Snapjudge

Archive for ஜனவரி, 2014|Monthly archive page

ஜெமோபாரதம் – 7

In Mahabharat on ஜனவரி 7, 2014 at 3:23 முப

முந்தைய பகுதி

1. “சிப்பிக்குள் வாழ்ந்த பரீட்சித் தனக்கென அறையை உருவாக்கிக் கொண்டதும் சரி, கண் தெரியாத குட்டிநாயாக தன்னை ஜனமேஜயன் உணர்வதும் சரி அவ்வாறு வாசிக்கப்படவேண்டியவை.”

வியாசனை நோக்கி கடலில் வரும் மீன்களை சொற்களாக எடுத்துக்கொண்டால் அவருக்கு ஸித்தி காட்சிகொடுப்பது வரை ஒரு கவிதையைக் காணமுடியும்.
வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…

2. எழுத்தாளரே தன் எழுத்திற்கு விளக்கம் கொடுப்பது எனக்கு உதவுகிறது. அதனால்தான், எழுத்தாளரின் பேட்டியை வாசிக்கிறேன். நேர்காணல் எடுக்க விரும்புகிறேன். ஆக்கினவரின் வாயினாலேயே ஆக்கத்தின் அர்த்தத்தையும் நுண்ணிய தருணங்களையும் இது போன்ற பொறிப்புரைகளையும் ரசிக்கிறேன். ஆங்கிலத் திரைப்படம் பார்த்து முடித்த பிறகு, அந்தப் படத்தை இயக்கியவரின் வர்ணனையோடு படத்தை மீண்டும் பார்ப்பது போல், படைப்பாளியின் குரலில் படைப்பை மீண்டும் படிக்க இவை உதவுகிறது.

இந்த வார நியு யார்க்கரிலும் ”ஆமென்” என்கிறார் ஹானா ரோஸ்ஃபீல்ட்: No More Questions: A Brief History of Author Interviews : The New Yorker

3. “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன

“People will always elect the government they deserve” (பிரஜைக்களுக்குத் தக்க ராஜாதான் கிடைக்கிறார்) என்பது லிங்கன் முதல் ஜோசப் வரை சொல்வதாக ஜார்ஜ் புஷ்ஷின், இராக் பழிவாங்கல் போரினால் அமெரிக்காவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. சில பெருநிதி நிறுவனங்கள், இன்னும் மிகச் சில அதிசெல்வந்தர்கள், இன்னும் மிக மிகச் சில உலக சூத்திரதாரிகளால் அவை ஏவப்படுகின்றன என்பதை ஆய்வு புத்தகங்களும் உள்நோக்கர்களும் அமெரிக்காவிலேயே விமர்சனபூர்வமாக தெரிவித்தாலும், அமெரிக்கா என்றால் சண்டைக்கோழி என்னும் பிம்பம் மாறவாப் போகிறது?

4. இரப்பர் காலத்தில் இருந்தே இளமையையும் அழகையும் அந்த வயதில் ஏற்படும் காதலையும் இரம்மியமாக சித்தரிப்பவர் ஜெயமோகன். எப்பின் – த்ரேஸ் ஈடுபாட்டை படித்த பின்னர் இன்னொரு திருப்தியான நேசப் பரிமாற்றமாக இன்றைய அத்ரிகை – சத்தியவான் பகுதி அமைந்திருக்கிறது.

5. “ நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன.

“இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன.”

“ ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார்.

6. மச்சகன்னி, கடற்கன்னி என்றெல்லாம் கொச்சை வார்த்தைகளைத் தவிர்த்து நீர்மகளிர் என்னும் சொல்லாக்கமே கண்ணியம் கலந்த ஆர்வத்தைத் தூண்டும் பிரயோகம். அதே மாதிரி இம்மி பிசகினாலும் விரசம் ஆகிவிடக் கூடிய பத்மினி, சித்ரிணி, சங்கினி, ஹஸ்தினி இன்ன பிற விவரிப்பும், வெறும் தகவலாக அமையாமல் காட்சியோடும் கதையோடும் ஊடாடி சொருகப்பட்டிருக்கும் லாவகத்திற்காகவே இந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.

7. சமீபத்தில் ஜப்பானிய பொருட்காட்சி சென்றிருந்தபோது அங்கே, “ஆ… ஊ…” என்று சத்தம். தலையில் கொண்டை; கூடவே ஆம் அத்மி மாதிரி தொப்பியோ அல்லது ஆங்காங்கே சொருகிய ரிப்பனோ எட்டிப் பார்த்தது. அவளுக்கு மேலே பிள்ளையார் சதுர்த்தி போல் குடை ஒன்று நின்றிருந்தது. எதிரே பெரிய டமாரம். அதில் அடித்து அதகளம் செய்து கொண்டிருந்தாள். இன்னொரு புறம் நிறைய சிப்பிகள். எல்லாமே அழுக்காக, பார்ப்பதற்கு பழுப்பும் கருப்பும் கலந்து அருவருக்கவைத்தன. அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தால், அதில் இருந்து முத்தை எடுத்து நகையாக்கித் தருகிறாள். அலங்காரம், செய்தொழில் ஒவ்வொன்றிலும் கேளிக்கை கலந்த ஆர்பாட்ட வழிமுறை, இவற்றை வேடிக்கையாக அலுக்காமல் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுவது என்பதால், மச்சகந்தி ஜப்பானில் இருந்து வந்திருப்பாளோ?

8. இருநூற்றியிருபது முத்துக்களை ஒவ்வொரு முழுநிலவுநாளாகப் பிரித்தால், கிட்டத்தட்ட 220 மாதங்கள். அப்படியானால், பதினெட்டே கால் வருடங்கள் சேர்ந்திருந்திருக்கார்கள் என்றவுடன் பழைய ஜோக் தோன்றியது.

கல்யாணம் ஆன முதல் வருடம் மனைவியுடன் சேரும்போதெல்லாம், ஒரு ஜாடியில் ஒரு டாலர் போடுங்கள். முதல் வருடம் முடிந்த பிறகு, உங்கள் மனைவியுடன் எப்பொழுதெல்லாம் சேருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம், அந்த ஜாடியில் இருந்து ஒரு டாலரை எடுங்கள். நீங்கள் சாகும் வரை, அந்த ஜாடியில் நிறைய டாலர்கள் நிச்சயமாக பாக்கி இருக்கும்.

9. திடீர்னு “கடல்” பாடல் நினைவிற்கு வந்தது:

சித்திரை நிலா ஒரே நிலா
பரந்த வானம் படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையிலே நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 7: பகுதி இரண்டு : பொற்கதவம்

ஜெமோபாரதம் – 5 & 6

In Mahabharat on ஜனவரி 6, 2014 at 3:17 முப

முந்தைய பகுதி

1. ஜெயமோகன் வேகத்திற்கு கணிப்பொறி எப்படி ஈடுகொடுக்கிறது எனத் தெரியவில்லை; என்னால் முடியாது. ஜெயபாரதத்தில் பீஷ்மரையே ஏதோ ரஜினி படத்தில் கிரேசி மோகன் திரையில் தோன்றுவது போன்ற அடிப்பொடி அறிமுகம் செய்விப்பதால், நானும் எப்பொழுதெல்லாம் மேற்கோள்கள் பொங்கி நிறைகிறதோ அப்பொழுது மட்டும் தொகுத்தால் போதும்.

2. வியாசவனம், தனக்கென ஒரு பிரபஞ்சம் என்றெல்லாம் வாசித்தவுடன் திரிசங்குவும் அவருக்காக விசுவாமித்திரர் சிருஷ்டித்த சொர்க்கமும் பாரதத்தில் இராமாயணத்தை நினைவுக்குக் கொணர்ந்தன.

3. “எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.

4. வியாசருக்கான அறிமுகம்… அக்ஷர்தாமில் பார்த்த சுவாமிநாராயண் மாதிரி பிரும்மாண்டமாக, வைரமுத்து எழுதிய தல/தளபதிக்கான அறிமுகப் பாடல் போல் கம்பீரமாக, விநாயகருக்கே கை நடுங்க வைக்கும் சண்டமாருதம் போல் அமர்க்களம்.

5. “ எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் சத்வ, ரஜோ, தமோ முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன.

6. பங்குனி என்று எளிமையாக எழுதாமல் எதற்கு நீட்டி முழக்கி “ஃபால்குன” போட வேண்டும். தேவையில்லாமல் பல்லுடைக்கிறார் யுவர் ஆனர்.

7. ஜெயமோகனைப் படித்து கொஞ்சம் மூச்சடைக்க வேளுக்குடிக்கே மீண்டும் சென்று கேட்டு வந்தேன்.

8. “வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர்.

ஏன் ஆண்கள் வம்பு பேச மாட்டார்களா? பெண்கள் மட்டும்தான் வதந்தி பரப்புவார்களா?

9. தொலைக்காட்சியில் சத்தியவதியை கவர்ச்சியாகப் பார்த்து பார்த்து, அவளின் இளமையை வர்ணிக்காததை இப்போதைக்கு ஜீரணிக்க முடியாததால் மன்னிப்பே கிடையாது.

சுட்டிகள்:

அ) நூல் ஒன்று – முதற்கனல் – 6: பகுதி இரண்டு : பொற்கதவம்

ஆ) நூல் ஒன்று – முதற்கனல் – 5 : பகுதி ஒன்று : வேள்விமுகம்

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 4

In Mahabharat on ஜனவரி 4, 2014 at 5:59 பிப

முந்தைய பகுதி

1. ”புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். தன்னை அறிந்துகொள்ளமுடியாதவனின் தனிமையை தெய்வங்களும் நீக்கமுடியாதென்று உணர்ந்தார்.

2. சின்னக் குழந்தையாக செய்த தவறுகளை கண்டும் காணாமல் இருப்பதற்காக ஆணி மாண்டவ்யர் கதை வரப் போகிறதோ என அந்த யாகம் செய்வதற்கான முஸ்தீபுகள் தோன்றவைத்தன.

3. கிறித்துவத்தில் “பாவ மன்னிப்பு” இருக்கிறது. இந்து மதத்தில் பரிகாரம் இருந்தாலும் முழு விமோசனம் கிடைப்பதில்லை. சாபம் பெற்றாலோ, ஒரு சின்ன தவறு இழைத்தாலோ நிச்சயம் நரகத்தில் உழல்வீர்கள். அறியாத வயதில் என்றாலும் விதிவிலக்கு கிடையாது. செய்த தவறை நினைத்து உழன்றாலும் தப்பிக்க முடியாது. ஒரு முறை ஜெயிலுக்குச் சென்றால், அதன் பிறகு எப்பொழுதும் திருட்டுப் பட்டம் தொடர்வது போல், என்றென்றும் அந்த அழுக்கு உங்களைப் பின் தொடரும்.

4. முழு மஹாபாரதம் பதிவு நடத்தும் அருளின் எண்ணங்கள்

5. ” கண்ணீர்த்துளிகள்போல, குருதித்திவலைகள் போல, விந்துச்சொட்டுகள் போல அவை நெருப்பில் விழுந்தபோது அரங்கெங்கும் நெடுமூச்சுகள் எழுந்தன.”

6. வீடு வாங்கினால் ஹோமம்; கல்யாணத்திற்கு ஹோமம்; கருவுற்றால் ஹோமம்; குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் ஆயுஷ்ய ஹோமம்; காலன் நெருங்காமல் இருக்க மிருத்யுஞ்சய ஹோமம் என்று வாழ்நாள் முழுக்க யாகமும் ஆகுதியும் தானமும் அதன் தாத்பர்யங்களும் பார்த்தவர்களுக்குக் கூட இந்தப் பகுதி எழுச்சியும் புது தரிசனங்களும் தருமாறு அமைந்திருக்கின்றன. ஏன் யாகம் செய்கிறோம்? எதை அதில் போட வேண்டும்? எப்படி இட வேண்டும்? வேதமந்திரங்களின் அர்த்தம் புத்திக்கு உறைக்கலாம்.

7. மகாபாரதம் – சொற்கள்

8. ”அத்தனை பாம்புகளும் வேள்விநெருப்பில் மறைந்ததும் அப்பகுதியெங்கும் எரிதலற்ற ஒளி நிறைந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஓவியப்பரப்பு போல அவர்களனைவரும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்தனர்.”

9. அந்தக் காலத்தில் இருந்தே மேலாளர்கள் திருப்தி பெறாத, வேண்டுவதைக் கொணரும் வரை அடங்கா வேட்கையுடன் செயல்பட்டதை அறியமுடிகிறது 🙂 தனக்குத் தேவையான மிக மிக இறுதியான முக்கிய டெலிவரி வராவிட்டால், பிராஜெக்ட் மேனேஜர் ஆக முடியாது!

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 4

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 3

In Mahabharat on ஜனவரி 4, 2014 at 1:24 முப

முந்தைய பகுதி

1. ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான்.

வாழ்க்கை ஒரு சதுரங்க ஆட்டம்; சில சமயம் ஆடு புலி ஆட்டம்; சில சமயம் பரமபதம். சாண் ஏறி, முழம் சறுக்கி ஓடுகிறோம்.

2. பண்டைய ஆக்கங்கள் முழுக்கவே ஆச்சாரியர்களை முன்னிறுத்துபவை. துர்வாசரைப் பகைத்துக் கொண்டால் சாபம்; விசுவாமித்த்ரருக்கு சிசுருஷை ஒழுங்காக செய்யாவிட்டால் ஜென்ம நாசம். துரோணரும் கூட ஏகலைவனைப் பார்த்துக் கொண்டார்; பரசுராமரும் கர்ணனை கவனித்தார். இந்தப் பகுதியிலும் குருமார்களிடம் சிரத்தையாக நடந்து கொள்ளாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்கிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், முன்கோபத்தோடும் ஆவணத்தோடும், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்னும் மமதையோடு இயங்கும் பெரியோர்களை கடுமையான விமர்சனப் பார்வை பார்த்தாலோ இளமையின் துள்ளலில் அந்த முனிசிரேஷ்டர்களை மனிதர்களாக தரையில் உலாவும் படைப்புகளாக உருவாக்கினாலோ, அதை நான் புனைவாக ஏற்றுக் கொள்வேன்.

3. இளமையில் விதவை ஆவதன் வலிகளை சுருக்கமாக உத்தரை மூலம் கோடிட்டு காண்பிக்கிறார். இந்த மாதிரி தற்காலப் பிரச்சினைகளை அந்தக் கால கதைகளில் விவரமாக உணர்ச்சிபூர்வமாக சொல்வது, வரலாற்றை மறுபார்வை பார்ப்பது போல், மாற்று கோணங்களை உணரவைப்பது போல் மிக முக்கியமானது. இங்கே ஜெயமோகன் வெறும் matter of fact ஆக தற்போதைக்குக் கடந்து போய் விடுகிறார்.

4. ஆனால், போரின் அர்த்தமின்மைக்கும் அதன் விளைவுகளின் நீதிக்கும் இந்தப் பகுதி ஓரளவு திருப்தியாகப் பேசுகிறது.

“குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம்.”

அஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை.

5. மகாபாரதம் துளிக் கூட தெரியாதவர்கள் இந்தியாவில்… தமிழகத்தில்… இணையம் வாசிப்பவர்களில் வெகு வெகுக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நடையும் எழுத்தும் கதாபாத்திரங்களும் பிரச்சினையே இல்லை. இந்தப் பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் எப்படி எடுபடும்?

6. மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்: தமிழ் ஹிந்து

7. அந்தக் காலத்திலேயே விமானம் ஓட்டினோம், கூடு விட்டு கூடு பாய்ந்தோம், அறுவை சிகிச்சை செய்தோம், செல்பேசியில் கதைத்தோம், சோதனைக்குழாயில் பிள்ளை உண்டாக்கினோம், நினைத்த மாத்திரத்தில் நேரப்பயணம் செய்தோம்… என்னும் பட்டியலில், முன்கூட்டியே பிறந்த சிசுவைக் காக்கும் வகையையும் அறிந்திருந்தோம் என நீட்டிக்கலாம்.

8. இருபதாண்டு காலம் திட்டமிட்டார் என ஒரிரு வார்த்தைகளில் கடந்து செல்கிறார். வானம் பொய்த்ததில் வரி வசூல் செய்வதில் பற்றாக்குறையா? மூலகர்த்தாவான xyzம் abcம் விந்திய மலை தாண்டி வரும்போது ஏதாவது ஹோமக்காரர்களுக்குத் தட்டுப்பாடா? நெய் காய்ச்சும்போது நேரம் எடுத்ததில் மாட்டுக்காரிக்கும் கிண்டுபவனுக்கும் குழந்தை பிறந்ததா? இப்படி எல்லாம் பின்புலமும் காரண காரியங்களும் சொல்லாவிட்டாமல், என் நினைவிலும் ஓரிரு நிமிடங்களே தங்கிப் போகும் அனுபவம் ஆகிவிடுகிறது.

9. மன்னர்களுக்கு அலுப்பு தட்டும் வேலை. எதிரிகள் இல்லாமல் தங்கள் பராக்கிரமத்தை எப்படி நிரூபிப்பது? முற்றுகை இடுவோரோ, பிரச்சினை எழுப்புவோரோ உருவாகாவிட்டாமல், தங்கள் வாழ்வின் அர்த்தம் என்ன? இதில் முன்னோர்கள் சொன்ன கதைகளும், சொல்லாமல் விட்டதை வதந்தியாகக் கேள்விபட்டதும் கலந்துருவாகும் நிஜம் என்ன? மது அருந்திய பின்னிரவுகளில் கற்பனை கலந்து கொப்புளிக்கும் கனவுகள் எவ்வாறு இருக்கும்? படியுங்கள் தெரியும் என காண்பிக்கிறார் ஜெயமோகன்.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 3