1. முன்னாள் :: முகுந்த் நாகராஜ்
தினம் சமைக்கும்போது
இந்தத் தண்ணீரில்தான்
நீந்திச் சாதனைகள் செய்தோம்
என்று நினைத்ததுண்டா
என்ற கேள்விக்கு சிரித்தாள்
குடும்பத் தலைவி ஆகி
கொஞ்சம் குண்டாகவும் ஆகிவிட்ட
அந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை!
~oOo~
2. ச.முகுந்தன்
‘வேட்டுக் கோதினைப் போல நிறத்தவள்
வெட்கத்தில் ‘பரா’ லைற்றாய் ஒளிர்பவள்
றோட்டுச் சோதனைச் சாவடி போலவென்
இரவுத் தூக்கப் பயணம் தடுப்பவள்
காட்டிக் காட்டி முகத்தை மறைப்பதில்
கண்ட தீர்வுப் பொதியினைப் போன்றவள்
வீட்டைத் தேடிப் பிடித்து என்னிலை
எஃகுக் கம்பியே சொல்லிவா சீக்கிரம்.’
– ‘20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ :: இலங்கை பூபாலசிங்கம் புத்தக சாலையின் வெளியீடு
வேட்டுக் கோது & உபயோகமற்றுப்போன துப்பாக்கி ரவை; ‘பரா’ லைற்றாய் & எதிரிகளைத் தேடத் தற்காலிகமாக விண்ணில் ஏவப்படும் பிரகாசமான விளக்கு போல; தீர்வுப் பொதி & இருவருக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு
~oOo~
3. பூமா ஈஸ்வரமூர்த்தி
ஒருதரம் காதல்
என்னை மீட்டுத் தந்தது
ஒருதரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத் தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது
நான்தான் அடிக்கடி
தொலைந்துவிடுகிறேன்!
~oOo~
4. ‘என் வீடு’ (தொகுப்பு: ‘யாருமற்ற நிழல்’) :: தேவதச்சன்
என் வீடு மிகச் சிறிய வீடு
ஆனாலும்,
வீடு திரும்ப விரும்புகிறேன்!
***
ஒவ்வொரு வீடும் நிரந்தரச்
சூரியனை
ஜன்னல் வழியே அழைக்கிறது
அதை கைக்குழந்தையைப் போல்
படுக்கவைத்துக் கொள்கிறது
தினமும் படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
பார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை!
~oOo~
5. ‘நதிக் காட்சி’ (தொகுப்பு: ‘பூமியை வாசிக்கும் சிறுமி’) :: சுகுமாரன்
கரையதுக்கிக்
கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழை நீர்
அதில்
சிலிர்த்துக்கொண்டு
இருக்கிறது
நிலவு
பூமிக்கு ஒளி பொழிந்த
கருணையில்!
~oOo~
6. மார்கன்
பிளாட்பாரத்தில்
பலூன் விற்பவனுடன்
ஒட்டிக்கொண்டு
பாடப் புத்தகம்
படிக்கும் சிறுமி!
~oOo~
7. ‘அமர் – நிகழ்ச்சி நிரல்’ :: விக்ரமாதித்யன்
கையில் காசு இருந்தால்
டாஸ்மாக் போவான்
இல்லையென்றால் செய்யது பீடி
பிடித்துக்கொண்டிருப்பான்
தோன்றினால் மட்டும்
கவிதை எழுதுவான்!
~oOo~
8. வில்லக விரலினார் (குறுந்தொகை 370) – வில்லும் விரலும்
பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டு வாய்திறக்கும் தண்துறை ஊரனோடு
இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
நல்லகம் சேரின் ஒருமருங்கினமே
(பொய்கையில் ஆம்பல் மலர்மொட்டுகளை வண்டுகள் திறக்கும் துறையூர்க்காரனோடு உட்கார்ந்திருக்கும்போது இருவராக இருப்போம். படுத்துக்கொண்டால் வில்லைப் பிடித்த விரல்களைப் போல அவன் உடலைக் கட்டிக்கொண்டு ஒருவராவோம்.)
~oOo~
9. ஒற்றைச் சாட்சி (தொகுப்பு: அவளை மொழிபெயர்த்தல்) :: சுகிர்தராணி
சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றை சாட்சியாய்!