Snapjudge

ராயர் காப்பி கிளப் – பத்து மடல்

In Literature, Misc on பிப்ரவரி 26, 2009 at 5:50 பிப

நன்றி: ராயர் காபி க்ளப்

1. இரா முருகன்

பழைய காலத்தில் சாங்கோபாங்கமாகக் கதை எழுதினார்கள் என்பது பெரும்பாலும் உண்மை என்றாலும், அப்போதே சொற்சிக்கனமும் சிறுகதைக்குள் வந்து விட்டது. கு.ப.ராவின் ‘விடியுமா?’ கதையை உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வெற்றி பெரும் கதைகளில் கதையம்சத்தோடு செய்நேர்த்தியும் கண்டிப்பாக இருக்கும். Craft அசிங்கமான விஷயம் இல்லை. கதைக்குள் வாசகனை / வாசகியை இழுக்க, லயிப்பைத் தக்க வைக்க இது அவசியம் தேவைப்படுகிறது.

“க்ரிகோர் சமசா காலையில் கண் விழித்து எழுந்தபோது ஒரு பூச்சியாக மாறியிருந்தான்” என்று காப்கா ‘மெட்டமார்·பஸிஸ்’ கதையைத் தொடங்குவார். சர்ரியலிசக்கதை அது. உருவம், உத்தி, உள்ளடக்கம் எல்லாம் அப்புறம். அந்த ஆரம்பமே கதைக்குள் நுழையத் தூண்டுகிறது பாருங்கள் – அதுதான் முக்கியம்.

கதை முடிந்த பிறகும் எழுத்து நீண்டு கொண்டே போவது வெற்றி பெற்ற சிறுகதையில் இருக்காது. எங்கே தொடங்குவது என்பதைத் தெரிந்து கொள்வதைப்போல் எங்கே முடிப்பது என்பதும் முக்கியம்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது –

உத்தராயணம்‘ என்று ஒரு சிறுகதை எழுதினேன் (சுபமங்களா). ரேடியோ ரிப்பேர் செய்யும் ஒரு வயதான அய்யருக்குச் சினிமாவில் பாதிரி வேடத்தில் நடிக்க ஒருநாள் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவருடைய அந்த நாளின் அனுபவங்கள் தான் கதை.

“குளத்து ஐயர் அங்கியை மாட்டிக் கொண்டார்” என்று கதையைத் தொடங்கி இருந்தேன்.

நண்பர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார், “அங்கேயே கதை முடிஞ்சு போயிடுச்சு”

சிக்கல் இங்கேதான். ராமகிருஷ்ணனுக்கு அந்த ஒற்றை வாக்கியத்தில் தெரியும் முரணில் முழுக்கதையும் கிடைத்து விட்டது. எல்லோருக்கும் அந்த அனுபவம் ஏற்படுமா?

நல்ல கதையை எழுத விடியல்காலையில் வென்னீரில் குளித்து லுங்கியும் ஈரத்துண்டுமாகத் தலையைத் துவட்டாமல் மேற்கு நோக்கி உட்கார்ந்து க, ந, மா என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் வழிமுறை இல்லை.

கதை மனதில் தட்டுப்படும்போது எங்கேயாவது ஒரு வரி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (ஆபீஸ் ·பைலில் இல்லை). எழுதக் கை வரும்போது எதை எழுதலாம் என்று மோட்டுவளையைப் பார்க்க வேண்டியது இல்லை. பாக்கெட் நோட்புத்தகத்தையோ, உள்ளங்கைக் கணினியையோ பார்த்தால் போதும்.

மனதில் கதை – குறைந்த பட்சம் ஒரு சுமாரான தோற்றமாவது இல்லாமல் எழுத உட்காராதீர்கள்.

எழுதிய கதையை ஒரு நாளாவது இடைவெளி விட்டு, முதல் வாசகனாகப் படியுங்கள். அதை எழுதிய எழுத்தாளனாகப் படிக்காதீர்கள். கதையே மாறலாம்.

இனி எழுதுவதில் ஏற்படும் சின்னச் சங்கடம் பற்றி –

பழைய கால எழுத்தாளனுக்கு இல்லாத (அவர்களுக்கும் இருந்ததா என்று யாரைக் கேட்டால் தெரியும்? முதுபெரும் எழுத்தாளர் சிட்டியை?) ஒரு சங்கடம் இப்போது எழுதுகிறவர்களுக்கு உண்டு. எழுத உட்காரும்போதே இத்தனை பக்கத்துக்கு மேல் போகக்கூடாது என்பது மனதின் பின்னணியில் ஓடிக் கொண்டே இருக்கும். பத்திரிகையில் பல விஷயங்களும் இடம்பெற வேண்டியிருப்பதால், சிறுகதைக்கும் பக்க அளவை நிச்சயிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு இரண்டு வருடம் போல் முழுக்க இலக்கிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவிட்டுப் பிரபலமான பத்திரிகைகளுக்குத் திரும்ப வந்தபோது, கை தன்பாட்டில் கம்ப்யூட்டர் கீ போர்டில் அடித்துக் கொண்டே போக, கதையை (இதுவும் சாப்ட் காப்பிதான் மின்னஞ்சலில் அனுப்புவது) கம்போஸ் செய்த கம்பாசிட்டர் ஆசிரியரிடம் கேட்டாராம் ” என்ன சார்.. இதைத் தொடர்கதையாப் போடப் போறீங்களா?”.

இப்போது எழுதும்போது எம்.எஸ் வேர்ட் கோப்பில் மூன்று பக்கத்துக்கு மேல் (10 பாயிண்ட் எழுத்து) போகக் கூடாது என்பதில் தான் பாதிக் கவனம் போகிறது. அப்போது தான் பத்திரிகை சைசில் ஆறு பக்கத்துக்குள் அடங்கும் (படம், துணுக்கு பிரசுரித்த இடம் போக).

‘கொஞ்சம் நீளமான சிறுகதை’ என்று விகடனில் செய்தார்கள். குறுநாவலுக்கும், ஆறு பக்கச் சிறுகதைக்கும் இடைப்பட்ட சில கதைகள் அதிகச் சேதாரம் இல்லாமல் படிக்கக் கிடைத்தன. இதை அவ்வப்போது மற்றப் பத்திரிகைகளும் செய்தால், கதையின் நீளத்தைப் பற்றி அனாவசியமாகக் கவலைப்படாமல் எழுதிக்கொண்டு போகலாம். அதில் ஏதாவது ‘வளவள’ இருந்தால் பத்திரிகை ஆசிரியரின் கத்திரிக்கோல் அதிகாரம் இருக்கவே இருக்கிறது.

~oOo~

2. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

சினிமாவும் நவீன இலக்கியத்தில் ஒரு மிக முக்கியமான அங்கம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், தற்கால சினிமா மற்ற இலக்கிய அங்கங்களைக் கூட தூக்கிச் சாப்பிட்டு விடுமளவுக்கு நாடு, மொழிகள், கலாச்சாரங்கள் கடந்த அசுர வளர்ச்சி பெற்றுள்ளதை நாமெல்லோருமே நன்கறிவோம்.

ஒரே ஒரு சின்னத் திருப்பம்.

ராயர் காப்பி கிளப் அரட்டையில் சினிமா பற்றிய -‘ஓ போடு’, ‘சிம்ரன்-கமல்’, ‘பாபா-விஜயகாந்த்’ எல்லாம் தாண்டிய-, நல்ல சினிமா, எடுக்கும் விதம், சில பல டெக்னிக்குகள் பற்றி இங்கே பேசலாமா இந்த இழையில்?

நேற்று, Lawrence Kasdan-ன் ‘Body Heat’ கேபிளில் பார்த்தேன். ’81-ல் முதலில் பார்த்தது. அப்போழுது எனக்கு இரண்டாவது அமெரிக்க விஜயம். அமெரிக்காவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. (இன்னமும் பிடிக்காதது வேறு விஷயம்.) அண்ணனுடன் பார்த்தபொழுது, அந்தப் படத்தின் அதீத செக்ஸ் காட்சிகள் எங்களை நெளிய வைத்ததும் உண்மை. வில்லியம் ஹர்ட்டையும் காத்லீன் டர்னரையும் அப்புறம் எத்தனையோ படங்களில் எப்பட் எப்படியெல்லாமோ பார்த்தாயிற்று.

ஒரு இருபது வருடங்கள் கழித்து, சினிமா விவகாரங்களில் கொஞ்சம் மெச்சூரிட்டியோடு அதே படத்தைப் பார்த்தபோது, அந்தப் படத்தின் க்ளாசிக் டச் வெளிப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் என் ரசிகத்தன்மை, knowledge of movie making and technology இம்ப்ரூவ் ஆகியிருப்பது ஒரு முக்கியக் காரணம்.

படம் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஹிட்ச்காக் தரத்துக்கு எடுக்கப்பட்டது. படத்தைப் பார்க்காத நண்பர்களுக்காக கதை பற்றிய ஒரு சின்னக் கதை: ·ப்ளாரிடா பக்கமாக ஒரு சின்ன டவுன். சென்னை மாதிரி அனல் வெய்யில், வியர்வை, புழுக்கம். தூக்கம் வராமல் எல்லோருமே தவிக்கிறார்கள். ஹீரோ ஒரு சொதப்பலான வக்கீல். அவ்வளவாக ஒழுக்கமில்லாத உலக்கைக் கொழுந்து. தன் கணவனைக் கொல்வதற்காகவும், சொத்துக்களை அப்படியே ‘ஸ்வாஹா’ பண்ணுவதற்காகவும் ஒரு பொம்பளை அவனை எப்படி யூஸ் பண்ணிக் கொள்ளுகிறாள் என்பதே கதை. சஸ்பென்சை வெள்ளி அல்லது சனி வீட்டுத் திரையில் காண்க. ஏடாகூடமான காட்சிகள் உண்டு. மாமிகளிடம் மாட்டிக்கொண்டு என்னை மாட்டி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் கலைக் கண்ணோடு பாற்கிறவன்.

படம் ஆரம்பத்தின் முதல் ·ப்ரேமிலிருந்து படத்தின் ஜீவநாடி கணிக்கப்பட்டு விடுகிறது. முதல் பத்து டிஸால்வ்களிலேயே சுண்டி இழுத்து விடுவார் டைரக்டர். ஏதோ நடக்கப் ப்பொகிறது, ஆனால் இன்னதென்று தெரியாத எதிர்பார்ப்பு நமக்கு. விய்ர்வை, புழுக்கம், பரவாயில்லை, ‘It is OK’, சற்றே எல்லாருமே ஒழுக்கம் பிறழலாமென்கிற மாதிரி மயக்கம். ஹீரோ அதி புத்திசாலியுமில்லை. தெரிகிறது. இருந்தாலும் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுமளவுக்கு எப்படி அவன் சதாய்க்கப்படுகிறான் என்பது ஸ்கிரிப்டின் வெற்றி.

இரண்டு மூன்று இடங்களில் காமிரா டாப் ஆங்கிளில் கவிதையே பாடி விடும். எதிர்பாராத சில நிகழ்வுகள் படத்தின் தரத்தை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய் விடும். அதிலும் ஹீரோயின் வெறும் செக்ஸ் பாம் மாதிரி இருந்து கொண்டு …படத்தைப் பாருங்கள், புரியும்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சாம்பிளுடன் இதை முடிக்கிறேன். “இது லோக்கல் பார். நாளைக்கு நான் இங்கே புருஷனுடன் வரவேண்டி இருக்கும். அதனால் என்னோடு சேர்ந்து வெளியே வராதே. எனக்கு முன்னாடி போய்க் காரில் வெய்ட் பண்ணு” என்பாள் பதிவிரதை. “அதெல்லாம் எதற்கு …?” என்று சுணங்குவான் ஹீரோ. ‘பளாரெ’ன்று ஒரு அவனுக்கு ஒரு அறை. அம்மா எழுந்து போய் விடுவாள். பாரில் இருக்கின்ற மற்ற பிரஹஸ்பதிகளுக்கும் ஒரே ஷாக். அப்புறம் அவன் வாலைக் குழைத்துக்கொண்டு அவள் பின்னாடியே போய் …அவள் கேரக்டர் (or lack of it) அங்கே நிற்கிறது, ‘எதையும் செய்வாள் எம்டி’ என்று.

கடைசிச் சில நிமிடங்கள். அவளுடைய சுயரூபம் தெரிந்து, தன்னையே கொல்லுவதற்காகத் தோட்ட வீட்டில் வெடி வைத்திருக்கிறாள், கதவைத் திறந்தாலே ‘டுமீல்’ என்று புரிய வந்த ஹீரோ, அவளிடம் “காதல் தேவதையே, நீயே போய்த் திறவேன் பார்க்கலாம்” என்பான். அம்மாள் சளைக்க மாட்டாளே. கொஞ்சம் கூட்ச் சலனமில்லாமல் அவனுடன் காதல் பிர்கடனத்துடன் அவள் அந்த்த் தோட்ட வீட்டை நோக்கிப் போக, ஹீரோ பதற்றத்தில் -அவள் குற்றமற்ற குலக் குழந்தோ என்கிற குழப்பத்தில்- அவளைத் தடுக்க ஓடுவான்.

அவள் நிற்காமல் நேரே சென்று….

கதவைத் திறந்து…

வெடிகுண்டும் வெடித்து ….

சஸ்பென்ஸ் படம்ணா …..

நீங்களே பாருங்கோ.

அப்புறம் சொல்லுங்கோ.

~oOo~

3. -/இரமணி

இலக்கியச்சிந்தனையின் சென்றாண்டுக்கான சிறந்த கதை பற்றி எனக்குத் தோன்றியது:

அதிபர் புஷ்ஷின் பயங்கரவாத வரைவிலக்கணம் போல கறுப்பு-வெள்ளையான பாத்திரப்படைப்புகள். பொதுவுடமை கற்கும் ஆரம்ப எழுத்தாளர் தமிழ்த்திரைப்படத்துக்குக் கதையெழுதியதுபோன்ற குழந்தைத்தனம்.

ஈசாப்பின் நீதிக்கதைகள் குழந்தைகள் இலக்கியமாகலாம்; ஆனால், தரமான எழுத்தென்பது சுலபமாக நல்லவர்-கெட்டவர் பிரித்துப்போடக்கூடிய பாத்திரங்களின் அதீத சோகச்சாயையினால் மட்டும் உருவாக்கப்பட்டுவிடுமா? [நீதியற்ற எத்தனையோ படைப்புகள், காவியங்கள் ஆகியிருக்கின்றன… கிரிபித்தின் “தேசத்தின் பிறப்பு” ஓர் உதாரணம்] பிரச்சனைகளை இருமை வகைப்படுத்திமிகவும் எளிமைப்படுத்திப் பார்ப்பதும் காலிலே கயிறு கட்டிக் காகத்தை உட்கார்த்திப் பனைமரம் விழுத்துவதும் நல்ல கதைக்கு அடையாளமாகுமா?

நாடிருக்கும் அவலத்தை, உள்ள கருத்தை அழுத்திச் சொல்வதுமட்டும் ஒரு கதையை நல்ல கதையாக்கி விடமுடியாது – அதுவும் எத்தனையோ தமிழ்ப்படங்கள் இதே தொடக்கத்தையும் முடிவையும் தொட்டபிறகு.

இந்தக்கதை ஓர் இருபது-இருபத்தியிரண்டு ஆண்டுகள் முன்னால் வாசித்த இன்னோர் ஆனந்தவிகடன் (முத்திரைக்?)கதையை வேறு ஞாபகப்படுத்துகிறது. ஆந்திராவின் இரட்டைநகரிலே வாழும் இந்து-முஸ்லீம் நண்பர்கள் இருவரின் கதையை (எழுதியது, சுப்பிரபாரதிமனியனோ.. சரியாக ஞாபகமில்லை; கதையின் தலைப்பும்கூட..)

மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும். அறிந்தால், மகிழ்ச்சி.

~oOo~

4. கே.ஆர்.ஐயங்கார் :: பயம்.. பயம்..

ஹிரோஷிமா, நாகசாகி போன்ற டேங்களில் அணுகுண்டு போட்டதற்கப்புறம் முதன் முதலாக வந்த ஒரே ஜீவன் இது என்று சொல்வார்கள்.

மிளகாய்ப் பழக் கலர்,அதே சைஸ், குட்டியாய் மீசையுடன் கொஞ்சம் நிறையவே அருவறுப்பைத் தரும் ஜீவன் அது. கரப்பு.

என்னைச் சிங்கத்துடன் சண்டையிடச் சொல்லுங்கள். ஸ்டண்ட் மாஸ்டர் உதவியில்லாமல் போடத் தயார். (அதுவும் சிங்கம் வண்டலூரிலிருந்து அசோக் நகர் வருவதற்குள் போக்குவரத்து, பொல்யூஷன் என்பவற்றால் நொந்து நூலாகி வீட்டிற்கு வந்ததும் ‘கண்ணா, முதல்ல ரெஸிஸ்டன்ஸ் சக்தி உள்ள ஹார்லிக்ஸ் கொடுப்பா. அப்புறம் உன்னைக் கவனிக்கிறேன்’ என்று சொல்லிப் பெருமூச்சு விட்டு சோபாவில் அமர்ந்து கொள்ளும்).. ஆனால் கரப்பு என்றால் காத தூரம் ஓடுவேன் (காதம் என்றால் எத்தனை கிலோமீட்டர்?).

சின்ன வயது முதலே கரப்பு என்றால் ஒருவிதமான அலர்ஜியே உண்டு எனக்கு. அதுவும் அரை டிராயரிலிருந்து பேண்டிற்கு மாறிய பருவத்தில் அப்பா என்னிடம், ‘என்னடா.. கரப்புக்கு இருக்கறமாதிரி மீசை அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கு. போய் ஷேவ் பண்ணிட்டு வா..’ சலூன் போனால் ஆஸ்தான ‘பஞ்சமலை’ ‘சின்ன சாமி, இந்த வயசுல ஷேவா. வளரட்டுமே’ எனச் சொல்லியே அரைமனசாய் எடுத்தான்.

ப்ளஸ்டூவில் ப்ராக்டிகல் கிளாஸிற்காகக் காத்துக் கொண்டிருந்த போது ஜீவாலஜி மாஸ்டர் குட்டிக் கண்களில் சீரியஸ் நிறையக் கலந்து வகுப்புக்கு வரும்போதே ஒரு பையுடன் வந்தார். என்னமோ ஜேம்ஸ்பாண்ட் பாமைச் சரி செய்வது போல, சேரில் அமர்ந்ததும் பயபக்தியுடன் பையில் இருந்து பாட்டிலை எடுக்க அதனுள் நிறையக் கரப்புக்கள் கன்றுக்குட்டி போலத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ‘வழக்கமாக நான் உங்களை அறுப்பேன். இப்போது நீங்கள் இதை அறுங்கள்’ என ஜோக்கடிப்பதாக நினைத்து அவர் அறுத்த போது மனதிற்குள் பிரளயமே வந்தது. அப்படி இப்படி என சாக்குச் சொல்லி கரப்பை அறுக்காமல் தப்பித்து விட்டேன். (நல்ல வேளை – இறுதிப் பரிட்சையில் கரப்பு வரவில்லை (ஆனாலும் அநியாயம். அந்த பாட்டில் கரப்புகளுக்காக எங்கள் வகுப்பில் இருந்த 40 பேரிடமும் ஆளுக்குப் பத்து ரூபாய் வாங்கிவிட்டார்.100சதவிகித லாபம்..!))

கரப்புகள் கதவைத் தட்டி வரலாமா என்றெல்லாம் கேட்பதில்லை. அவை இஷ்டம்போல எங்கும் நுழைந்து விடும். அதுவும் முக்கியமாக மனித ஜன்மங்கள் நிம்மதியாக இருக்கும் ஒரே டேமான பாத்ரூமில் நுழைந்து விடும். சுவற்றிலோ , மூலையிலோ நின்றவாறே நம் அழகை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும். அவை அங்கு எதற்காக வருகின்றன என்பதே யாருக்கும் தெரியாது. காதலியைப் பார்க்கவா, அங்கு உள்ள பொந்தில் ஏதாவது ரேஷன் கடை இருக்கிறதா..அல்லது தேமே என சிந்தனை செய் மனமே செய்கிறதா என்பது அவைகளுக்கே வெளிச்சம். அதைப் பார்க்கையிலேயே, ‘கண்ணால் மிரட்டும் கரப்பு’ ‘கவலைக் கரப்பை அடி’ என வெண்பாவிற்கான ஈற்றடிகள்தான் வருகிறதே தவிர, அதை விரட்டும் தைரியம் வருவதில்லை.

பத்து வருடங்களுக்கு முன்னால் (அப்போது எனக்குக் கல்யாணம் ஆகவில்லை) அலுவலகத்தில் கொஞ்சம் லேட்டாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த போது அறைக்குள் ஏதோ ரொய்ங்க் கென சப்தம் கேட்க நிமிர்ந்தால் பறக்கும் கரப்பு ஒன்று. வீலெனக் கத்தி ஆபீஸ் பியூனைக் கூப்பிடலாமென நான் யோசித்து முடிப்பதற்குள் ‘வீல்’ என்று சப்தம். பிறகு என் கழுத்தில் பூமாலை. பார்த்தால் என் செகரெட்டரி பயந்து போய் என் மீது கைகளைப் போட்டிருந்தாள்! (ராயர் கிளப்பில் ரீல் விடக் கூடாது எனச் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?!)

சீனர்கள் எப்படித் தான் வேற்றைச் சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை.. அந்தப் பூச்சியே ஒரு உவ்வே.. அதைப் போய் எப்படி உவ்வே எடுக்காமல் சாப்பிடுகிறார்கள்?

சொல்ல முடியாது. சீனத் திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் ‘கரப்பு தான் எனக்குப் பிடிச்ச மெனுவு’ என்று ஏதாவது பாடல் வந்திருக்கலாம்.

ஹலோ.. கொஞ்சம் இருங்கள்.

அந்த மூலையில் ஏதோ கொஞ்சம் மரக்கலரில்.எனக்குப் பயமாய் இருக்கிறது..

கொஞ்சம் காத்திருங்கள்..

நான் பார்த்து விட்டு வருகிறேன்.

~oOo~

5. லாஸ் ஏஞ்சல்ஸ் சுவாமிநாதன்

தன் பெயர் வரவேணும் என்று எழுதிப்போடும் கேனப்பட்டி கந்தசாமிகளால் மட்டும் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அந்தப் பகுதியின் ஆசிரியரே தானே கேட்டு பதில் எழுதிப்போடுவதே அதிகம்.

சில எடுத்துக் காட்டுகள்.

1. என் நண்பன் சிம்ரனை விட ஜோதிகா மூத்தவர் என்கிறான்? இது உண்மையா? (கையில சிம்ரன் குளோசப் போட்டோ இருக்கு. அதை எப்படியாவது திணிக்கணும்)

2. ஏன் நான் 100 முறை கேட்டும் நீங்கள் பதில் போடவில்லை? போனால் போகிறது, உங்கள் 101 கேள்வியை மட்டும் பிரசுரிக்கிறேன். (ஒரு பாரா இடம் இருக்கு எதாவது போட்டுத்தொலைக்கணூமே)

3. ஏன் கேள்வி-பகுதி சென்ற சில இதழ்களில் வரவில்லை? தன் கேள்வி பத்திரிக்கையில் வராததால் 10 பேர் தீக்குளித்து விட்டதாக செய்தி வந்து, அது சரியா என்று பார்க்க போயிருந்தேன். (அப்படியாவது பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்புதான்)

4 ஆறாம் வேற்றுமையின் உருபுகள் என்ன? அது, அ என்பன ஆறாம் வேற்றுமையின் உருபுகள். (கையில் இலக்கண புத்தகம் கெடச்சிதுடுத்து)

5. 1885ல் காலமான பிரான்சு அதிபரின் தாத்தா பற்றி…. ஒரு பக்கம் வர மாதிரி கட்டுரை…. (ஒரு பழைய பைல் இருக்கு இந்தா ஆளைப்பத்தி, எடுத்துவிடணும்)

6. ஒரு பிரதி அஞ்சு ரூபாய். வாரத்துக்கு பத்து லச்சம் பிரதி விற்கிறது. இவ்வளவு சிரமப்பட்டு எழுதுகிறீர்களே உங்களுக்கு என்ன கொடுப்பார்கள்? பணம் எனக்கு குறியல்ல. நினத்தால் நானே பத்திரிக்கை தொடங்கத் தெரியும். (நேரடியா சம்பள உயர்வு கேட்க முடியல, இப்படியாவது….)

~oOo~

6. மணி மு. மணிவண்ணன் (கலி., அ.கூ.நா.)

எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் எழுதிய நல்ல சிறுகதை ஒன்றை திண்ணையில் வாசி த்தேன் … மயக்கும் நடைக்காகவும், மெல்லிய நகைச்சுவைக்காகவுமே நிறுத்தாமல் படிக்கவைத்த கதை ! – சொக்கன்/லாவண்யா

ஸ்டீ·பன் லீகாக் போன்ற அருமையான நகைச்சுவை. மனித நேயம் இழையோடும் இது போன்ற கதைகள் மெல்லிய இளந்தென்றலைப் போல் மனதை இதப் படுத்துகின்றன. அதே நேரத்தில் 23 சதத்துக்காகப் பல நூறு வெள்ளிகளை வீணாக்கும் எந்திரம் பற்றிய சிந்தனையும் ஓடுகிறது.

அன்றாட வாழ்வில் எந்திரங்களோடு ஊடாடுவது பழகிப் போன சிக்கல். அந்த எந்திரத்தைத் தனக்கே உரிய முறையில் நையாண்டி செய்திருக்கிறார். இதே போன்ற நடை ஏதோ ஓர் நினைவுக்கு வராத அறிவியற் புனைகதையிலும் பார்த்திருக்கிறேன் (அசிமாவ்?)

எந்திரத்தில் உள்ள பிழை வெளிப்படை. ஆனால், பிழையைத் திருத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றியும், திருத்துவதற்கான செலவு பற்றியும் மத்தளராயர் இஷிகவா மீன் எலும்பு வரைபடம் கொண்டு அலசல் செய்து பார்ப்பாரோ? அதே நேரத்தில் எந்த எந்திரமாயிருந்தாலும் இது போன்ற பிழைகள் இல்லாமல் போகாது. எந்திரமில்லாமல், மனிதர்களாயிருந்தாலும், இதைவிட அதிகமான பிழைகள் செய்யக் கூடியவர்கள்தாம்.

ஆனால், இந்தக் கதை படித்து முடித்து மனதில் அலசியவுடன், கடந்த சில பத்தாண்டுகளில் எந்திரமயமாக்கல் எந்த அளவுக்கு வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்பதை உணரும்போது ஓர் அதிர்ச்சி. இந்த எந்திரமயமாக்கலில் என் பங்கு எவ்வளவு இருக்கிறது என்பதை உணரும்போது அதிர்ச்சி மேலிடுகிறது. நடு நிசியில் அழைத்த இளம்பெண்ணின் குரல் ஏதோ ஓர் எச்சரிக்கை மணியை மெல்லியதாக அடிக்கிறாளோ?

முத்துலிங்கத்தின் நகைச்சுவை மெல்லியது. கதையாடல் நுட்பமானது. மாதாமாதம் வரும் கடிதத்தைப் பற்றிச் சொல்வதாகட்டும், தொலைபேசியில் மனிதக்குரலுக்காகக் காத்திருக்க பித்தோவனின் ஒன்பதாவது சிம்பனி ஒலித்து முடிவதாகட்டும், பனியில் சறுக்கி விழுந்து அந்தக்கால ‘லை’யன்னா போல் தவழ்ந்து தொலைபேசியில் வாய்ஸ்மெயில் அனுப்புவதாகட்டும், தொலைபேசியில் விடும் தகவல்களாட்டும் (முக்கியமாக வெங்கல வாத்தியக் குழுப் பறவைகள்) .. வரிக்கு வரி ஆச்சரியங்கள்.

அசோகமித்திரனைப் போல் எளிமையான சொற்களில் ஆழமான மனப்பதிவுகளை எழுத்தில் தருவதில் முத்துலிங்கம் பெயர்போனவர்.

நடுராத்திரியில் தொலைபேசும் பெண்ணோடு நடக்கும் உரையாடல் அழகாக வந்திருக்கும் பகுதி.

ஒரு முறைக்கு இருமுறை நான் படித்து ரசித்த கதை இது. நல்ல சிறுகதை எப்படி எழுதுவது என்று ஆர்வமுள்ள யாரும் படிக்கவேண்டிய கதை இது. – இரா முருகன்

~oOo~

7. ஹரி கிருஷ்ணன்

‘மருவக் காதல் கொண்டேன்’ என்கிறானே பாரதி, ‘மருவுதல்’ என்றால் என்ன? – எல்லே ராம்

மருவுதல் என்றால் சாதாரணமாக உடலால் இணைதால் என்றுமட்டும்தான் பொருள் சொல்கிறார்கள். அன்பினால் கலந்திருத்தல் என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் கூட போதும்.

ஆனால் நம்ப ஆளு இந்த இடத்தில் முதல் பொருளில்தான் சொல்கிறான். ‘வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்’. (சரபேஸ்வரா! ஆழ்ந்த பொருளெல்லாம் உம்ம வேலை.)

கண்ணன் மேல் கொண்ட விரகத்தில் ராமகிருஷ்ணருக்கு முலைகளே முளைத்தன என்று படித்திருக்கிறேன். மருவும் காதலும் பக்தியிலொரு ரசம்தான்! பரசிவவெள்ளம் கண்ட சாக்தரின் வழியது!

ஆமாம், ஆழ்ந்த பொருள் என்னவென்று தங்களுக்குத் தெரியாதது போல் தம்பியை டபாய்க்கலாமா?

டபாய்த்தலின் ஆழ்ந்த பொருளையே அறியாதவன் நான் 😉 – குமார்

அடுத்த தரவில் (stanza) என்ன சொல்கிறான்? ‘சாத்திரம் பேசுகின்றாய் கண்ணம்மா சாத்திர மேதுக்கடி? ஆத்திரம் கொண்டார்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ?……. காத்திருப்பேனோடீ இதுபார் கன்னத்து முத்தமொன்று’. எனவே, மருவுதல் இந்த இடத்தில் அன்புடன் கூடுதல் என்றுதான் பொருள் பெறும். வவேசு ஐயர் உடல் சம்பந்தமான காதலைப் பாடியிருக்கிறான் என்று முன்னுரையில் சொல்லி, அதற்குச் சமாதானமும் சொல்லி ‘ஆண்டாளைப் போல செயிரின்றி’ பாட எல்லோராலும் முடியாது என்று முடிக்கிறார். ஆண்டாள் பாடாத சரீரக் காதலா! அவளை விடவும் அழகாகப் பாடிவிட முடியுமா!

அது சரி. உமக்கு ராஜேஸ்வரி நீலமணியைத் தெரியுமா? ‘பாரதி கவித்துவம் ஒரு மதிப்பீடு’ என்று அறுபதுகளின் கடைசியில் ஒரு புஸ்தகம் போட்டார். பாரதி சதா சர்வ காலமும் பெண்ணாசையையும் மருவக் காதல் கொள்வதையுமே பாடியிருக்கிறார் என்று சொல்வார். இங்கேதான் எங்கேயோ கிடக்கிறது அந்தப் புத்தகம். தேடிக் கண்டுபிடித்துப் போடுகிறேன். 😉

‘மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்’ என்று வள்ளலார் போலப் பாடாமல், இந்த ஆள் எப்படி இப்படியெல்லாம் பாடினான்?

ம்?

ஒழுக்கம் கெட்ட பயல்….

மார்பு என்னும் பெயரினின்று தழுவுதல் வினை, மருவு என்று பெயர்பெற்றது. இது சினையால் அணையும் பெயர். – இராம.கி.

~oOo~

8. துளசி எனும் சிஃபிராயன் :: ஒயர்கள்: சில குறிப்புகள்

நீண்ட கவிதைகள் எழுதுவது என் பெருவிருப்பங்களில் ஒன்று. சமீபத்தில் எழுதிக்கொண்டிருக்கும் (ரொம்ப நாள் கழித்து) ஒரு நீண்ட கவிதை இது. இன்னும் முடிக்கவில்லை.படித்துப் பாருங்கள். கருத்து எழுதுங்கள்.

1. அன்றொரு சின்ன பையன் வந்தான்
பதினாறே வயது. அதற்குள்
மூன்றாண்டுகள் அனுபவமாம்
கணநேரத்தில் வயர்களை இழுத்து
அதன் முனைகளை லாவகமாய்ச் சீவி,
பின்னலென வாய்பிளந்துகிடந்த
ஆணித்துவாரங்களுக்குள் நுழைத்து
இழுத்து, முடுக்கி, பொருத்தி,
திரும்பிப் பார்ப்பதற்குள்
பளிச்சென அறையெங்கும் ஒளிவெள்ளம்.
பேச்சின் சுவடே அறியாமல்
கம்பிகளோடு குடித்தனம் நடத்தும் அச்சிறுவனுக்கு
அன்றைக்கு அந்த ஒயர்கள் தந்தது
அன்றைய உணவு மட்டும்.

2. அழுகையும் அலங்கோலமும்
சிரிப்பும் கூத்தும்
செய்தியும் பொய்களும்
சுவையும் நஞ்சும்
இட்டு நிரப்பியபடி
நடுக்கூடத்தில் ஓடிக்கொண்டிருந்தது
ஒயர் ஒன்று.
மொட்டைமாடியின் கட்டையன்றில்
கூம்பிட்டு, கிளைகள் பிரித்து
அடுக்குமாடி அத்தனையும்
அங்கிங்கு நகராதபடி
கட்டிப்போட்டு வைத்திருந்தது.
குழந்தைகள் முதல்
கிழங்கள் வரை
கெட்டித் தட்டிப்போன வறட்டு ஜம்பங்களை
வாரி வழங்கும் இந்த ஒயர்கள்
நாகரிகம் அறியாதது போலவே
குறைந்தபட்ச நளினமும் அறியாதவை.

3. அமானுஷ்யமாய் சுருண்டு கிடந்தது கட்டிடம்,
இரவின் நிலவொளியில்
அத்தனையும் முடக்கம்,
சின்ன குறட்டை
குழந்தையின் பால் அழுகுரல்
அப்பாக்களின் உதவாத மிரட்டல்கள்
விட்டுவிட்டுத் தொடரும் ஆஸ்த்துமா
இடையே அவசரமாய் அரைபடும் மிக்சி
சட்டென எழுந்துகொள்ளும்
ஏதோ ஒரு வீட்டு ஏசி
அத்தனையிலும் பத்திரம்
கூண்டுக்குள் அடைந்துவிட்ட நிம்மதி
காலை வானின் அவசரம்
சற்றே மறந்து
அமானுஷ்யமாய் உறங்கிக் கிடந்தது கட்டிடம்
ஒயர்களின் மடியில்.

4. மரணத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு வாழ்வது
மனிதனால் மட்டுமே சாத்தியம்.
மாடொன்று இறந்து கிடந்தது
கால்கள் தாறுமாறாய்
கண்கள் வானில் குத்திட்டு
அபாயமறியாக் குழந்தைகள்
ஆவலாய் அதன் முகம் பார்த்து.
அரசை இரண்டொருவர் விமர்சித்தனர்
மழையை மற்றொருவர் குற்றம் சாட்டினார்,
மின்கம்பத்தில் கட்டிவைத்த பால்காரனை
ஏசினர் சிலர்.
“சாவோடதான் டெய்லி சம்சாரம்”
மெல்லிதாய் புன்னகைத்துக்கொண்டே
மின்கம்பியை விலக்கிவிட்டார்
கட்டிங் பிளேயரும் டெஸ்டருமாய் அலையும் சம்மந்தம்.
பால்காரம்மாவுக்குத் துக்கம்
பார்த்த மாத்திரத்தில் உடைந்துபோனாள்.
மூணு சக்கர வண்டியில் வாரிப் போட
விரைத்துக் கிடந்தது
என் குழந்தை சாப்பிட
பால் தந்த அன்னை மடி.

~oOo~

9. ஜெயம்மா :: பொய்

“பிடித்திருக்கிறது” என்கையிலே,
“பிடித்திருக்கிறது” என்பது உனக்குப்
பிடிக்கும் என்று தெரிகிறது.

“கட்டுமா?” என்கிறபோது,
“கட்டும்” என்பதாகின்றாய்;
குரல் தாழின்,
“கட்டாவிட்டாவிட்டால் போகட்டும்” ஆகிறாய்;
உயரின்,
“கட்டித்தான் ஆகவேண்டும்” ஆகிறது.

பரிவேஷம் போர்த்தாமல்
பொய்யென்றே புரியச் சொல்வதைச்
சொல்பவர் செய்யும்வரைக்கும்,
மெல்லிய பொய்யை,
சொல்பவர் கேட்பவர்
எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது,

‘உனக்கு என்னைப் பிடிக்கிறது;
எனக்கு உன்னைப் பிடிக்கிறது’
என்பவை மட்டும் அடக்கமல்ல
இவற்றுள் என்கிறது நினைப்பு.

எதேச்சைக்குறிப்பு

வெயிற்காலத்தின் வெள்ளை வண்ணாத்துப்பூச்சிபோல
இலைகளின் தாழ்வாரங்களிலே தலைக்கீழாய்
ஒளிந்து கொள்கிறேன், வௌவாலாய்த் தூங்குறேன்.

உண்ணாவிரதம் நினைவுக்குவர,
இரவின் பூச்சிகளை மின்னத் தின்னுகிறேன்.
தின்னல் தோற்றாலும் விரதம் காக்க
விழுங்குகிறேன் சாரைகளை.

தெரிந்தும் தெரியாததுமாய் வீதி தோன்றின பெண்களைத்
தொடர்கிறேன்; தாண்டித் தீண்டுகிறேன்; தூங்க அழைக்கிறேன்.
போட்டி நீளும் வரிசையிலே போதுமென வேண்டியவளைத் தேருகிறேன்.

யுத்தம் மிதக்கும் தேசமொன்றை முக்கிமுக்கித் தேடுகிறேன்;
பசித்த பூமியன்றைப் பாறாங்கற்பல்லால் முறிக்கக் கொத்தி
முளைத்த பிட்சாபாத்திரத்தை மொட்டிற் பறித்து விற்கிறேன்,
அடுத்த பூமியின் இருட்டு லாயக்குதிரைக்கொள்ளுச்சலம் தாங்க.

துப்பாக்கிக்குள் மையூற்றி துவந்தயுத்தக்காரர் கைக்குட் திணிக்கிறேன்.
அறியாதாரைப் பொருத அழைக்கிறேன்; இறந்தவரைத் தெரிந்து கொள்கிறேன்.

தெரிந்த தெருக்களுள்ளே தெரியாதார் வீடுகள் முளைக்கிறன
செல்கின்ற வீடுகள் வேறொரு வீதிக்கு விந்திக்கொண்டு நடக்கிறன
அறிந்தவர்கள் முகத்தை கறுப்பு வெள்ளையால்
கோடு பிரித்துக்கொண்டு பேசாமற் போகிறார்கள்;
ஊரைக்கடக்கும் புதியவர்கள் கூட நடக்க குரல் கொடுக்கின்றார்கள்

ஒரு கோடைகாலத்துத்தெருநாயாய்
நேரம் காணக் கைக்கடிகாரம் நோக்க நேரமின்றி
புதிரைப் போட்டு என் முன்னாலே போகிற நான்.

விரும்பியதையும் விரும்பாததையும்
அலைந்தலைந்து செய்யச்செய்ய
– கனம் பெருத்து கணமொன்றில்
விடிந்து உடைந்துபோகிறது
வெள்ளக்கனவு.

~oOo~

10. லவணராயன் :: ராயர் காப்பி கிளப்

முன்குறிப்பு : இந்தக் கதையில் வரும் காட்சிகள், சம்பவங்கள், மனுஷ, உலோகப் பாத்திரங்கள், இன்னும் என்னென்ன உள்ளதோ அத்தனையும் கற்பனையே – நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரையும் சுட்டுபவை அல்ல. யதேச்சையாய் அப்படி அமைந்தால், நான் பொறுப்பில்லை, கோர்ட்டுக்கெல்லாம் வரமாட்டேன்.

காலையில் பசியோடு காப்பிக் கிளப்புக்குள் நுழைந்தபோது முன்னறையில் மத்தளராயர் யாருக்கோ காபி ஆற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தார். சற்றே புகைவாசமடிக்கிற அறைக்குள் கூர்ந்து பார்த்தபோது கறுப்பு மேல்கோட்டு அணிந்து சாம்பார் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தார் பாரதியார். அவருக்கு ஒரு கும்பிடு போடலாமோ என்று யோசித்து, ஏதோ பயத்தில் பேசாமல் உள்ளே போய்விட்டேன்.

உள்ளே ராத்திரி டியூட்டி ராமராயன் தூங்கிவிழும் நிலையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் வியர்வைத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, ‘என்னப்பா, இன்னிக்கும் லேட்டா !’ என்றார்.

நான் அசட்டுத்தனமாய் சிரித்து, ‘சாரிங்க, பேச்சிலரை யார் வேளாவேளைக்கு எழுப்பறாங்க சொல்லுங்க’ என்றேன்.

‘அலாரம் கடிகாரம் இருக்குமே !’

‘இருக்கு, ஆனா அதுக்கு பேட்டரிபோட மறந்துட்டேன், பேச்சிலருக்கு யார் இதெல்லாம் ஞாபகப் படுத்தறாங்க சொல்லுங்க’ என்றேன். அவர் அடுப்புப்பக்கம் திரும்பி புகையிடம் பேசுவதுபோல், ‘எப்போபார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்கு, டெய்லி நான் தூங்க லேட்டாயிடுது’ என்றார். நான் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.

‘சரி, ஒரு மசால்தோசை கல்லில போட்டிருக்கேன், ஜன்னலோர டேபிள்ல ஒரு பையன் இருக்கான், அவனுக்குக் கொடுத்துடு’ என்று சொல்லிவிட்டு துண்டை தோளில் பாம்புபோல் சுற்றிக்கொண்டு உள்ளறைக்குப்போனார் ராமராயர்.

நான் சலிப்போடு முன்னால் எட்டிப்பார்த்தேன், பாரதியார் டி·பனுக்குக் காசு கொடுக்கவும், மத்தளராயர் அதை மறுப்பதுமாய் இருந்தது. ‘உங்ககிட்ட காசு வாங்கலாமாண்ணா, தப்பாச்சே’ என்று சொன்னபோது மத்தளராயர் என்னைப் பார்த்துவிட்டார், ‘பாருங்க, பிள்ளையாண்டான்கூட உங்க கவிதையெல்லாம் பிரியமா படிக்கறவன்தான், உங்ககிட்ட காசு வாங்கினேன்னு தெரிஞ்சா போய்யா நீயுமாச்சு உன் வேலையுமாச்சுன்னு துண்டை உதறிட்டு கிளம்பிப் போயிடுவான்’ என்றதும் பாரதியார் மீசையை முறுக்கினபடி என்னை கோபமில்லாமல் பார்த்தார். ஒரு இடத்தைவிட்டுப் போகிற எல்லோரும் ஏன் துண்டை உதறிப்போகிறார்கள் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். பாரதிக்குத் தெரிந்திருக்குமா ?

‘இவனும் கவிதையெல்லாம் எழுதுவான்’ என்றார் மத்தளராயர். பாரதியாரிடம் இதைச் சொல்வது சத்தியமாய் வஞ்சப் புகழ்ச்சிதான்.

பாரதியார் எங்கள் இருவரையும் தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டு, ‘இப்போ., யார்தான் எழுதலை ?’ என்றார். ‘அதைச் சொல்லுங்க, கவிதையெல்லாம் எழுதறானே தவிர, வேலையண்ணும் சுத்தமில்லை, போனவாரம் இப்படித்தான் பாருங்க, ஒரு கஸ்டமர் காபி கேட்டிருக்கார், கொண்டுபோய் கொடுக்கவேண்டியதுதானே, அதைவிட்டுட்டு, ‘காபி எதற்காக ?’ன்னு பாரதிதாசன் பாட்டாமே, அதைப் பாடிக்காட்டி அவரை விரட்டியடிச்சிருக்கான்’ என்றார் மத்தளராயர்.

நான் கோபத்தோடு முன்னால் வந்து, ‘நீங்க பாதி உண்மைதான் சொல்றீங்க’ என்றேன், முதலாளியின் முன்னால் அப்படிப் பேசுவதற்கு சங்கடமாய் இருந்தாலும், நேர்மைத்திறம் சொல்லித்தந்த பாரதி எதிரில் இருக்கும்போது எதுவும் பேசலாம், ‘என்ன அப்படி பாதி உண்மை ?’ என்றார் மத்தளராயர்., ‘காபி எதற்காக-ன்னு நான் பாடினதும், நம்ம கோடிவீட்டு நீலகேசிப் பாகவதர், ‘அமுதும், தேனும் எதற்கு ? காபி அருகில் இருக்கையிலே எனக்கு’ன்னு காபி ராகத்தில ஒரு பாட்டுப்பாடினார், காபி குடிச்சுண்டு நம்ம தெருவே அதை ரசிச்சது மறந்துபோச்சா ?’ என்றேன், ‘அன்னைக்கு மொத்தம் நூறு காபி ஓடியிருக்கும்’ என்றதில் பாரதியார் ஆர்வம் காட்டவில்லை, ‘என் காசை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்பதுபோல் பத்து ரூபாய் நோட்டை நீட்டியபடி இருந்தார்.

மத்தளராயர் அதை வாங்கி அவருடைய கோட்டுப்பையில் திணித்தார், ‘அப்பப்போ காபி, டிபன் சாப்பிட நம்ம க்ளப்புக்கு வரப்போக இருங்கோ, அதுவே போதும் !’ என்றார். பாரதியார் அப்போதும் திருப்தியானதாய் தெரியவில்லை. நான் பேசாமல் சமையலுள்ளுக்கு வந்தேன். அடுப்பில் தோசை தீய்ந்துகொண்டிருந்தது. அவசரமாய் தோசைத்திருப்பியைக் கொத்தி எடுத்து அதைத் திருப்பப்போனபோது அது அலறியது, ‘திருப்பாதே, திருப்பாதே !’

நான் அதை விநோதமாய்ப் பார்த்து, ‘ரொம்ப தீய்ஞ்சு போயிட்டேப்பா, திருப்பித்தான் ஆகணும்’ என்றேன்.

‘இல்லை இல்லை, ஜன்னலோரமா உட்கார்ந்திருக்கிற பையனுக்கு தீய்ஞ்ச மசால்தோசைதான் வேணுமாம், இன்னும் தீயணும் நான்’ என்று வாடையோடு சொன்னது மசால்தோசை. நான் உள்ளே எட்டிப்பார்த்து, ‘அதானே, தீய்ஞ்ச தோசை போடறதில நம்ம ராமராயர் எக்ஸ்பர்ட்டாச்சே’ என்றேன்.

உள்ளறையில் உடுப்பு மாற்றிக்கொண்டு தூங்கப் போயிருந்த ராமராயர் தலையைத் தூக்கிப்பார்த்து, ‘இன்னொரு தடவை என்னைக் கிண்டல் பண்ணினே, நடக்கிறதே வேற’ என்றார் அதற்குமேல் வேறொன்றும் யோசிக்கமுடியாமல்.

நான் தோசைக்கரண்டியை ஓரமாய் வைத்துவிட்டு மாடியேறுகிற படிகளில் உட்கார்ந்துகொண்டேன், ‘ராமராயரே, இந்தச் சின்னப்பையன்மேல அப்படி என்ன கோபம் உமக்கு ?’

அவர் அசைவில்லாமல் பேசினார், ‘தினம்தினம் லேட்டா வந்தா எப்படி ? பகல்ல நீங்க ரெண்டுபேர் பண்ற வேலையை ராத்திரியில நான் ஒருத்தன் பண்றேன்’ என்றார். நான் குறும்பாய் சிரித்து, ‘அப்படியே இன்னொரு தடவ திருப்பிச் சொல்லுங்க ராயர், வேற அர்த்தம் தோணுது எனக்கு’ என்றேன். ‘படவா, வயசுக்கேத்த பேச்சா பேசுடா’ என்றார் அவர்.

‘அதில்ல ராயர், ராத்திரியில கூட்டம் குறைவாதானே இருக்கும், அதைச் சொன்னேன்’ என்று சமாதானப்படுத்த முயன்றேன்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை, வெளிநாட்டுத் தமிழர்களெல்லாம் ராத்திரியிலதான் சாப்பிட வர்றாங்க, அவங்களுக்கு இன்னும் நம்ம ஊர் சாப்பாட்டு நேரம் பழகலையாம், இப்படித்தான் ஒருத்தன் ராத்திரி ஒன்றரை மணிக்கு வந்து உட்கார்ந்து, ‘இந்தியன் நூடூல்ஸ்’ வேணும்ங்கறான்’

‘இந்தியன் நூடூல்ஸா ? அப்படீன்னா ?’

‘அதான் எனக்கும் புரியலை, அப்புறம் விசாரிச்சுப் பார்த்தா, சேமியா உப்புமா ! கிண்டிக்கொடுத்தேன், நாக்கை சப்புக்கொட்டிண்டு சாப்பிட்டுட்டு அஞ்சு டாலர் டிப்ஸ் வெச்சுட்டுப் போனான்’ என்று கையிலிருந்த டாலர் நோட்டை உயர்த்திக் காட்டிவிட்டு டக்கென்று மறைத்துக்கொண்டார் ராயர்.

முன்னறையில் இன்னும் விவாதம் நடந்துகொண்டிருந்தது, பத்து ரூபாய் விஷயமா, அல்லது இலக்கியம் பற்றிப் பேசுகிறார்களோ தெரியவில்லை, நான் ராமராயரிடம் திரும்பி, ‘பாரதியாரை எங்கே பிடிச்சார் முதலாளி ?’ என்றேன்.

அவர் பெரிதாய் சிரித்தார், ‘காலையில இங்க சாப்பிட வந்த ஒரு பாடகி, சமையல் ரொம்ப பிடிச்சிருக்குன்னு இங்கயே உட்கார்ந்து ரெண்டு பாட்டு பாடிட்டுப் போச்சு, காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாட ஆரம்பிக்கும்போது பாரதியார் உள்ளே வந்துட்டார், ஆசையா உட்கார்ந்து கேட்டார், அப்புறம் முதலாளி அவரைப் பிடிச்சுண்டு, சாப்பிட்டுட்டுப் போனாதான் ஆச்சுன்னு ஒரே பிடிவாதம்’ நான் ஆமோதிப்பாய்த் தலையாட்டினேன், ‘பெரிய ஆட்கள்லாம் நம்ம க்ளப்புக்கு வந்துபோறது பெருமைதான் !’

திடீரென்று ஞாபகம் வந்ததுபோல், ‘நேத்து யாரோ புதுக்கவிஞர் வைத்தீஸ்வர்ராமே, அவரைக் கூட்டிண்டு வந்து உட்காரவெச்சு ரெண்டு மணிநேரம் நவீன கவிதை, நவீன இலக்கியம்ன்னு பேசிண்டிருந்தார் முதலாளி’ என்றார் ராமராயர். நான் சிரிப்போடு, ‘பேசறதெல்லாம் நவீனம்தான், ஆனா சமையல் மட்டும் அதே இட்லி, வடை, போண்டா, தோசை’ என்றேன், ‘கர்நாடகமா இருக்கு !’

‘இருந்தா என்னவாம் ?’ மூலையிலிருந்த இட்லிப்பானை தலையைத் தூக்கிப்பார்த்துக் கேட்டது, ‘இந்த சாப்பாட்டிலதான் சத்து அதிகம், தெரியுமா ?’ என்றது அது. ‘இட்லி தவிர வேறெதையும் பார்த்ததில்லை நீ, அதான் இப்படிச் சொல்றே !’ என்றேன் நான். ‘பிஸ்ஸா, பர்கர், சாண்ட்விச்-சுன்னு என்னென்னவோ பேசிக்கறாங்க, தெரு முனையில சேப்புக்கலர் பளபளா கட்டிடம் ஒண்ணு வந்திருக்கு, எந்நேரமும் அங்கே பெண்கள் கூட்டம்தான்’ என்று இட்லிப்பானைக்கும், ராயருக்கும் பொதுவாய் சொன்னேன்.

‘அதைச்சொல்லு, உனக்கு கல்யாண ஆசை வந்துடுத்துடா அம்பி, அதான் பர்கர் அது இதுன்னு சொல்லிட்டு பாப்பாக்களைப் பார்த்துட்டு வர்றே’ என்றார் ராமராயர். நான் கோபமாய், ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றேன்.

‘இதைச் சொல்லும்போது கோபம் வந்தா, அதெல்லாம் ஒண்ணும் இருக்கு- ன்னுதான் அர்த்தம்’ என்றார் அவர். நான் சிரிப்போடு, ‘இல்லை ராயரே, கல்யாணமெல்லாம் எதுக்கு ? அநாவசியமா நம்ம சுதந்திரத்தை யார்கிட்டயோ அடகுவைக்கணும்’ என்றேன். ‘அதில்லடா’ என்று அவர் ஏதோ பேசவந்தார், ‘நமக்குன்னு ஒரு ஜீவன், எத்தனை நாளைக்கு தனியா இருப்பே- அது இதுன்னு டயலாக் விடாதீங்க ராயரே, நிறைய கேட்டாச்சு’ என்று சிரித்தேன், ‘கல்யாணத்தை சரின்னு ஒத்துக்கவும் முடியலை, வேண்டாம்ன்னு முழுமனசா ஒதுக்கவும் முடியலை !’ என்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.

‘நம்ம மணிப்பய இருக்கானே, அதாண்ணா, போன மாசம் கல்யாணமாச்சே, அவன்தான், ரெண்டுநாள் முன்னால அவன் இங்கே காபி சாப்பிடறச்சே மனீஷா கொய்ராலாவோ, மனுஷக் கொரில்லாவோ, அவளைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு ஏதோ புகழ்ந்து தள்ளியிருக்கான், நம்மாட்கள் சும்மா இருப்பாங்களா, நேரா அவன் புதுப்பொண்டாட்டிகிட்டேபோய் வத்தி வெச்சுட்டான்கள், அவன் வீட்டுக்குப்போனதும் கன்னாபின்னான்னு சண்டையாம், ரெண்டுநாளா பேச்சுவார்த்தையே இல்லையாம், நேத்து சொல்லி வருத்தப்படறான், இதெல்லாம் தேவையா ?’ என்றேன் நான்.

ராயர் பேசாமல் இருந்தார், தூங்கிப்போய்விட்டார் என்று நினைத்து நான் எழுந்துகொண்டபோது, ‘தப்பு கல்யாணத்துமேல இல்லைடா, அவன் பொண்டாட்டிமேல, சண்டை போடறதில தப்பில்லை, ஆனா இன்னிக்கு வந்த சண்டையை இன்னிக்கே முடிச்சுக்கணும் – அதை நாளைக்குத் தொடரவிட்டோம்ன்னா ஆபத்து’ என்றார், ‘திருவள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமோ ?’, அவர் தொடர்ந்துசொல்வதற்குள் நான் எழுந்து, ‘அவர் என்ன சொல்றதா இருந்தாலும், நாளைக்கு நம்ம க்ளப்பில காபி சாப்பிட வரும்போது கேட்டுத் தெரிஞ்சுக்கறேன், இப்போ பசிக்கறது’ என்றேன்.

மசால்தோசை நன்றாக தீய்ந்திருந்தது, கரிக்கட்டைபோல் இருந்ததை தட்டில் கொட்டி ஜன்னலோர டேபிளில் கொண்டுபோய் வைத்தபோது அங்கிருந்தவன் தோசையை முகர்ந்துபார்த்து, ‘நைஸ்’ என்றான். நான் முணுமுணுத்தபடி சமையலுள் வந்தபோது மத்தளராயர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டிருந்தார், ‘லவணராயா, ஒரு பெரிய கல்யாண ஆர்டர் பிடிச்சிருக்கேன்’ என்றார் முகம் முழுக்க சிரிப்புடன். நான் ஆர்வமில்லாமல், ‘சாப்பிட்டாச்சா ?’ என்றேன்.

‘ஆச்சு, நீ சாப்பிட்டியோ ?’

‘இல்லை’

‘முதல்ல சாப்பிடு, இதைப்பத்தி நாம அப்புறம் பேசுவோம்’ என்று சொல்லிவிட்டு அவர் யாரோ கஸ்டமரை கவனிக்கப் போனார். ‘காபியில ஈ விழுந்து கெடக்கு ?’ என்று அவர் புகார் செய்வதும், மத்தளராயர் அதற்கு நீளமாய் ஏதோ பதில்சொல்வதும் காதில் விழுந்தது. அடுத்த காபி கொண்டுவரும்வரை சுவற்றிலிருந்த அலமாரிப் புத்தகங்களில் எதைவேண்டுமானாலும் அவர் எடுத்து படித்துக்கொள்ளலாம் என்று மத்தளராயர் அனுமதி தந்தார். சிவப்புத்துண்டு கஸ்டமர் நிதானமாய் எழுந்து ஒரு சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டார்.

நான் இன்னொரு காபி போட்டு கொண்டுபோய் அவருக்குத் தரும்போது அவர் என்னை முகச்சுளிப்போடு பார்த்து, ‘நீ எழுதின புஸ்தகமா இது ?’ என்றார். நான் அவசரமாய், ‘இல்லவே இல்லை’ என்றேன். ‘கதை சொல்றவனுக்கு, தான் எழுதற விஷயத்தைப் பற்றி முழுஞானம் இருக்கணும்’ என்றார் அவர். எனக்குப் புரியவில்லை. விளக்கமாய் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். ‘மாட்டுக்கு எத்தனை சுழி இருக்குன்னு உனக்குத் தெரியுமாய்யா ?’ என்றார் அவர். ‘தெரியாது’ ‘நல்லது, அதனாலதான் நீ மாட்டைப்பத்தி கதை எழுதலை, இங்கே பார் ஒருத்தர் மாட்டைப்பத்தி எழுதறேன்னு ரெண்டே ரெண்டு சுழியைமட்டும் எழுதியிருக்கார், மத்ததெல்லாம் என்ன ஆகறதாம் ?’ என்றார்.

நான் பதிலேதும் சொல்லாமல் உள்ளே வந்தபோது மத்தளராயர் வெற்றிலை சீவலை வாயில் குதப்பினபடி, ‘தோசையைச் சாப்பிடச்சொன்னா ஓட்டையை எண்ணுறாங்க’ என்றார் பொதுவாய். ஓட்டையில்லாமல் தோசை பண்ணுவது சாத்தியமா என்று யோசித்தபடி நான் இரண்டு இட்லிகளை எடுத்துக்கொண்டு படியில் உட்கார்ந்து அரக்கப்பரக்க சாப்பிட ஆரம்பித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: