1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது”
இதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.
2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”
இன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா?
3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்”
இது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா! என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.
4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்”
இப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.
5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.”
இது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.
6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…”
ஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்
7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது”
இது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.
8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.”
…
”படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”
ஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.
9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”
கதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.
சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8
[…] முந்தைய பகுதி […]