1. ஜெயமோகன் வேகத்திற்கு கணிப்பொறி எப்படி ஈடுகொடுக்கிறது எனத் தெரியவில்லை; என்னால் முடியாது. ஜெயபாரதத்தில் பீஷ்மரையே ஏதோ ரஜினி படத்தில் கிரேசி மோகன் திரையில் தோன்றுவது போன்ற அடிப்பொடி அறிமுகம் செய்விப்பதால், நானும் எப்பொழுதெல்லாம் மேற்கோள்கள் பொங்கி நிறைகிறதோ அப்பொழுது மட்டும் தொகுத்தால் போதும்.
2. வியாசவனம், தனக்கென ஒரு பிரபஞ்சம் என்றெல்லாம் வாசித்தவுடன் திரிசங்குவும் அவருக்காக விசுவாமித்திரர் சிருஷ்டித்த சொர்க்கமும் பாரதத்தில் இராமாயணத்தை நினைவுக்குக் கொணர்ந்தன.
3. “எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.”
4. வியாசருக்கான அறிமுகம்… அக்ஷர்தாமில் பார்த்த சுவாமிநாராயண் மாதிரி பிரும்மாண்டமாக, வைரமுத்து எழுதிய தல/தளபதிக்கான அறிமுகப் பாடல் போல் கம்பீரமாக, விநாயகருக்கே கை நடுங்க வைக்கும் சண்டமாருதம் போல் அமர்க்களம்.
5. “ எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் சத்வ, ரஜோ, தமோ முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன.”
6. பங்குனி என்று எளிமையாக எழுதாமல் எதற்கு நீட்டி முழக்கி “ஃபால்குன” போட வேண்டும். தேவையில்லாமல் பல்லுடைக்கிறார் யுவர் ஆனர்.
7. ஜெயமோகனைப் படித்து கொஞ்சம் மூச்சடைக்க வேளுக்குடிக்கே மீண்டும் சென்று கேட்டு வந்தேன்.
8. “வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர்.”
ஏன் ஆண்கள் வம்பு பேச மாட்டார்களா? பெண்கள் மட்டும்தான் வதந்தி பரப்புவார்களா?
9. தொலைக்காட்சியில் சத்தியவதியை கவர்ச்சியாகப் பார்த்து பார்த்து, அவளின் இளமையை வர்ணிக்காததை இப்போதைக்கு ஜீரணிக்க முடியாததால் மன்னிப்பே கிடையாது.
சுட்டிகள்:
அ) நூல் ஒன்று – முதற்கனல் – 6: பகுதி இரண்டு : பொற்கதவம்
[…] முந்தைய பகுதி […]