுத்தமாக ,சொல்லப்பட்டிருக்கும் கருத்து .அதற்கு கதாசிரியருக்கு மிகப்பெரிய பாராட்டைக் கூறலாம்.

மொத்தத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய

அருமையான தொடர். …நம்மை எழ விடாமல் பார்க்க வைப்பதே இத்தொடரின் வெற்றி என்று கூறலாம்.

தி.வள்ளி.


10.தமிழன் விஷ்ணு

சாம்பலூர் எனும் மலை கிராமத்தில் இயங்கும் சிமெண்ட் தொழில்சாலை க்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்க, போலீஸ்களை வைத்து தொழில்சாலையின் முதலாளி போராட்டத்தை களைக்க….அன்று இரவே சிமெண்ட் தொழில்சாலை தீ பிடித்து எரிய,அதே இரவில் தொழில்சாலையின் யூனியன் லீடர் மகள் காணாமல் போக கிராமத்தில் அங்காளம்மன் திருவிழாவும் நடக்க…சிமெண்ட் தொழில்சாலைக்கு தீ வைத்தது யார்? காணாமல் போன மகள் என்ன ஆனால் என்ன என்பதை 8 பார்ட் ஆக சுழன்று அடிக்குது இந்த சுழல்……

கதிர் மிகவும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.அவர்போலவே ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ்,ரா.பார்த்திபன் அழுத்தமான வேடம் அம்சமாக நடித்துள்ளார்கள்…..மகள்கள் மற்றும் மனைவியை தான் சரியாக புரிந்துகொள்ள வில்லை என்று அவர் உடையும் இடத்தில் நல்ல நடிப்பு பார்த்திபன்…

சாம் C. S பின்னணி இசையும், திரைக்கதையும் சீரிஸின் தரத்தை முன் நகர்த்துகிறது. மேலும் ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். மயானக்கொல்லை எனப்படும் நிகழ்வை இவ்வளவு நேர்த்தியாக யாரும் எந்த படத்திலும் பதிவு செய்யவில்லை….

ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வோர் முடிச்சு என பயணித்து முடிவில் ஆஹா என பெருமூச்சு விட வைத்து அனுப்பும் இந்த சுழல்….மொத்தம் 8 பார்ட் 4,5 ம்ம்ம்ம் கொஞ்சம் ஸ்லோ ரொம்ப இழுவை மாதிரியும் 6,7,8 அப்டியே ஸ்பீட்ல போகும்.

இந்த சீரிஸில் ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கிறது.அதற்காக இந்த சீரிஸை அனைவரும் பார்க்கலாம்..

தமிழில் விலங்கு சீரிஸ் க்கு அப்றம் இந்த சுழல் ஹிட் ஏ…..


11. Vidhya M

சுழல் படத்தின் மையக்கருவை இன்னும் வெளிப்படையாக பேசவேண்டிய காலச்சூழலில் இருக்கிறோம்.

ஆனால் இன்ன காரணத்துக்காகத்தான் இந்த கொலைகள் நடந்தது என்றில்லாமல், திரில்லர் சீரிஸில் ஏழு எபிசோட்கள் எடுத்துவிட்டோம் எட்டாவது எபிசோடில் ஏதாவது காரணத்தை சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல் மட்டுமே படத்தின் கரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் கலை / போட்டோக்ராஃபி ரசனை, 43” அல்லது அதுக்கும் கூடுதல் திரை உள்ள டிவி அப்றம் நிறைய நேரமும் அதைவிட கூடுதல் பொறுமையும் இருந்தால் மயானக் கொள்ளை காட்சிகளுடன் சேர்த்து படம் பிடிக்கலாம்.

ஒரு

அருமையான திரில்லர் படத்தை ஏன் மயானக்கொள்ளை டாக்குமெண்ட்ரியுடன் மிக்ஸ் பண்ணி சீரிஸ் ஆக்கிவிட்டார்கள் என்பது மட்டும்தான் புரியவில்லை. 😌

மத்தபடி படம் பார்க்கலாம் 🖤


12. Dhitalkies

பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ படைப்பாளிகள்

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் சுவராசியங்களை வெளியிடவேண்டாம் என்றும், இந்த தொடரின் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு பார்வையாளர்களும் பிரத்யேகமாக பார்த்து ரசிக்க அனுமதிக்க வேண்டும் என இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான புஷ்கர் & காயத்ரி அவர்களின் பட்டறையிலிருந்து தயாராகி, அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’. க்ரைம் த்ரில்லர் பாணியிலான புலனாய்வு தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, அனைவரது பட்டியலிலும் இது இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவராசியமான முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் இந்த தொடரில் இடம்பெற்ற திடுக்கிட வைக்கும் சுவராசியமான திருப்பங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஏனெனில் தொடரின் ஒவ்வொரு திருப்பங்களையும், அவர்களே ஆழமாக உற்றுப்பார்க்கும் போது அவர்களது எதிர்பார்ப்பும், ஊகங்களும் கூட தவறாக போகலாம்.

மேலும் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில், ” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எதிர்பாராத வகையில் திருப்பங்கள் இருக்கிறது. திருப்பத்திற்குரிய தடயங்கள் இருந்தாலும், அவை பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. ஆனால் இறுதி அத்தியாயத்திற்கல்ல. நீங்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் திருப்பங்களை ஊகித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டாம். நீங்கள் அனுபவித்த கலை இன்பத்தை மற்றவர்களும் உணர அனுமதிக்கவேண்டும். இந்த தொடர் தரும் ஆச்சரியத்துடன் கூடிய திருப்பங்களை, ஒவ்வொருவரும் பார்க்கும் போது, அவர்களே கண்டுபிடித்து ரசிக்கும் வகையில் மகிழ்ச்சியை பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.” என்றனர்.

  1. […] சுழல்: முடிவு சொதப்பலாய் உச்சகட்டத்தில் பல்லிளித்தாலும், ஒவ்வொரு அத்தியாயமும் எடுத்த விதத்தில் முக்கியமான தமிழ் படைப்பாக மிளிர்கிறது. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: