Snapjudge

சிவரமணி கவிதைகள்

In Books, Srilanka on செப்ரெம்பர் 3, 2009 at 3:00 முப

நன்றி: சொல்லாத சேதிகள் :: பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்

1. அவமானப்படுத்தப்பட்டவள்

(1990: தற்கொலைக்கு ஒரு வருடம் முன்)

Selvi-Sivaramani-Eelam-Tamils-LTTE-Podichi-Peddai.netஉங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.


2. முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .


3. எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?

விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்

தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!

தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.


4. வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.

காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.

எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.

வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.

புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.


5. யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

….நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்….

எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்


6. எழுதிய ஆண்டு: 1983

நன்றி: எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்

புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கின்றான்…
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்கு பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரீகங்களைத் தவிர…

வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்ட்டுள்ளன
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்

வினாக்களும் விடைகளும் முடிவுகளும்
யாவருக்கும் முக்கியமற்றுப் போனது
“மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையளில்
வாழ்வதை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.

கவிதை வெறிமுட்டி
நான்
கவிஞன் ஆகவில்லை
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
அன்று நான்
கவிதைகள் வரையவில்லை
என்னிடம் இருந்தது
கறுப்பு மையே
இன்றோ சிவப்பு மையால்
வரைகின்றேன்
என் உள்ளத்தை
உன் உள்ளத்தை
தோல்வியுறா தர்மத்தின்
இறுதித் தீர்ப்புகளை

நானொரு பிறவிக்
கவிஞன் அல்ல
என்னை வெறிமூட்ட
இங்கு
ஓராயிரம் சம்பவங்கள்
நானோ
இருபதாம் நூற்றாண்டின்
வசந்தத் தென்றல் அல்ல.

ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.


7. எனது பரம்பரையம் நானும்

ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும்கூட
இல்லாதொழிக்கப்பட்டு விட்டது

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.


8. எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.

  1. ப்பா. ஊருக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். கடந்து போன காலங்கள் நெஞ்சில் தோன்றி மறைந்தன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: